தமிழ் வளர்த்த மதுரையின் ரயில் நிலையத்தில் இந்தி நூலகம் எதற்கு ?| ஆர்.டி.ஐ பதில் என்ன ?

தமிழ் மொழியின் வரலாற்றில் முக்கிய நகரமாக விளங்கி வரும் மதுரையின் ரயில் நிலையத்தில் இந்தி மொழி கவிஞரின் பெயரில் ” மைதிலி சரண் குப்த் இந்தி நூலகம் “அமைந்து இருப்பது முரண்பாடாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இதுதொடர்பாக, கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.இராசசிம்மன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சகம் அளித்த பதிலில், மதுரை கோட்டத்தில் 10 இந்தி நூலகங்கள் இயங்கி வருகிறது. அதில் ஒரு நூலகத்திற்கு மகாகவி பாரதியின் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் 2,957 இந்தி புத்தகங்கள் இருப்பதாகவும், தமிழ் புத்தகங்கள் எத்தனை உள்ளன என்பதற்கான தகவல் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, தென்னிந்திய மக்கள் செல்ல விரும்பும் வாரணாசி(காசி) கோட்டத்தில், தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நூலகங்கள் இருக்கிறதா என்கிற கேள்விக்கு அதற்கான தகவல் இல்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் எத்தனை இடங்களில் தமிழ் நூலகங்கள் இருக்கின்றன என்ற கேள்விக்கு, ” அதற்கான தகவல் இல்லை ” என ரயில்வே அமைச்சகம் அளித்த பதில் இடம்பெற்று இருக்கிறது. ஆனால், தெற்கு ரயில்வே அளித்த பதிலில், “இன்றுவரை தமிழ் நூலகங்கள் இல்லை ” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஐ தகவல் பெற்ற திரு.இராசசிம்மன் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில், ” நான் ஒருமுறை திருப்பதி செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். புத்தகம் படிக்கும் பழக்கம் இருப்பதால் அங்கிருந்த நூலகத்திற்குள் நுழைந்தேன். அங்கு முழுவதும் இந்தி புத்தகங்களாகவே இருந்தது. அதுகுறித்து அங்கு கேட்ட போது, இது வடஇந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்காக வைத்துள்ளோம் என்றனர். ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லையா என கேட்டதற்கு, இல்லை. இது இந்திக்கு மட்டுமே. இஷ்டம் இருந்தால் படியுங்கள் எனக் கூறினார்.
மதுரை ரயில் நிலையத்தில் உள்ள இந்தி நூலகம் குறித்து நாங்கள் விசாரித்த வரையில் கடந்த 5-6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இது ஆரம்பத்தில் ரயில்வே ஊழியர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. ஊழியர்கள் கட்டாயம் இந்தி படிக்க வேண்டும், இந்தியில் பேசவும் மற்றும் கடிதம் எழுதவும் வேண்டும் என அரசாணையே வெளியாகியது. அப்போது ரயில்வே தொழிற்சங்க சங்கத் தலைவர் எதிர்த்து போராடியதால் அது திரும்ப பெறப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, அந்த நூலகம் வடஇந்திய பயணிகளுக்கு பயன்படும் வகையில் மாறிவிட்டது.
இதேபோல், சென்னையில் கூட இந்தி நூலகம் இருப்பதாக நண்பர் ஒருவர் கூறினார். மதுரை மட்டுமல்ல முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தி நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் மட்டும் 10 இந்தி நூலகங்கள் உள்ளன. அதில், ஒரு இந்தி நூலகத்திற்கு பாரதியாரின் பெயரை வைத்து இருக்கிறார்கள். தமிழ் நூலகங்கள் எங்கும் அமைக்கப்படவில்லை என ஆர்.டி.ஐ பதில் வந்தது. இதுகுறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை ” எனத் தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிரான எழும் குரல்களை ” இந்திக்கு ” எதிரான அல்லது பிற மொழிகளுக்கு எதிரானது எனச் சித்தரிக்கச் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். வடஇந்திய பயணிகளுக்காக இந்தி மொழிக்கான நூலகங்கள் தொடர்ந்து அமைக்கப்படுவது போன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளுக்கு ஏன் அமைப்பதில்லை என கண்டனங்கள் எழுகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.