சமையல் எரிவாயு விபத்து நடந்தால் எவ்வளவு இழப்பீடு பெற முடியும் ?

சமையல் பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் (எல்.பி.ஜி) விலையில் ஏற்படும் ஏற்றம், இறக்கம் குறித்த பேச்சுக்களே சமூக வலைதளங்களில் அதிகம் உலாவுகிறது. ஆனால், எல்.பி.ஜி சிலிண்டர் கசிவால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர் பெறக்கூடிய இழப்பீடுத் தொகை குறித்து பெரிதாக அறிந்து இருக்கவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வும் இல்லை என்றே கூற வேண்டும்.
சிலிண்டர் விபத்து :
சிலிண்டர் விபத்து நிகழும் போது யார் மீது தவறு இருக்கிறது என்ற பழியே முதலில் வரும். மக்களின் கவனக்குறைவால் விபத்துக்கள் நிகழ்ந்து இருந்தாலும் கூட சில சமயங்களில் சிலிண்டரில் இருக்கும் கோளாறு காரணமாகவும் விபத்துக்கள் நிகழ்கின்றன. அப்படி விபத்துக்கள் ஏற்படும் போது வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர்கள், நிறுவனங்கள் என யார் மீது குற்றம் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால், விபத்துகளுக்கு எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கும், விநியோகஸ்தர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
எல்.பி.ஜி சிலிண்டரை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் எனத் தனித்தனியாக இன்சூரன்ஸ் ஏதும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்தியாவில் இருக்கும் எரிவாயு நிறுவனங்கள் ஆனது பொது பொறுப்புடைமை காப்பீடு செய்ய வேண்டும். இதன் மூலம், சிலிண்டரில் எரிபொருள் நிரப்பும் பகுதி, சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து, வாடிக்கையாளர் வீடு என எங்காவது சிலிண்டரில் விபத்து நிகழ்ந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் மூலம் இழப்பீடு பெற முடியும்.
2004-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் எனும் ஆட்டோ ஓட்டுநர் தன் வீட்டில் உள்ள சிலிண்டர்/ரெகுலேக்டரில் கசிவு இருப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பின்னர் சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு உண்டான தீ விபத்தில் அவரின் 2 வயது குழந்தை உயிரிழந்தது, அவரின் மனைவியும் கடுமையான பாதிக்கப்பட்டார். விபத்து தொடர்பாக ராகேஷ் குமார் தொடர்ந்த வழக்கில் விநியோகஸ்தர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய இருவருமே பொறுப்பு என தீர்ப்பு வெளியாகியது. இதுபோல், பல வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
இழப்பீடு தொகை :
ஒரு சில ஆண்டுகளில் சிலிண்டர் விபத்துக்கான இழப்பீட்டு தொகை உயர்ந்து வருகிறது. தற்போதைய தரவுகளின்படி, ஒரு சிலிண்டர் விபத்திற்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். உயிரிழப்பு நிகழும் போது ஒரு நபருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 6 லட்சம் ரூபாயும், சொத்துக்கள் சேதமடைந்து இருந்தால் 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக பெற முடியும். இந்த தொகையானது எரிவாயு நிறுவனங்கள் எடுக்கும் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
2019-ல் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திரா பிரதாப் அளித்த தகவலில், 2018-19ம் ஆண்டில் மொத்தம் 983 எல்.பி.ஜி விபத்துக்கள் நிகந்துள்ளன, 254 உயிரிழந்து உள்ளனர், இழப்பீட்டு தொகையாக 7.10 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற விபத்துகளில் இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டு உள்ளது. விபத்துக்கள் நிகழ்ந்தால் வாடிக்கையாளர் தங்களின் விநியோகஸ்தருக்கு எழுத்து வடிவில் தெரிவிக்க வேண்டும். எரிவாயு நிறுவனத்திற்கும், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிப்பது அவர்களின் பொறுப்பு. மருத்துவ செலவுகளுக்கான ரசீதுகள், மருத்துவ அறிக்கை ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இழப்பீட்டை பெறலாம் அல்லது இறப்பு ஏற்பட்டு இருந்தால் இறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டும். அதேபோல், வாடிக்கையாளரின் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அதை மதிப்பிட சர்வேயர் அனுப்பப்பட்டு இழப்புகள் கணக்கிடப்படும்.
சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதைக் கடைப்பிடித்து பாதுகாப்பான முறையில் சிலிண்டர்களை பயன்படுத்த வேண்டும். அதேபோல், அதற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். குறைபாடுகள் இருப்பின் விநியோகஸ்தருக்கு தெரிவிக்க வேண்டும். சிலிண்டர் கசிவால் விபத்துக்கள் ஏற்படுகையில் அதற்கான இழப்பீடுகள் பெறுவது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. இதைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அதைவிட பாதுகாப்பாக இருத்தல் மிக அவசியம்.
Links :
Producer & distributor both liable for LPG leak
Insurance for Gas Cylinder Blast Victims
Public Liability Insurance Policies for accidents involving LPG
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.