மதுரை மருத்துவக் கல்லூரி உறுதிமொழி சர்ச்சை.. கல்லூரி முதல்வர், மாணவர்கள் அளித்த விளக்கம் !

துரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வைத்ததாக எழுந்த சர்ச்சையால் அக்கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து உள்ளது.

ஏப்ரல் 30-ம் தேதி மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, மாணவர்களுக்கு மருத்துவ உடை அணிவித்த பிறகு எடுக்கப்படும் “ ஹிப்போக்ரடிக் ” உறுதிமொழிக்கு பதிலாக ” மகரிஷி சரக சபதம் ” எனும் சமஸ்கிருத உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரத்னவேல், ” தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் ஆங்கிலத்தில் இருந்த உறுதிமொழியை பதிவிறக்கம் செய்துள்ளனர். நிகழ்ச்சியை நடத்திய மாணவர் தலைவர் இதுதான் சரி என நினைத்து படித்துவிட்டார். கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரை நாங்கள் ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை எடுப்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறோம் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த சம்பவம் காரணமாக ரத்னவேல் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பில் இருந்து கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு தரப்பில் செய்தி அறிக்கை வெளியாகியது. மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவையினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” நிகழ்ச்சியில் ஆங்கில மொழிப்பெயர்ப்பை மட்டுமே உறுதிமொழியாக எடுத்தோம், சமஸ்கிருதத்தில் ஏற்கவில்லை. 2019-ல் இருந்து என்எம்சி-யில் கூறுவதை தான் பின்பற்றி வருகிறோம். என்எம்சி வெளியிட்ட சுற்றறிக்கைபடி, புதிய மாணவர்கள் சரக சபதம் எனும் உறுதிமொழியை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்கிறோம் எனக் கூறி இருந்தனர், கட்டாயம் எனக் கூறவில்லை. நேற்றுவரை, ஹிப்போக்ரடிக் தான் கட்டாயம் எடுக்க வேண்டும் என சொல்லவில்லை, சரக சபதம் எடுக்கக்கூடாது என்றும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி தான் எடுக்க வேண்டும் என நேற்று சுற்றறிக்கை வந்தது. இந்த நிகழ்ச்சி 2 நாட்களில் அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. உறுதிமொழி ஏற்பு விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. இது முழுக்க மாணவர்கள் தயாரித்த நிகழ்வு. இது அவசரகதியில் நிகழ்ந்து உள்ளது ” எனத் தெரிவித்து இருந்தனர்.

ஹிப்போக்ரடிக் உறுதிமொழியானது மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹிப்போகிரட்டீஸ் ஆல் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இதற்கு மாற்றாக, ஆயுர்வேதத்தின் தந்தை என அழைக்கப்படும் மகரிஷி சரகரின் பொன்மொழிகளை கொண்ட திருத்தி அமைக்கப்பட்ட உறுதிமொழியை தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Please complete the required fields.




Back to top button
loader