தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை மது கடை திறப்பதில் இரட்டை நிலைபாடு !

கொரோனா காலத்தில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என அனைத்து மாநிலங்களிலும் கண்டிக்கும் எதிர்கட்சிகள் தான் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கவும் செய்கின்றன. அவை அரசியல் எதிர்ப்பே தவிர அவற்றால் மக்களுக்கு பயன் ஏதுமில்லை.
பசி, பட்டினி, ஊட்டச்சத்தின்மை போன்ற மக்களின் உணவு பிரச்சினைகளை கூட பூர்த்தி செய்ய கடினமான இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் ஊரடங்கு என்பது கொடுமையான நிலை. ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாமல், தன் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கும் குடும்பங்களே இங்கு ஏராளம். இந்தியாவின் பெரும்பான்மை சமுதாயம் படும் இந்த துயரத்தை போக்கும் ஒரு மிகச்சிறிய முயற்சியாகவே ரூ.2000, ரூ.1000, இலவச அரிசி, பருப்பு என ஒன்றிய அரசும், பல மாநில அரசுகளும் வழங்கி வருகின்றன.
அப்படி வழங்கும் பணத்தையும் மதுக்கடையிலேயே செலவழித்துக் கொள்ளலாம் என வாய்ப்பை தருவது மக்கள் நலனுக்கான பணிபுரியும் எந்த அரசு செய்யும் ?
இது ஒரு புறம் இருக்க அனைத்து மாநிலங்களிலும் எதிர்கட்சிகள் மதுவை சுற்றி நடத்தி வரும் பாசாங்குத்தனமான அரசியல் இந்த மக்கள் நலன் பிரச்சனையை ஒரு கேலிக்கூத்தாக்குகிறது.
பஞ்சாப், தமிழ்நாடு போன்ற ஆட்சியில் அல்லாத மாநிலத்தில் மதுக்கடைகளை திறப்பதை விமர்சிக்கும் பாஜக கர்நாடகாவிலும், ஹரியானாவிலும், உத்தரப் பிரதேசத்திலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கிறது.
“மக்கள் ஆக்சிஜன்காக போராடும் சூழலில் மது பாட்டில்களை எல்லாம் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்வதா ” என காங்கிரஸின் மகளீர் அணி டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய, சத்தீஸ்கர் மாநிலத்தில் அதே வேலையை தான் செய்கிறது காங்கிரஸ் கட்சி.
“உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் போலி மதுவை(கள்ள சாராயம்) மக்கள் பருகுகின்றனர், அதற்காக மதுக்கடைகளை திறக்கிறோம்” என்பதை காரணமாக திமுக அரசும் மற்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் முன்னிறுத்தி வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு என தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் என தெரிந்தும், @mkstalin இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க? #குடிகெடுக்கும்_ஸ்டாலின் https://t.co/1pDPZf49e2
— AIADMK (@AIADMKOfficial) June 12, 2021
ஆனால், அப்போதைய அதிமுக அரசு மதுக்கடையை திறக்கையில், ” ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என தெரிந்தும், கொரோனா பரவியதில் #TASMAC-க்கு பெரும் பங்குண்டு என தெரிந்தும், இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்திருப்பது யார் குடியை கெடுக்க?” என முன்னால் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்த அதே வசனத்தை திரும்ப தற்போது பதிவு செய்து எதிர்வினை ஆற்றி ஆதாயம் தேடும் முனைப்பில் காட்டும் கவனத்தை விட எந்த கட்சியும் மக்களின் நலனில் காட்டவில்லை என தெளிவாக தெரிகிறது.
மேலும் படிக்க : இப்போ எதற்கு டாஸ்மாக்.. எழும் கண்டன குரல்கள் !
டாஸ்மாக் திறப்பை எதிர்க்கும் போது எதிர் கட்சியாக இருந்த திமுக, தற்போது திறக்க அனுமதிக்கிறது. முன்பு ஆளும் அரசாக இருந்து டாஸ்மாக்கை திறந்த அதிமுக தற்போது திமுகவை விமர்சனம் செய்கிறது.
கோவா, பாண்டிச்சேரி என தன் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்த யூனியன் பிரதேசத்திலும் ‘மது விற்பனை கொரோனா காலத்தில் அனுமதிக்க முடியாது’ என முடிவெடுத்து மற்ற கட்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பாஜக அரசு அங்கு அனுமதித்து விட்டு இங்கு போராடுவதை மக்கள் நலனாக எப்படி புரிந்துகொள்ள இயலும்.
கொரோனா பாதிப்பு தான் முன்பை விட சற்று குறைந்து இருக்கிறதே தவிர இரண்டு ஆண்டுகளாக அடிப்பட்டு போன மக்களின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதை உணராமல், “அங்கு கொரோனா பாதிப்பு அவ்வளவு இல்லை, இங்கு இவ்வளவு இருக்கிறது” , “முறையான பாதுகாப்போடு தான் விற்பனைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளோம்” என ஆளும் கட்சிகள் வாதிடுவது சப்பை கட்டுக்களே.
மதுக்கடைகளை திறப்பது அரசிற்கு வருமானம் என்பதை மக்களும் அறிந்ததே. அதேபோல், மதுக்கடைகள் திறப்பை வைத்து அரசியல் செய்யும் ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் செயல்களை மக்கள் அறிய வேண்டும். போலி மது, கள்ளச் சாராயம் அதிகரிக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். அதற்காக மட்டுமே மதுக்டைகளை திறப்பது ஏற்புடையது அல்ல. அவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களை காவல்துறை கொண்டு தடுக்க வேண்டும்.
பணத்தை மதுவுக்கு செலவு செய்வோரின் எண்ணிக்கையை விட இருக்கும் பணத்தை மதுவுக்காக மட்டுமே அதிகம் செலவு செய்யும் ஏழ்மை நிலை மக்களே நம் நாட்டில் அதிகம். மதுவில் இருந்தும், அதன் அரசியலில் இருந்தும் மக்களுக்கு எப்போது விடியல் பிறக்கும் எனத் தெரியவில்லை !
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.