தேசிய அறிவியல் தினம் இன்று ! அறிவியல் தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு இதோ !

1928ல் அறிவியல் அறிஞர் சர்.சி.வி.ராமனால் “ராமன் விளைவு” கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், 1986 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28 ஆம் தேதி, “தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. மேலும் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள் அறிவிக்கப்படும். அதன்படி, 2024 தேசிய அறிவியல் தினத்திற்கான கருப்பொருள், “வளர்ந்த இந்தியாவுக்கான உள்நாட்டு தொழில்நுட்பங்கள்” (Indigenous Technologies for Viksit Bharat) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அறிவியல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்ட வதந்திகளின் தொகுப்பு குறித்து இங்கு காணலாம்.

திருநள்ளாறில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

திருநள்ளாறு சனிபகவான் கோவிலை கடக்கும் போது நாசாவின் செயற்கைக்கோள்கள் மூன்று நிமிடங்கள் செயல் இழந்துள்ளது. 3 நிமிடங்களுக்கு பின் வழக்கம் போல் செயல்பட தொடங்கி உள்ளது. ஆனால் அந்த செயற்கைக்கோளில் எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை. இதனால் நாசாவே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது என்று கூறி செய்தி ஒன்று பல ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இச்செய்தி பற்றிய தகவல்கள் எதுவும் நாசாவின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. மேலும் எந்தவொரு தளத்திலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இது பொய் என இஸ்ரோவில் இயக்குனராக பணிபுரிந்த மயில்சாமி அண்ணாதுரையும் ஒரு குழுவினரை வைத்து பிரத்யேகமாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார்.

மேலும் படிக்க: திருநள்ளாறில் செயற்கைக்கோள்கள் 3 நிமிடங்கள் செயலிழந்ததா ?

சுவிட்சர்லாந்து அப்துல் கலாம் வருகையை அறிவியல் நாளாக அறிவித்ததா ?

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி ஏ.பி.ஜே அப்துல்கலாம் சுவிட்சர்லாந்துக்கு முதன் முதலாக வருகை தந்த நாள் தான், அங்கு அறிவியல் நாளாக கொண்டாடப்படுகிறது எனக் கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ செய்திகளும் வெளியிடப்படாத நிலையில், சுவிட்சர்லாந்து அரசு இணையதளமான “swissinfo.ch” என்ற இணையதளத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். அதில் 2016-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ” Kalam, not Modi, was the real rock star ” என்ற தலைப்பில் கலாமின் சுவிட்சர்லாந்து பயணம் குறித்த செய்தியை வெளியிட்டு இருந்தனர். அதில் தெளிவாக, “அவரது வருகையின் போது அறிவியல் ஒரு முக்கியமான கருப்பொருளாக இருந்தது, ஆனால் அத்தகைய நாள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் படிக்க: சுவிட்சர்லாந்து அப்துல் கலாம் வருகையை அறிவியல் நாளாக அறிவித்ததா ?

பால் அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது என குடியரசுத் துணைத்தலைவர் பேசினாரா ?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியது குறித்து சன் நியூஸ் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ” நமது நாட்டின் சிறப்பு மிக்க சமஸ்கிருத மொழியில் உள்ள ‘ஓம்’, பால் அண்டத்தில் இருப்பதாக நாசா கண்டுபிடித்துள்ளது – சென்னையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேச்சு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை குமுதம் மற்றும் வேந்தர்செய்திகள் ஊடகமும் வெளியிட்டிருந்தனர்.

Twitter link | Archive link 

எனவே இது குறித்து ஆய்வு செய்ததில், “சமஸ்கிருதத்தின் வலிமையைப் பாருங்கள். ‘ஓம்’ என்ற வார்த்தை உள்ளது. உலகின் தலைசிறந்த நிறுவனமான நாசா ஒரு மொழியை மிகவும் முக்கியம் எனக் கருதுகிறார்கள். அது என்னவென்றால் சமஸ்கிருதம் தான்” என்று பதிலளித்திருந்தார். ஆனால் இதனை நியூஸ் ஊடகங்கள் தவறாகத் திரித்து வெளியிட்டுள்ளனர். மேலும் சமஸ்கிருதம் பற்றி நாசா கருதுவதாக அவர் பேசிய தகவல்களும் உண்மை அல்ல. நாசா சமஸ்கிருதம் குறித்து எந்த தகவல்களும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க: பால் அண்டத்தில் ஓம் என்ற ஒலி இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது என குடியரசுத் துணைத்தலைவர் பேசினாரா ?

நாசா நிலவில் மோனாலிசா உருவில் ஏலியனை கண்டுபிடித்ததா.. உண்மை என்ன ?

விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவிற்கு மனிதர்களை அனுப்பி மேற்கொண்ட ஆய்வின் போது பெண் வடிவில் மோனாலிசா எனும் ஏலியனை கண்டுபிடித்ததாக கூறி ஷாபூத்ரி யூடியூப் சேனலில் ஆர்ஜே ஷா என்பவர் பேசிய வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையைப் பெற்றது.

இது குறித்து தேடியதில், 1969-ல் நிலவில் தரையிறங்கிய அப்பல்லோ 11 பயணத்தின் போது விண்வெளி வீரர்களுக்கும், பணிகளை மேற்கொள்ளும் பிற குழுக்களும் இடையேயான நூற்றுக்கணக்கான ஆடியோ உரையாடல்களை பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட, 19,000 மணி நேர முழுமையான உரையாடலை ஆடியோவாக நாசா இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. இதில் பெண் வடிவில் மோனாலிசா எனும் ஏலியன் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த தகவல்களும் இல்லை. வைரலான வீடியோ போலியாக உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க: நாசா நிலவில் மோனாலிசா உருவில் ஏலியனை கண்டுபிடித்ததாக.. உண்மை என்ன ?

காஸ்மிக் கதிர்கள், நாசா எச்சரிக்கை எனப் பரவிய பழைய புரளி :

இன்று இரவு செல்போன்கள் பயன்படுத்த வேண்டாம்! எச்சரிக்கை. உலக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை. இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் பூமிக்கு வெகு நெருக்கமாக கடப்பதனால் இன்றிரவு 12.30 தொடக்கம் 3.30 வரை உங்கள் செல்போன்களை off செய்து வையுங்கள் என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது .

இது குறித்து தேடியதில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இது சமூக வலைதளங்களில் சுற்றி வருவதை அறிய முடிந்தது. இது முழுக்க முழுக்க வதந்தி மட்டுமே.

மேலும் படிக்க: காஸ்மிக் கதிர்கள், நாசா எச்சரிக்கை என பழைய புரளியை தூசி தட்டி பரவல் !

ஊடகங்களே போலிச் செய்தி.. சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக வதந்தி :

சூரியனின் மேற்பரப்பிலிருந்து ஒரு பெரிய பகுதி உடைந்து, அது அதனுடைய வட துருவப் பகுதியில் ஒரு பெரும் புயலைப் போல் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் வட துருவத்தின் மேல் நெருப்பு சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்க, பூமிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில், விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறி செய்தி ஒன்று ஊடகங்களில் பரவியது.

Twitter link | Archive link 

சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகப் பரவும் செய்திகள் குறித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் தேடுகையில், இது குறித்த பதிவுகள் ஏதும் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ”சூரியனின் துருவ சுழல்” பற்றிய பதிவு ஊடகங்களில் ” சூரியனில் ஒரு பகுதி உடைந்ததாக ” தவறாக மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க: ஊடகங்களே போலிச் செய்தி.. சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக வதந்தி !

நிலவில் கால் பதித்த ஃபஸ் அல்ட்ரின் ஏலியனைக் கண்டதாக கூறினாரா ?

ஃபஸ் அல்ட்ரின் நிலவில் கால் பதித்த இரண்டாவது நபர், நிலவில் இருந்து ஏலியன்களை பார்த்ததாகவும், அதனை எதிர்க்கொண்டதாகவும் தற்போது வரை நாசாவிற்கும், உலக மக்களுக்கும் கூறி வருகிறார் என்று செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இந்த சர்ச்சை பற்றி பதில் அளித்த ஃபஸ் அல்ட்ரின் செய்தித்தொடர்பாளர், ஃபஸ் அல்ட்ரின் UFO-ஐ கண்டதாக எங்கும் கூறவே இல்லை. அவர் உண்மை கண்டறிதல் சோதனையில் உட்படுத்தப்பட்டார் எனக் கூறுவதெல்லாம் பொய். செய்தி ஊடகங்கள் தவறாக புரிந்துக் கொண்டு இவ்வாறு வெளியிட்டிருக்கலாம். அவர் தன் வாழ்நாளில் ஒருமுறை கூட UFO-வை பார்த்தாக கூறவில்லை”  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நிலவில் கால் பதித்த ஃபஸ் அல்ட்ரின் ஏலியனைக் கண்டதாக கூறினாரா ?

NASA-வின் விண்கலத்தில் தமிழ் மொழியில் ஒலிப்பதிவு இருந்ததா ?

நாசா விண்வெளி ஆய்வு மையம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய சர்வேயர் விண்கலத்தில் தமிழில் பேசப்பட்ட ஆடியோ ஒலிப்பதிவு ஒன்றையும் சேர்த்து அனுப்பியதாம். இது வேற்றுக்கிரகவாசிகளுக்கு செய்தி அனுப்பும் திட்டம் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இது குறித்து தேடியதில், Interstellar space-க்கு நாசா செலுத்திய விண்கலத்தில் தமிழ் மொழி இல்லை. நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் “Voyager“ பற்றிய தகவலிலும் தமிழ் மொழி குறிப்புகள் இடம்பெறவில்லை. தவறான தகவலை ஓர் கதையாக சித்தரித்து அச்சு பதிப்பில் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க: NASA-வின் விண்கலத்தில் தமிழ் மொழியில் ஒலிப்பதிவு இருந்ததா ?

வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை, மிளகாய் கட்டுவதற்கு அறிவியல் காரணம் இருக்கா ?

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது என்று கூறி செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதை அறிந்து இருப்போம். சிட்ரோனிக் அமில்கா எனும் அமிலம் இருக்கிறதா என பற்றி தேடினோம் . ஆனால், தேடலில் அத்தகைய அமிலங்கள் குறித்து ஏதும் தகவல்கள் இல்லை. அடுத்ததாக, மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரம் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றனர். ஆனால், அது குறித்த தரவுகளும் தேடலில் கிடைக்கவில்லை. எனவே இந்த தகவல்கள் ஆதாரமற்றவை.

மேலும் படிக்க: வாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை, மிளகாய் கட்டுவதற்கு அறிவியல் காரணம் இருக்கா ?

தஞ்சை பெரிய கோயில் மீது தோன்றிய வால் நட்சத்திரம், ஆட்சியாளருக்கு ஆபத்து எனப் பரவும் வதந்தி!

சமீபத்தில் “பல சிறப்புகளை கொண்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேல் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்படும்” என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. மேலும் இதனை OneIndia தமிழ் மற்றும் NewsTM தமிழ் போன்ற தமிழ் ஊடகங்களும் தங்களுடைய வலைதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் செய்தியாக வெளியிட்டிருந்தனர்.

OneIndia தமிழ் Link | Archive Link

இது குறித்து ஆய்வு செய்ததில், இது தஞ்சாவூரில் எடுக்கப்பட்டது அல்ல, திருவாரூர் தியாகராஜர் கோவிலில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. மேலும் வால்நட்சத்திரங்கள் அம்மோனியா, மீத்தேன், நீராவி போன்ற உறைந்த வாயுக்களால் ஆன வான் பொருட்கள் மட்டுமே. இவை நட்சத்திரங்கள் கிடையாது. இவை நாள் ஒன்றிற்கே பல முறை ஏற்படக்கூடியவை. எனவே வால்நட்சத்திரங்கள் பூமியில் தென்படும் நிகழ்வை, ஆட்சியாளர்களுக்கு ஆகாது என்று கூறி பரப்புவது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமற்ற தகவல்களே.

மேலும் படிக்க: தஞ்சை பெரிய கோயில் மீது தோன்றிய வால் நட்சத்திரம், ஆட்சியாளருக்கு ஆபத்து எனப் பரவும் வதந்தி!

கத்திரிக்காயோடு மல்லுக்கு நிற்கும் ஜக்கி.. அறிவியல் தெரியுமா ?

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பேசிய சில காணொளிகளில், “கத்தரிக்காயை தினமும் சாப்பிடும் பொழுது அதில் உள்ள citatine எனும் மூலக்கூறு மூளையின் Hypothalamus பகுதியை பாதிக்கும். Hypothalamus பாதிக்கப்பட்டால் நமது ‘முடிவெடுக்கும் திறன் (Decision making)’ குறையும். வளரும் குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் கத்தரிக்காய் தடை செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

எனவே இது குறித்து தேடியதில், ‘சிட்டடின் (citatine)’ (as pronounced by him) என்பது கத்தரிக்காயில் மட்டுமல்ல வேறு எந்த காய்கறியிலுமே கிடையாது. ஏனென்றால் அப்படியொரு வேதிப்பொருளே கிடையாது என்பதை அறிய முடிந்தது.

மேலும் படிக்க: கத்திரிக்காயோடு மல்லுக்கு நிற்கும் ஜக்கி.. அறிவியல் தெரியுமா ?

இதேபோல், “மெர்கூரியை (பாதரசம்) உட்கொள்ளும்போது pipe (esophagus எனப்படும் உணவுக்குழாயை ஜக்கி வாசுதேவ் அவ்வாறு குறிப்பிட்டு இருக்கலாம்) வழியாக செல்லாமல் அதன் அதிக எடை காரணமாக வயிற்றில் நேரடியாக சொட்டும். அதனால் அது உங்களை கொல்லலாம். ஆனால் மெர்கூரியை சித்தர்கள் கொடுக்கும் போது அது மருந்தாகின்றது. நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே மெர்கூரி தான்”. எனக் கூறி இருந்தார்.

ஆனால், நரம்பு மண்டலம், சிறுநீரகம் உட்பட பல உறுப்புகளை பாதிக்கும் மெர்கூரியை மருத்துவம் முதலான எந்த துறையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், சுற்றுச்சூழலில் மெர்கூரியின் அளவை குறைப்பதற்கான பல நடவடிக்கைகளை உலக சுகாதார மையமும் உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சந்திரயான்-3 எடுத்த நிலவு, செவ்வாய் கிரக புகைப்படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப் போவதாகப் பரவும் வதந்தி !

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால்(ISRO) சந்திரயான் 3 விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் நிலவிலிருந்து சந்திரயான் எடுத்த புகைப்படத்தில் நிலவின் அருகே செவ்வாய் கிரகமும் தெரிகிறது, இதுகுறித்து பஞ்சாங்கத்தில் முன்பே கூறப்பட்டு இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது.

Twitter link | Archive link

எனவே இது குறித்து தேடியதில், பரவக் கூடிய நிலவின் படத்துக்கும், சந்திரயான்-3 விண்கலத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை அறிய முடிந்தது. அது 2020ம் ஆண்டு எடுக்கப்பட்டது என நாசாவின் இணையதளத்திலேயே பதிவாகி இருக்கிறது.

மேலும் படிக்க: சந்திரயான்-3 எடுத்த நிலவு, செவ்வாய் கிரக புகைப்படம் பஞ்சாங்கத்துடன் ஒத்துப் போவதாகப் பரவும் வதந்தி !

இப்படி அறவியலை மையப்படுத்தி பல்வேறு போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறான பொய்களை யூடர்ன் தொடர்ந்து உடைந்து வருகிறது.

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader