This article is from Mar 28, 2019

தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு|கடமையை செய்யாத டி.எஸ்.பிக்கு சிறைத்தண்டனை.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தற்போதைய  தலைவரான மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி ஆகிய இருவரில் யார் கலைஞரின் அடுத்த அரசியல் வாரிசு என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை 2007 ஆம் ஆண்டு மே 9-ம் தேதி தினகரன் நாளிதழ் வெளியிட்டது.

தினகரன் நாளிதழ் கலைஞரின் பேரன் கலாநிதி மாறனின் சன் டி.வி குழுமத்தின் அங்கமாகும். கலைஞரின் அரசியல் வாரிசு யார் என்ற கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருப்பதாக முடிவுகளை வெளியிட்டது தினகரன் நாளிதழ்.

தினகரன் நாளிதழின் கருத்துக்கணிப்பு அழகிரி தரப்பினருக்கு கோபத்தை தூண்டவே 2007 மே மாதம் மு.க.அழகிரியின் ஆதரவாளரும், திமுக தொண்டரணி அமைப்பாளருமான அட்டாக் பாண்டி தலைமையிலான குண்டர்கள் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகத்தை தாக்கினர். பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி, பெட்ரோல் குண்டுகளை வீசியதில் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களாகப்  பணியாற்றிய வினோத், கோபி மற்றும் காவலாளி முத்து ராமலிங்கம் ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

யார் அரசியல் வாரிசு என்ற ஆத்திரத்தில் அப்பாவி ஊழியர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் நக்கீரன் நாளிதழ் வெளியிட்ட புகைப்படங்களில் அழகிரியின் ஆதரவாளர் அட்டாக் பாண்டி தன் அடியாட்களுக்கு கட்டளையிடுவது இடம்பெற்று இருக்கும்.

பெட்ரோல் குண்டுகள் வீசி தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அழகிரியின் ஆதரவாளர் மற்றும் திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி பின் வெளியான உத்தரவு  குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது. 2009-ல் வழக்கில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தது மாவட்ட நீதிமன்றம்.

மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2011-ல் சி.பி.ஐ தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தினகரன் அலுவலகம் எரித்து 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பத்திரிகையாளர்கள் கூட சாட்சி சொல்ல முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை நக்கீரன் முன்வைத்து இருந்தது.

சம்பவம் நிகழ்ந்து 12  வருடங்கள் முடிவடையும் தருணத்தில் வழக்கின் தீர்ப்பை மார்ச் 21-ம் தேதி நீதிபதிகள் பிரகாஷ் புகழேந்தி ஆகியோர் வசித்தனர். இதில், கீழ் கோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்வதோடு, அட்டாக் பாண்டி, பிரபு, விஜயபாண்டி, கந்தசாமி, ராமையா பாண்டியன், சுதாகர், திருமுருகன், ரூபன், மாலிக் பாட்ஷா ஆகிய 9 பேருக்கு  தலா 3 ஆயுள் தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட காலம் சிறைத் தண்டனையும் வழங்குவதாக உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் தொடர்புடையவராக டி.எஸ்.பி ராஜாராம் பெயரும் சேர்க்கப்பட்டு நீதிபதிகள் முன் விசாரணைகள் நடைபெற்றது. அப்பொழுது, நீங்கள் நினைத்து இருந்தால் இருந்தால் பத்திரிகை எரிப்பு சம்பவத்தை தடுத்து இருக்கலாம் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராஜாராம், சம்பவம் நிகழ்ந்த போது தான் அங்கு இல்லை எனக் கூறினார். சம்பவம் நிகழ்ந்த பிறகாவது துப்பாக்கியை வானத்தை பார்த்து சுட்டு இருந்தால் கூட்டத்தை கலைத்து இருக்கலாமே ? என நீதிபதிகள் கேட்டதற்கு, நான் துப்பாக்கியை ஜீப்பில் வைத்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.

எப்படி இருந்தாலும், கடமையைச் செய்யத் தவறியதால் நீங்களும் குற்றவாளியே எனக் கூறிய நீதிபதிகள் ராஜாராம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 217 மற்றும் 221  ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக தீர்ப்பு வழங்கினர்.

தினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட சமயத்தில் ராஜாராம் டி.எஸ்.பியாக பணியாற்றி பின் ஏ.டி.எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெற்றார். தற்போது அவருக்கும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு அப்பாவி ஊழியர்கள் இறந்து 12 வருடங்கள் கழித்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று அரசியல் களமே மாறியது ! யாருடைய ஆத்திரத்திற்கோ அப்பாவி ஊழியர்களின் உயிர்கள் பலி ஆகியது மட்டுமே மிச்சம்.

Retired DSP sentenced to four years imprisonment in 2007 ‘Dinakaran’ office attack case

9 Sentenced To Life In Deadly Attack On Tamil Nadu Newspaper ‘Dinakaran’

Please complete the required fields.




Back to top button
loader