எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றப் பள்ளிக்கல்வித்துறை !

தமிழ்நாட்டில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களை அரசு பள்ளிகளுடன் இணைத்து கடந்த 2019-20 கல்வியாண்டு முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக செய்திகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதில் அளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ” எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும், இதற்கான பொறுப்பு சமூக நலத்துறை வசம் ஒப்படைக்கப்படும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வந்த ஆசிரியர்கள் 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக மாற்றப்படுவதாக ” பேசி இருந்தார்.
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டு அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் என்றால், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள், மாணவர் சேர்க்கையை யார் நடத்துவார்கள் என பெரும் கேள்விகள் எழுந்தன.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் ஈர்க்கும் வண்ணம், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட LKG மற்றும் UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படுவது தொடர்பாக மாண்புமிகு @Anbil_Mahesh அவர்கள் கூறிய பதில் “இருக்கும் ஆனால் இருக்காது” என்பதைப் போல் உள்ளது! pic.twitter.com/8rJVdw0gea
— O Panneerselvam (@OfficeOfOPS) June 8, 2022
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு!(2/4)
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 7, 2022
அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் மூடும் அறிவிப்பை திரும்பப் பெறுக! – மக்கள் நீதி மய்யம் அறிக்கை
(09/06/2022) pic.twitter.com/PijdrgJaYT— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) June 9, 2022
மேலும், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அரசுகளிலேயே எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஜூன் 9-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஷ், ” எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நிரப்பப்படுவர் ” எனக் கூறியுள்ளதாக செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.