This article is from Jul 22, 2019

சமச்சீர் கல்வி தொடங்கி பள்ளிக் கழிப்பறை வரையில் மாரிதாஸ் கூறிய பொய்கள் !

திரு. மாரிதாஸ் தொடர்ந்து தவறான தரவுகள் அடிப்படையிலேயே வீடியோக்களில் பேசி வருகிறார் என்பதை முந்தைய புதிய கல்விக் கொள்கை குறித்த வீடியோவிலேயே தெரிவித்து இருப்போம். அதற்கு அடுத்ததாக அவர் வெளியிட்ட வீடியோவில், அரசு பள்ளியில் பெண்களுக்கு இருக்கும் கழிப்பறைகளின் எண்ணிக்கை தொடங்கி சமச்சீர் கல்வி வரையில் வெறும் பொய்களை அடிப்படையாக வைத்தே பேசி இருக்கிறார். அதனை ஆதாரத்துடன் இக்கட்டுரையில் காண்போம்.

2011 வரையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பெண்களுக்காக 35 சதவீதம் மட்டுமே கழிப்பறை வசதிகள் இருந்து உள்ளதாகவும், ஆனால், கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் அதன் எண்ணிக்கை 86% ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறதாக கூறியிருந்தார். இந்த தரவுகளை ASER ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளை சோதித்த பொழுது அது தவறு என அறிந்து கொள்ள முடிந்தது.

டிஜிட்டல் இந்தியாவின் அங்கமான Data.gov.in என்ற தளத்தில் பள்ளிகளில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் குறித்த 2012-2013 தகவலில், ” தமிழகத்தில் உள்ள பிரைமரி பள்ளிகளில் 93.95 சதவீதமும், அனைத்து பள்ளிகளிலும் 95.64 சதவீதமும் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர். அதில், 72.3 சதவீத கழிப்பறைகள் பயன்பாட்டில் இருப்பதாக தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர்.

மாரிதாஸ் ASER Sampling-ஐ அடிப்படையாக வைத்து பேசியதால் நேரடியாக ASER தளத்திற்கு சென்று பார்க்கையில், அவர்களின் ஆய்வானது இந்திய அளவில் 3,00,000 பேரிடம் நடந்தப்பட்டதாகவும், அதிலும் கிராமப்புறங்களில் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தனர். குறிப்பாக, இந்த ஆய்வு பள்ளிகளில் நடைபெறவில்லை, வீடுகளில் சென்று தகவல் சேகரிக்கப்பட்டு உள்ளன. ஆகையால், ASER ஆய்வு தகவல் வெறும் அரசு பள்ளியில் மட்டும் என மாரிதாஸ் கூறுவதில் உண்மையில்லை எனப் புலப்படுகிறது.

இங்கு தொடர்ந்து மாநில கல்வி முறை குறித்து விமர்சித்து வரும் அவருக்கு, ASER வெளியிட்ட மற்றொரு ஆய்வுத் தகவல் குறித்தும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்திய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் 2-ம் வகுப்பு புத்தகத்தை சரியாக படிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்ட ஆய்வில், 2008-ல் 53.1 சதவீதம் இருந்த இந்தியாவின் நிலை 2018-ல் 44.2 ஆக குறைந்து உள்ளது.

தமிழகத்தைச் பொறுத்தவரையில் 2008-ல் 26.2 சதவீதமாக இருந்த எண்ணிக்கை 2018-ல் 46.3 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. இங்கு புத்தகத்தை சரியாக வாசிக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதை இதில் இருந்து அறியலாம்.

இதேபோன்று, நவோதயா பள்ளிகள் வராத காரணத்தினால் 25,00,000 மாணவர்களின் எதிர்காலம் பாழாய் போனதாக முன்பு மாரிதாஸ் கூறி இருந்தார். ஆனால், எங்களின் முந்தைய வீடியோவில் நவோதயா பள்ளிகளில் தோராயமாக 2,500 மாணவர்கள் மட்டுமே படிக்க முடியும் என கூறியதையடுத்து, 2006-2011-ம் ஆண்டில் இருந்த சமச்சீர் கல்வியால் தான் 25,00,000 மாணவர்கள் பாதிப்படைந்ததாக தெரிவித்து இருந்தார் மாரிதாஸ்.

 

ஆனால், சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது 2010-ம் ஆண்டிற்கு பிறகு தான். 2011 கல்வியாண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி முறையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும், அரசு பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இப்படி உண்மைக்கு புறம்பான தரவுகளை கொண்டு தொடர்ந்து மாரிதாஸ் பேசி வருகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

Proof :

State-wise Percentage of Schools having Girls Toilet – DISE 2012-13:

SAMPLING IN ASER

Only 44.2% class 5 students in govt schools can read class 2 level text: ASER report

Uniform syllabus system to be implemented in Tamil Nadu: SC

Please complete the required fields.




Back to top button
loader