This article is from Aug 17, 2019

மின்னல் அடிக்கும் பொழுது காரில் இருப்பது ஆபத்தா ?|செய்ய வேண்டியவை என்ன ?

செல்போன் பேசும் பொழுது மின்னல் தாக்கியதில் ஒருவர் இறந்துள்ளார் என்ற ஆடியோ உடன் கருகிய நிலையில் இருக்கும் உடல் மற்றும் காரின் புகைப்படங்களும் வாட்ஸ் அப் குரூப்-களில் சில தினங்களுக்கு முன்பு வைரலாகியது. ஆனால், அவை வெவ்வேறு சம்பவங்கள் என விரிவான செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : போன் பேசும் பொழுது மின்னல் தாக்கி ஒருவர் இறந்ததாக வாட்ஸ் அப் ஃபார்வர்டு !

இருப்பினும், மக்கள் மத்தியில் ஃபார்வர்டு செய்திகளின் தாக்கம் இருக்கவே செய்கிறது. உதாரணமாக, காரில் மின்னல் தாக்கியதால் உடல் கருகி இறந்து உள்ளார் என தவறானப் புகைப்படங்கள் பகிரப்பட்டன. சரி, உண்மையில் காரில் இருக்கும் பொழுது மின்னல் தாக்குமா என்ற கேள்வி இங்குள்ளது.

ஃபாரடே கூண்டு(Faraday cage) :

பள்ளி பாடத்தில் ஃபாரடே விதிகள் பற்றி படித்து இருப்பது நியாபகத்திற்கு வருகிறது. ஃபாரடே கூண்டு அல்லது ஃபாரடே கவசம் என்பது மின்காந்த புலங்களை (electric magnetic field) தடுக்க பயன்படுத்து ஒரு உறை அல்லது அடைப்பு எனலாம். ஒரு ஃபாரடே கவசமானது கடத்தும் பொருளின் தொடர்ச்சியான மறைப்பால் உருவாக்கப்படலாம் எனக் கூறுகின்றன.

மழைக் காலங்களில் இடி, மின்னலின் தாக்கம் அதிகம் இருக்கும் பொழுது அவற்றில் இருந்து தற்காத்து கொள்ள பல பாதுகாப்பு நடவடிக்கையை வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் உலோகத்தால் முழுவதும் மறைக்கப்பட்ட கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் இருப்பதும் ஒன்று.

இதுபோன்ற உலோக வாகனங்களை மின்னல் தாக்கும் பொழுது, அந்த வாகனத்தின் அமைப்பானது ஃபாரடே கவசமாக செயல்பட்டு வெளியில் இருந்து வரும் நிலை மின்னேற்றத்தில் இருந்து பாதுகாக்கும்.எனினும், சில வாகனங்களின் மேற்பரப்பு உலோகத்தால் உருவாக்கப்படுவதில்லை. அவற்றிற்கு இந்த விதிகள் பொருந்தாது.

உதாரணமாக, வானில் பறக்கும் விமானம் கூட பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக செல்கிறது. அதனை கீழே உள்ள வீடியோவில் விவரித்து உள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவது சரியா ?

2018-ல் ரமேஷ் என்பவர் அரக்கோணத்தில் உள்ள தன் நண்பரின் மீன் பண்ணையை பார்க்க சென்ற பொழுது மின்னல் வெட்டுவதை செல்போனில் புகைப்படங்கள் எடுக்கும் பொழுது மின்னல் தாக்கி உயிரிழந்தார் என செய்திகளில் வெளியாகி இருக்கிறது. மின்னல் தாக்கி உயிரிழந்த நபரின் செல்போனின் பின் பகுதி முழுவதும் உருகியோ அல்லது வெடித்தோ போகவில்லை. அதன் புகைப்படத்தை செய்தியில் வெளியிட்டு இருந்தனர்.

மின்னல் ஆனது பூமியை அடைவதற்கு உலோகங்கள் வழியாக பாயும் என்றாலும் அவற்றின் இலக்கானது பெரிய கட்டிடங்கள், கோபுரங்கள், திறந்தவெளி நிலப்பரப்பு உள்ளிட்டவையாக இருக்கும். செல்போன் மூலம் மின்னலை புகைப்படம் எடுத்து உயிரிழந்தவரும் திறந்தவெளியில் இருந்திருக்கக்கூடும். மனிதர்கள் மின்னல் தாக்கி இருப்பது வெட்டவெளிப் பகுதியில் மட்டுமே. வீட்டிற்குள் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதில் அச்சமில்லை.

ஆனால், லேண்ட் லைன் போன்கள் பயன்படுத்துவது ஆபத்தே. மின்னல் தாக்கம் அதிகம் இருக்கும் பொழுது தொலைபேசிகள் அருகில் இல்லாமல் தள்ளி இருத்தல் நல்லது. உயரமான கட்டிடங்களை தாக்கும் மின்னல் ஆனது நிலத்தை அடைவதற்கு கட்டிடத்தின் மின்சார கம்பிகள் வழித்தடமாக அமையும். ஆகையால், அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்டு உள்ள தொலைபேசி மோசமான மின் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

மின்னலின் போது செய்ய வேண்டியவை :

  • கட்டிடங்களில் ஒதுங்கி இருக்க வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • உயர்ந்த மரங்களின் அருகே ஒதுங்குவது ஆபத்தானது. மரங்கள் ஒதுங்குவதற்கு சிறந்த இடம் அல்ல.
  • மின்சாரத்தை கடத்துபவற்றில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. ரேடியேட்டர்கள், உலோக குழாய்கள் , இரும்பு சார்ந்தவற்றின் அருகில் இருக்கக்கூடாது. நீச்சல் குளம், நீர்நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும்.
  • தொட்டிகள், தொலைபேசிகளில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். செல்போன் தவிர்ப்பது நல்லது. இரும்பு கம்பி பொருத்தப்பட்ட குடையை பயன்படுத்த வேண்டாம். உயர்அழுத்த மின்சார டவர்கள் அருகே செல்ல வேண்டாம்
  • கொடிக்கம்பம், ஆண்டனா, டவர்கள், திறந்தவெளி மைதானம், இரும்பு காம்பிலான வேலி அமைப்புகள் இருக்கும் பகுதியில் நிற்க வேண்டாம். சைக்கிள், மோட்டார் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

மேற்க்கூறிய பாதுகாப்பு அறிகுறிகள் அனைத்து தமிழ்நாடு நிர்வாகம், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை. மின்னல் தாக்கும் நேரங்களில் சாகசங்கள் செய்வதை தவிர்த்து உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். வதந்திகளை தவிருங்கள்.

Proof : 

What Happens When Lightning Hits Your Car?

When Lightning Strikes Your Airplane…

Please complete the required fields.




Back to top button
loader