ஸ்மோக் பிஸ்கட் உருவாக்கப் பயன்படுத்தப்படும் திரவ நைட்ரஜனை உட்கொண்டால் என்னவாகும்?

சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகா மாநிலம் தாவணக்கரை பகுதியில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் மூச்சு விடச் சிரமப்பட்டு மயங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அனைவரையும் கவரக் கூடிய வகையில் புகை வரக்கூடிய உணவுப் பொருட்கள் பற்றி பல்வேறு விஷயங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இத்தகைய உணவுகளை உண்ணலாமா? கூடாதா? 

திரவ நைட்ரஜன்:

ஸ்மோக் பீடா, ஸ்மோக் பிஸ்கட், ஸ்மோக் சாக்லேட் எனக் புகை வரக்கூடிய உணவுப் பொருட்கள் சமீப நாட்களில் பல இடங்களில் காண முடிகிறது. இப்படி உணவுப் பொருட்களில் புகை வரத் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. 

நமது வளிமண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன் வாயு உள்ளது. நாம் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள அனைத்து வாயுக்களும் (நைட்ரஜன் உட்பட) நமது நுரையீரலுக்குள் செல்கிறது. அதில் ஆக்ஸிஜனை மட்டும் நமது உடல் எடுத்துக் கொண்டு பிற வாயுக்களை மீண்டும் வெளியேற்றிவிடுகிறது. 

இந்த நைட்ரஜன் வாயு கிரையோஜெனிக் முறையில் திரவமாக மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்பட்ட திரவ நைட்ரஜனின் வெப்பநிலை −196 டிகிரி செல்சியஸ் (− 320 டிகிரி பாரன்ஹீட்). நாம் பொதுவாகப் பயன்படுத்தக் கூடிய ஐஸ் கட்டியின் உறைநிலை என்பது 0 டிகிரி செல்சியஸிற்கு (32 டிகிரி பாரன்ஹீட்) குறைவாக இருக்கும். அப்படியென்றால் திரவ நைட்ரஜன் எந்த அளவிற்குக் குளிர்ச்சியாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள். 

திரவ நைட்ரஜன் உட்கொண்டால் பிரச்சனை வருமா?

திரவ நைட்ரஜன் ஒரு உணவுப் பொருள் கிடையாது. மிகக் குறைவான வெப்பநிலை கொண்டுள்ள காரணத்தினால் உணவுப் பொருட்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். குறிப்பாக இறைச்சி, மீன் போன்றவற்றைப் பதப்படுத்த இது பயன்படுகிறது. நைட்ரஜன் வாயு எதனுடனும் எதிர்வினை புரியாது என்பதாலும் நச்சுத் தன்மை கிடையாது என்பதாலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிப் பயன்படுத்துவதால் எந்த ஆபத்தும் கிடையாது.

திரவ நைட்ரஜன் சாதாரண வெப்பநிலையில் ஆவியாகிவிடும். அப்படி திரவ நைட்ரஜனில் முக்கி எடுக்கப்பட்ட உணவுப் பொருளில் உள்ள நைட்ரஜன் ஆவியாகும் போதுதான் வெள்ளை நிறத்திலான புகையை நாம் பார்க்கிறோம். 

இந்த திரவ நைட்ரஜன் நேரடியாக நமது உடலில் படும் போது சில வினாடிகளிலேயே நமது தோலில் உள்ள திசுக்கள் உறைய ஆரம்பித்து விடும். வயிற்றுக்குள் சென்றாலும் இதே நிலைதான். 

2017ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் திரவ நைட்ரஜன் கலந்த மது அருந்தியுள்ளார். திரவ நைட்ரஜன் முழுமையாக ஆவியாவதற்கு முன்னர் அவர் அந்த மதுவை அருந்தியதால் அவரது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அறுவை சிகிச்சைக்கு பிறகே அவர் நலமடைந்துள்ளார். 

இதேபோன்று தான் கர்நாடகாவில் சிறுவனும் திரவ நைட்ரஜனில் முக்கி எடுக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிடும் போதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திரவ நைட்ரஜன் ஆவியாகாமல் உள்ள உணவைச் சாப்பிடுவது என்பது ஆபத்தானதுதான்.

ஆய்வுக்கு உத்தரவு : 

கர்நாடகாவில் சிறுவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு மயக்கமடைந்த வீடியோ வைரலான நிலையில், சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. 

ஹரியானாவில் தொழிலதிபருக்கு ஏற்பட்ட நிலையைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் திரவ நைட்ரஜன் மது மற்றும் உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.

திரவ நைட்ரஜன் கலந்த உணவைச் சாப்பிட்டு வாய் அல்லது மூக்கு வழியாகப் புகை விடுவதை வீடியோ எடுத்து ‘டிராகன்ஸ் பிரீத்’ எனப் பதிவிடுவது பிரபலமானது. எனவே இதில் உள்ள பிரச்சனைகள் குறித்து இந்தோனேசியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் அமெரிக்காவும் 2018ம் ஆண்டு இது பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் திரவ நைட்ரஜனை உணவுப் பொருள் மூலம் உட்கொள்வதைத் தடை செய்ய வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க : பஞ்சுமிட்டாய் தடை : இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் செயற்கை நிறமிகள்.. ஓர் அதிர்ச்சிப் பார்வை !

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader