மகாராஷ்டிராவில் பழிவாங்க குரங்குகள் 250 நாய் குட்டிகளைக் கொன்றனவா ?

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள லாவூல் கிராமத்தில் குரங்கு குட்டிகளை நாய்கள் கொன்றதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் 250 நாய் குட்டிகளை குரங்குகள் தூக்கிச் சென்று கொன்றதாக இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலான முன்னணி செய்தித்தளங்கள் அனைத்திலும் வெளியாகின. இதையடுத்து, இத்தகவல் சமூக வலைதளங்களில் கூட வைரலாகி மீம்ஸ்களும் பறந்தன. ஆனால், அவை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் முரண்பாடான தகவல் எனக் கூறப்படுகிறது.

Advertisement

டிசம்பர் 19-ம் தேதி பீட் மாவட்டத்தில் இருந்து வந்த வன அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த தகவலில், ” பல நாய் குட்டிகளை கொன்ற இரண்டு குரங்குகளை நாக்பூர் வனத்துறை குழுவினர் பீட் பகுதியில் பிடித்துள்ளனர். இரண்டு குரங்குகளும் நாக்பூர் வனப் பகுதியில் விடப்பட்டதாக ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

வன அதிகாரி தரப்பில் குரங்குகள் 250 நாய் குட்டிகளை கொன்றதாக தகவல் அளிக்கப்படவில்லை, கிராம மக்கள் தரப்பில் கூறப்பட்டதாக இந்த எண்ணிக்கையை வைத்து செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த தரவை எந்த செய்தி நிறுவனங்களும் சார்பார்க்கவில்லை.

வைரலான தகவல் குறித்து வனத்துறை அதிகாரி சச்சின் காந்த் கூறுகையில், ” கிராமத்தில் சுமார் 50 நாய் குட்டிகள் பட்டினியால் இறந்து உள்ளன. நாய்கள் மற்றும் குரங்குகளுக்கு இடையே பழிவாங்கும் செயல் என கிராம மக்கள் கூறுவது போன்று ஏதும் இல்லை. விலங்குகளிடம் பழிவாங்கும் உணர்வு இல்லை. அவை விலங்குகள் என்பதால் சண்டையிடவே செய்யும்.

சில வாரங்களுக்கு முன்பாக, மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள லாவூல் கிராமத்தில் இரு பெரிய குரங்குகளும், ஒரு குட்டி குரங்கும் வழி தவறி வந்தன. தெருநாய்கள் தாக்கியதில் குட்டி குரங்கு இறந்ததாகவும், குட்டி இறந்த பிறகு கிராமத்தில் உள்ள நாய் குட்டிகளை குழந்தை என நினைத்து கிராமம் முழுவதும் சுற்றித் திரிந்து இருக்கிறது.

இப்படி உயரமான இடங்களில் தூக்கிச் செல்லும் போது நாய் குட்டிகளுக்கு சாப்பிட ஏதும் கிடைப்பதில்லை, அவை பட்டினியால இறந்தன. ஊடகங்களில் குறிப்பிடப்பட்ட 250 நாய் குட்டிகள் என்ற எண்ணிக்கை ஆதாரமற்றவை ” என பூம் லைவ் இணையதளத்தில் தெரிவித்து இருக்கிறார்.

” லாவூல் கிராமத்தில் குரங்குகளின் தொல்லை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குரங்குகள் நாய் குட்டிகளை தூக்கிச் சென்று மரத்தின் உச்சியிலோ அல்லது உயரமான வீடுகளில் உச்சியிலோ இருந்ததால் மக்களால் என்ன நடந்தது என கணிக்க முடியவில்லை. குரங்குகளால் கொண்டு செல்லப்பட்ட நாய் குட்டிகள் வீடுகளின் உச்சியில் இருந்தும், மரங்களின் உச்சியில் இருந்து விழுந்து இறந்துள்ளன. இதன் பிறகு, குரங்குகள் நாய் குட்டிகளை கொன்றதாக பல கதைகள் பரவத் தொடங்கி இருக்கிறது. ஊர் மக்கள் தரப்பில் அளித்த தகவலின்படி, 50 முதல் 60 நாய் குட்டிகள் வரை இறந்தன ”  என பிபிசி மராத்தி செய்தியில் வெளியாகி இருக்கிறது.

Advertisement

மகாராஷ்டிராவின் லாவூர் கிராமத்தில் குரங்குகள் நாய் குட்டிகளை தூக்கிச் சென்று உயரமான பகுதியில் வைப்பதால் பசியாலும், கீழே விழுந்தும் பல நாய் குட்டிகள் உயிரிழந்து இருக்கின்றன. ஆனால், குரங்குகள் 250 நாய் குட்டிகளை கொன்றதாக முன்னணி செய்தித் தளங்களில் வெளியான தகவல் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு மாறான தகவல்.  நாய் குட்டிகள் இறப்பு சம்பவத்தில் சரிபார்க்கப்படாத மற்றும் செவி வழிக் கதைகளை நம்பி செய்திகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button