This article is from Apr 06, 2020

மேலும் 28 நாட்களுக்கு தடை நீடிக்கிறதா ?| மாலை மலர் தலைப்பால் குழப்பம்.

கொரோனா வைரசின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மக்கள் வெளியே வராமல் இருக்கவே 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருக்கிறது. இந்த தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி வரை மட்டுமே என கூறப்பட்டு வந்தாலும் அரசு தடை உத்தரவை நீடிக்கலாம் என சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி மாலை மலர் செய்தியில் ” கொரோனா அதிகம் பாதித்த 274 மாவட்டங்களில் மேலும் 28 நாட்கள் மக்கள் வெளியில் வர தடை ” என்ற தலைப்பில் வெளியான செய்தியின் பக்கம் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

இதன் அடிப்படையில், தடை உத்தரவு மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க போகிறதா என மக்கள் பேசத் துவங்கி உள்ளனர். இது குறித்து தேடிய பொழுது, பிற முன்னணி செய்தி தளங்களில் அப்படியான செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. மேலும், அரசின் துறை சார்ந்தவர்கள் தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பதை அறிய முடிந்தது.

ஏப்ரல் 6-ம் தேதி மாலை மலர் செய்தித்தாளை காண்கையில் நான்காம் பக்கத்தில் ” நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் 28 நாட்களுக்கு ஊரடங்கு மற்றும் தடைகளை மேலும் நீடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர். அது எந்தெந்த மாவட்டங்கள் என்பது இனிமேல் தான் இறுதி செய்யப்படும். எனவே ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு நோய் பாதிப்பு உள்ள பல மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ” என வெளியாகி இருக்கிறது.

தடை நீடிப்பது உறுதி செய்யப்பட்டதாக செய்தியில் வெளியாகவில்லை. மாலை மலர் செய்தியில் வைக்கப்பட்ட தலைப்பால் மக்கள் குழப்பம் அடைத்ததோடு, அரசு தடை உத்தரவை நீடிக்கப்போகிறது என்ற அச்சத்திலும் உள்ளார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் செய்தியின் தலைப்புகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை செய்தி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஊடரங்கு உத்தரவை நீடிக்கும் எண்ணம் அரசு தரப்பில் இருக்கும் பட்சத்தில் அரசின் அதிகாரப்பூர்வ தகவல்கள் செய்திகளின் மூலம் வெளியாகும். அதுவரை மக்கள் பீதியடைய வேண்டாம்.

Please complete the required fields.




Back to top button
loader