This article is from Apr 07, 2022

மதுரை எய்ம்ஸ் செங்கல் பற்றி ஹெச்.ராஜா போட்ட ட்வீட்.. உண்மை என்ன ?

தமிழ்நாட்டின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என்கிற கேள்வி இன்று வரை தொடர்கிறது. இந்த விவகாரத்தை கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூட திமுகவினர் கையில் எடுத்தனர். உதயநிதி ஸ்டாலின் தன் பிரச்சாரத்தில் செங்கலை காண்பித்து மதுரை எய்ம்ஸ் எனப் பேசியது வைரலாகியது.

Twitter link | Archive link 

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ” எய்ம்ஸ் எங்கு செங்கலோட சுத்திக் கொண்டிருந்த நபர் எங்கே ? ” என மதுரை எய்ம்ஸ் வரவேற்கிறது மற்றும் மாணவர்கள் அமர்ந்து இருக்கும் இரு புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூரில் ரூ.1264 கோடி ரூபாய் மதிப்பில் 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் முடிவடைய கால தாமதம் ஆகின்றன. இருப்பினும், எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், 2022 நிதியாண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 50 மாணவர்களுக்கும் முதலாம் ஆண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக நடைபெறும் என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது.

அதன்படி, மதுரை எய்ம்ஸ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் 5-வது மாடியில் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 4-ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்கள் வகுப்புகளை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல் இயக்குனர் அனுமந்தராவ் கூறுகையில், ” மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடம் இன்னும் 2 ஆண்டுகளில் தயாராகி விடும். அதுவரை காத்திருக்காமல் 2 ஆண்டுகளுக்கான வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ் குறித்து ஹெச்.ராஜாவின் ட்வீட் பதிவிற்கு அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், ” மதுரை எய்ம்ஸ் இன்னும் கட்டப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில், வேறு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இப்பவும் அதிகமாக அல்லது குறைவான செங்கல் நிலையில் மட்டுமே ” இருப்பதாக பதில் அளித்து இருக்கிறார்.

மதுரை எய்ம்ஸ் கல்லூரி மருத்துவமனையின் பணிகள் இன்னும் முடியவில்லை. அதற்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகக்கூடும் என எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பிலேயே கூறப்பட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடியும்வரை தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

Please complete the required fields.




Back to top button
loader