உடையும் சிலை, வெடிக்கும் வன்முறை !

மார்ச் 5-ம் தேதி தெற்கு திரிபுராவின் பெலோனியா நகரில் அமைந்திருந்த ரஷ்ய புரட்சியாளர் தோழர் லெனின் உருவச்சிலை பாஜகவின் ஆதரவாளர்களால் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் வெற்றியின் அடையாளமாக இச்சிலை நிறுவப்பட்டது. அதே நாளில் திரிபுராவில் சப்ரும் நகரில் இருந்த மற்றொரு லெனின் சிலையும் உடைக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மீது கொண்ட வெறுப்புணர்வால் லெனின் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக ஆதரவாளர்கள் பலரும் ஆதரவு அளித்து கருத்து தெரிவித்தனர். இதற்கு நாடெங்கிலும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தருணத்தில், பாஜக கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்து தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் “ லெனின் யார் ? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்… இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமியின் சிலை ” என்று மிரட்டும் நோக்கத்தில் பதிவிடப்பட்டது.
ஹெச்.ராஜாவின் இத்தகைய பதிவு காட்டுத் தீயாய் பரவி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அப்பதிவு சிறிது நேரத்தில் நீக்கப்பட்டது. மேலும், சமூக வலைத்தளத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறிய ஹெச்.ராஜாவிற்கு எதிராக கருத்துக்களும், வன்முறை தூண்டும் விதத்தில் பேசியதற்காக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கைகளும் எழுந்தன.
இதையறிந்து, தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜாவின் பதிவு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் பேட்டி அளித்திருந்தார்.
பாஜக கட்சியின் நகரச் செயலாளர் முத்துராமன் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தின் முன்பு இருந்த பெரியாரின் சிலையை இரவில் சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்டவர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதன் பின் முத்து ராமன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், வேலூர், கிருஷ்ணகிரி பகுதியில் அமைத்துள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 7-ம் தேதி ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது மற்றும் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்ற பதிவை எனது அனுமதி இல்லாமல் என் முகநூல் பக்க அட்மின் பதிவிட்டுள்ளார். அதை நான் அறிந்து நீக்கியுள்ளேன்.
எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே, இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதயப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று மன்னிப்பு கோரினார்.
எனினும், அவரது பதிவில் மன்னிப்பு கேட்பது மட்டுமின்றி, தேசியம் மற்றும் தெய்வீகம் காக்கும் பணியில் ஈடுபட்ட முத்துராமலிங்க தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று தேவரின் பெயரையும் சம்பந்தமின்றி இணைத்து பதிவிட்டுள்ளார்.
நாட்டில் சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்த பிரதமர் மோடி, இது போன்ற சம்பவங்களால் பொது மக்களின் அமைதியை சீர்குலைப்பவர்களின் மீது தகுந்த நடவடிக்கை வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிடம் உத்தரவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லெனின், பெரியார் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நேரத்தில், உத்திரப்பிரதேச மீரட் பகுதியில் நேற்று இரவு மர்ம நபர்கள் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் மீரட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தொழிலாளர் வர்க்கம் உயர வேண்டும் என்னும் சித்தாந்தம் கொண்ட லெனின், ஒடுக்கப்பட்ட மக்களும் சமூதாயத்தில் உயர்ந்த நிலை அடைய வேண்டும் என்ற பெரியார் மற்றும் சாதி பாகுப்பாடு ஒழிய வேண்டும் என்ற அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டது, இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி வருவதை பிரதிபலிக்கின்றது.
சிலை உடைப்பு சம்பவம் இன்று மட்டும் நடப்பது அல்ல.. இந்த சிலை உடைப்பு என்பது வரலாற்று ரீதியாக நடக்கும் ஒரு பெரிய வன்முறை. எப்போது ஒரு அரசன் இன்னொரு அரசனை வென்றாலும் முதலில் கை வைக்கப்படுவது கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இன்னும் பிற சிலை, சிற்பங்கள் தான். அப்படி வரலாற்றுரீதியாக தொடர்ந்து சூறையாடப்பட்ட மிகப்பெரிய வளம் இந்த சிலை. சிலை மட்டுமல்ல பெரிய சிற்பங்கள் போன்றவையும் தாக்குதலுக்கு உட்படுவது வரலாற்றுரீதியாக நடக்கிற ஒரு நிகழ்வு. அரசியல்ரீதியாக தற்காலத்தில் நடக்கிற சம்பவங்கள், ஒரு சிலையை தாக்கி விட்டால் அந்த தலைவரின் சாதியை ஒட்டி ஒரு தாக்குதல் நடந்ததாக இருக்கும். அந்த தலைவரின் சாதியாளர்களை அல்லது அந்த தலைவரை சண்டைக்கு இழுக்கும் செயல், இருவேறு சாதி மோதலை உருவாக்க ஏற்படுத்த உருவாகிற செயலாக மாறிவிடுகிறது. தொடர்ந்து தலைவர்களை சாதியாக பார்க்கின்ற ஒரு பெரும் குழப்பமான மனநிலை இன்றைய மக்களுக்கு இருக்கிறது.
தென் மாவட்டங்களில் எல்லாம் சாதியை வைத்து கலவரங்கள் நடக்கும் போதெல்லாம் தலைவர்கள் தாக்கப்படுவதும், தலைவர்கள் சிலை தாக்கப்படுவதும் மற்றும் தலைவர்கள் சிலை எல்லாம் தாக்கப்படும் போது சாதி கலவரங்கள் மூழ்வதும் வழக்கமாகவே இருந்திருக்கிறது. இதனால், பலர் உயிரிழந்துள்ளனர், பலர் உடமைகளை இழந்துள்ளனர். சாதி கலவரங்களை தூண்டுவதற்கும், மதக் கலவரங்களை தூண்டுவதற்கும் இந்த சிலை உடைப்பு ஒரு ஆயுதமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் கடுமையாக சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சூழலில், சிலை உடைப்பு சம்பவங்கள் எல்லாம் குறைந்து கொண்டு வந்த சூழலில் அதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டது வட மாநிலங்களில் நடந்த லெனின் சிலை ஆகட்டும், அதை தமிழகத்திற்கு அழைத்து வந்தது திரு. ஹெச்.ராஜா செய்த செயல். அதை அவர் மறுத்து, மன்னிப்பு கேட்டு இருந்தாலும், அதன் தொடர்ச்சி இன்று பல இடங்களில் நடந்திருக்கிறது. இன்றைய சூழலில் உத்திரப்பிரதேசத்திலும் அம்பேத்கர் அவர்களின் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர்கள் மிகக்கவனமாக கையாண்டிருக்க வேண்டும், பிரதமரே கண்டனம் தெரிவித்திருந்தாலும், அச்செயலை செய்தவர்கள் அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விட்டாரா என்கிற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால், இதை செய்தவர்கள் எல்லாம் அவரின் கட்சியை சேர்ந்தவர்களே. யாரோ செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து போல் அல்லாமல், தனது கட்சியை சேர்ந்தவர்கள் செய்திருப்பதால் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவது மாதிரியான நடவடிக்கையின்றி, வன்முறையை தூண்டுகின்ற பிரிவில் இதை எடுத்து நடத்தினால் ஒழிய இவ்வாறான வன்முறைகளை தடுப்பதற்கு வேறுவழியில்லை. ஒரு மறந்த கலச்சாரத்தை மீண்டும் புகுத்துவது போன்று அமைந்து விடாதா என்கிற பொறுப்பை ஒவ்வொரு நேரத்திலும் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்கிற நினைப்பு ஒவ்வொருவரின் மனதிலும் வர வேண்டும்.
சிலை உடைப்பு போன்ற சம்பவங்கள் பெரும் வன்முறைக்கு வித்தாக அமைத்து விடுகிறது. ஒரு சிலை உடைப்பு என்பது அந்த சிலையோடு முடிந்துவிடவில்லை என்கிற சூழலை புரிந்து கொண்டு மக்களும் பொறுப்புணர்வோடு பேசுதல், எழுதுதல் நலம்.