புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை.. எதற்காக மரத்தால் பாதை ? CRZ விதிகள் என்ன ?

சென்னை மெரினாக் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சிங்கார சென்னை 2.௦ திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பில் மரத்தால் அமைக்கப்பட்டது. இதை நவம்பர் 27ம் தேதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரையில் உருவான ஆக்ரோஷமான அலையால் மாற்றுத்திறனாளிகளுக்கு மரத்தால் அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்து உள்ளது.

Twitter link

மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை சேதமடைந்தது ஊடகங்களில் முதன்மை செய்தியாக வெளியாகியது. இதையடுத்து, ரூ.1.09 கோடி செலவில் அமைக்கப்பட்ட மரப்பாதை திறந்து ஒரு வாரமே ஆன நிலையில் சேதமடைந்து உள்ளதாகவும், திமுகவின் ஊழல் காரணமாகவே மரப்பாதை தாங்காமல் சேதமடைந்து உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எதற்காக மரத்தால் பாதை ? CRZ விதிகள் என்ன ?

கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த அமைக்கப்பட்ட நடைபாதை எதற்காக மரத்தால் செய்யப்பட்டது. உறுதியான நடைபாதையாக இருக்க கான்கிரீட் கட்டுமானம் செய்து இருக்கலாம் என்கிற கேள்விகள் எழுகிறது.

ஆனால், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின்(CRZ) விதிமுறைகளின்படி, ” கடற்கரையில் கட்டுமானப் பொருட்களை கொட்டக்கூடாது. மேலும், CRZ பகுதிகளில் கான்கிரீட் கட்டமைப்புகள் அனுமதிக்கப்படக்கூடாது ” என விதிகள் உள்ளன.

2020ல் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட பரிந்துரையின்படி, ” மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக தற்காலிக பாதை அமைக்கப்பட வேண்டும், இயற்கை சார்ந்த மற்றும் மறுசுழற்சிசெய்யப்படும் மரம் சார்ந்த பொருட்களால் நடைபாதை அமைக்கப்படும், திட்டத்திற்கான மொத்த செலவு ரூ.90 லட்சம் ” எனக் கூறப்பட்டு உள்ளது.

இந்த பரிந்துரைக்கு CRZ ஒப்புதல் அளித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்திலும், அதே தகவல் இடம்பெற்று உள்ளதை காணலாம்.

மெரினா கடற்கரையில் கட்டுமான பொருட்களை புதைக்கவோ, கான்கிரீட் கட்டுமானங்கள் அமைக்கவோ அனுமதி கிடையாது. ஆகையால், நடைபாதை அமைக்க மரைன் வுட் (marine woods), பிளைவுட் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய வகையில் உள்ள மரங்களையே பயன்படுத்த முடியும்.

மரப்பாதை செலவு எவ்வளவு ? 

திமுக ஆட்சியில் மெரினாவில் அமைக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை ரூ.1.09 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பாக, அதிமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் இரு இடங்களில் 380 மீட்டர் மற்றும் 125 மீட்டர் அளவில் தற்காலிக பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ.90 லட்சம் செலவாகும் எனப் பரிந்துரையில் உள்ளதை காணலாம்.

மரப்பாதை மட்டும் சேதமடைந்ததா ? 

புயலே வரவில்லை, அதற்குள் மரப்பாதை சேதமடைந்து உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். ஆனால், மாண்டஸ் புயலால் உருவான கடல் சீற்றத்தால் மெரினாவில் உள்ள நடைபாதை சேதமடைந்தது போல் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் வீடுகளும் சேதமடைந்து உள்ளன.

இதற்கிடையில், மாண்டஸ் புயலால் சென்னை மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைப்பாதை விரைவில் சீரமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்து இருக்கிறார்.

ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சேதத்தை பார்வையிட்ட போது, சாலையில் இருந்து கடற்கரைக்கு வரும் வரையில் உள்ள நடைபாதை நன்றாக உள்ளதையும், கரைக்கு அருகில் உள்ள நடைபாதை மேடை மட்டும் சீற்றத்தால் சேதமடைந்து உள்ளதையும் பார்க்கலாம். இதற்கான சீரமைப்பு செலவை ஒப்பந்ததாரரே ஏற்பார் என்றும், நடைபாதை நீளத்தை 20 மீட்டர் குறைக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன்பு, மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரைகளுக்கு செல்ல வேண்டும் எனும் பெருங்கனவை நிறைவேற்றும் வகையில் குறிப்பிட்ட நாட்கள் தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அழைத்து செல்லப்பட்டு வந்தனர். இப்படி கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட தற்காலிக பாதையில் திமுக ஸ்டிக்கர் ஒட்டியதாக தகவல்கள் பரவவே அதுகுறித்து விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை.. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட திட்டமா ?

புயலால் உருவான கடல் சீற்றத்தால் மெரினாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதமடைந்து உள்ளது. அது வேதனைக்குரியதே. எனினும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் விதிகளின்படி மரத்தால் ஆன நடைபாதையே கடற்கரையில் அமைக்க முடியும். கடல் சீற்றம் உருவானால் இந்த நடைபாதை பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. அதை மீண்டும் அமைப்பதாக அரசு தெரிவித்து இருக்கிறது. 

Links : 

JTFW9WJE0312202011112020IAIII

12022020EIV6HLQVMINUTES229THEACCRZMEETING

Please complete the required fields.




Back to top button
loader