This article is from Feb 25, 2021

“குடுமி” திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றிய பதிப்பகம்.. இதோ படம் !

கடந்த சில நாட்களாக, Macmillan Publishers India Pvt. Ltd எனும் பதிப்பகம் வெளியிடும் சிபிஎஸ்இ 8-ம் வகுப்பு இந்தி புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதரை போல் சித்தரித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு அரசியல் கட்சியினர் தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது.

மேலும் படிக் : “குடுமி” வள்ளுவர் புகைப்படம் நீக்க முயற்சிப்போம் – பதிப்பாளர் தரப்பு விளக்கம் !

இதுதொடர்பாக, Macmillan Publishers-ஐ தொடர்பு கொண்டு பேசிய போது, ” சித்தரிக்கப்பட்ட படம் சர்ச்சையானது தொடர்பான தகவல் தற்போது எங்கள் கவனத்திற்கு வந்தது. இதை உடனடியாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறோம் ” என பதில் அளித்து இருந்தனர்.

இந்நிலையில், Macmillan Publishers வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி திருத்தப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்தை பயன்படுத்தி மாற்றி உள்ளனர்.

இதுகுறித்து, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்த வேணுகோபால் சர்மாவின் மகன் ஸ்ரீராம் சர்மா அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில்,  ”  Macmillan Publishers வெளியிட்ட திருவள்ளுவரின் உருவம் குறித்து மு.க.ஸ்டாலின், வைகோ, தயாநிதி மாறன், டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை தொகுத்து நீங்கள் வெளியிட்ட புகைப்படத்தால் மக்களின் உணர்வு பாதித்து உள்ளது என அவர்களுக்கு மெயில் அனுப்பி இருந்தோம்.

தங்கள் தவறை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை அனுப்புங்கள் உடனடியாக மாற்றி விடுகிறோம் என பதில் அளித்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் புகைப்படத்தை அனுப்பி வைத்தோம். உடனடியாக, திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி அந்த பக்கத்தையும் எங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

நிறுவனத்துடன் பேசிய போது, திருவள்ளுவரின் மனைவி வாசுகி அவருக்கு இறுதிவரை பணிவிடை செய்வதாக குறிப்பிட்டு உள்ளீர்கள். திருவள்ளுவரே வாழ்க்கை, துணை, நலம் எனக் கூறுகிறார். எங்குமே கணவனுக்கு பெண் அடிமையாக இருக்கனும், காலம் முழுக்க ரிஷி பத்தினிகள் போல் இருக்க வேண்டும் எனக் கூறவில்லை. இப்படி செய்வதும் தவறு. இது பாடம் மட்டும் அல்ல, எங்கள் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும். ஆகையால் இதனை கவனமாக கையாள வேண்டும் எனக் கூறி இருந்தேன் ” என பதில் அளித்து இருந்தார்.

திருவள்ளுவரின் சர்ச்சையான புகைப்படம் குறித்து எழுத்தாளர் உமாநாத் செல்வன் முதன் முதலில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். சமூக வலைதளவாசிகள், அரசியல் கட்சி தலைவர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்பினரால் திருவள்ளுவரின் சர்ச்சையான புகைப்படம் கவனம் பெற்றுள்ளது. தங்கள் தவறை ஏற்றுக் கொண்ட பதிப்பகம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தை மாற்றி உள்ளது.

Please complete the required fields.




Back to top button
loader