‘என் மாநிலம் பற்றி எரிகிறது’ : மேரி கோம்.. மணிப்பூரில் தொடரும் கலவரங்கள்… காரணம் இது தான்!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், தற்போது முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் தற்போது பழங்குடியினரல்லாத மெய்தியினருக்கு (Meetei or Meitei) பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) அந்தஸ்து வழங்கப்பட போவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) சார்பில் நேற்று சுராசந்த்பூர் மாவட்டத்தில் பேரணி நடந்தது.
இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 40% பேர் – ஊர்வலங்களில் கலந்து கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் டோர்பங் பகுதியில் பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதோடு, கிளர்ச்சியாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புமாறும் போலீசாரால் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, பழங்குடியினர் அதிகம் இல்லாத இம்பால் மேற்கு, காக்சிங், தௌபல், ஜிரிபாம் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களிலும், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னௌபால் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளும் ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் நிறுத்தப்பட்டன. ஆனால் பிராட்பேண்ட் சேவைகள் செயல்பாட்டில் இருந்தன.
இந்நிலையில் மணிப்பூரின் பல பகுதிகளில் நேற்று இரவு வீடுகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டதோடு, தெருக்களில் உள்ள கடைகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவையும் மர்ம நபர்களால் நெருப்புக்கு இரையாக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இச்சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்த இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், “எனது மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது, தயவு செய்து உதவுங்கள்!” என்று பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் பல முன்னணி ஊடகங்களிடம் உதவி கேட்டு தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
My state Manipur is burning, kindly help @narendramodi @PMOIndia @AmitShah @rajnathsingh @republic @ndtv @IndiaToday pic.twitter.com/VMdmYMoKqP
— M C Mary Kom OLY (@MangteC) May 3, 2023
தற்போது கலவரம் நிகழும் பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களைக் கண்டால் சுட்டுத்தள்ளுமாறு மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசியா உய்கே உத்தரவிட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
கலவரங்களுக்கான முக்கிய காரணங்கள் :
1. அரசாங்கத்தின் நில அளவை பணிகள்
கடந்த 2023 ஏப்ரல் 27 அன்று, மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினரின் சங்கமான Indigenous Tribal Leaders’ Forum (ITLF) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில் ஏப்ரல் 28 அன்று, சுராசந்த்பூர் மாவட்டத்திற்குட்பட்ட புதிய லாம்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள PT Sports Complex வளாகத்தில் உடற்பயிற்சி கூடத்தைத் திறப்பதற்காக முதலமைச்சர் என் பிரேன் சிங் (N Biren Singh) வருகையை முன்னிட்டு, ITLF அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது.
மணிப்பூர் அரசாங்கத்தின் நில அளவை பணிகள் இப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு எதிராக இருப்பதாகவும், அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியும், தேவாலயங்களை ஆக்கிரமிப்பு எனக் கூறி இடித்து வருவதாகவும் பழங்குடியின சங்கங்கள் தரப்பில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து All Lamka Unted Youth, ஜூ சங்னௌபாங் பாவ்ல்பி (Zou Sangnaupang Pawlpi) மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தை சார்ந்த குகி ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன் (Kuki Students’ Organisation) ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு அமைப்புகளும் முழு அடைப்புக்கு ஒப்புதல் அளித்தன. இதன்படி அரசாங்க திட்டத்திலும் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு இவ்வமைப்பு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் முழு அடைப்பு நடப்பதற்கு முன்பே, முதலமைச்சர் என் பிரேன் சிங் கலந்து கொள்ளவிருந்த விழாமேடை மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்த சம்பவத்தால் கிளர்ச்சியாக்கப்பட்ட வன்முறையாளர்கள் தற்போது மணிப்பூரின் சில பகுதிகளிலுள்ள வீடு, இருசக்கர வாகனங்கள் மற்றும கார் ஆகியவற்றிற்கும் நெருப்பு வைத்துள்ளனர்.
2. மெய்தியினர் இடஒதுக்கீடு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அனைவரும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினராகக் கருதப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் மெய்தியினர் (Meetei or Meitei) இன மக்கள், “1949 இல் இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு பழங்குடியினர் இனமாக இருந்த நாங்கள் ‘அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை, 1950′ வரைவு செய்யப்பட்டபோது தான் இந்த அடையாளத்தை இழந்தோம்” எனக் கூறி அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர்கள் (ST) பட்டியலில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலத்தின் தற்போதைய 36 எஸ்.டி சமூகங்களை சேர்ந்த மாணவர் சங்கங்கள், இவர்களுக்கு எஸ்.டி அந்தஸ்து வழங்குவது என்பது இதுவரை இடஒதுக்கீட்டின் மூலம் பழங்குடியின சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை தோற்கடிப்பது போன்று உள்ளது என்றும், இது இந்திய அரசியலமைப்பின் உரிமைகளை மீறும் செயல் என்றும் பலத்த குரல் கொடுத்து வருகினறனர்.
இந்நிலையில் மெய்தியினர் பிரிவு மக்களின் கோரிக்கைகளை, கடந்த 10 ஆண்டுகளாக மணிப்பூர் மாநில அரசு நிலுவையில் வைத்துள்ளதைக் குறிப்பிட்ட மணிப்பூர் உயர் நீதிமன்றம், கடந்த 2023 ஏப்ரல் 20 அன்று அவர்களை பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தது. அன்றிலிருந்தே பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரின் புவியியல் நிலப்பரப்பில் சுமார் 10% நிலப்பரப்பை மத்திய பள்ளத்தாக்கு பகுதி கொண்டுள்ளது. இந்த மத்தியப் பள்ளத்தாக்கு பகுதி மாநிலத்தின் மக்கள்தொகையில் 64.6% ஆக இருக்கும் மெய்தே பிரிவினருக்கு தாயகமாக இருந்து வருகிறது. மீதமுள்ள 90% புவியியல் பகுதி, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைகளை உள்ளடக்கியது. அவை தான் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினர்கள் (சுமார் 35.4% மக்கள்) அனைவருக்கும் வசிப்பிடமாக உள்ளது.
இதன்மூலம் மணிப்பூர் மாநில கலவரங்களுக்கு அம்மாநில அரசின் நில அளவீடும் பணிகள், மாநிலத்தின் பெரும்பான்மையான (64.6%) மெய்தே பிரிவினரை எஸ்.டி அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு எனப் பல காரணங்கள் அமைந்துள்ளன.
இன்று இந்தியாவில் பழங்குடியினரின் பிரச்சினை என்பது இந்திய அரசியலோடு தொடர்புடைய ஒன்றாக இருந்து வரும் நிலையில், இனிவரும் காலங்ககளில் கலவரங்கள் ஏற்படாதவாறு தடுப்பது அம்மாநில அரசின் பரிசீலனையின் முடிவிலேயே உள்ளது.
ஆதாரங்கள்:
https://www.indiatodayne.in/manipur/story/manipur-itlf-declares-complete-shutdown
https://www.ndtv.com/india-news/churachandpur-manipur-chief-minister-n-biren-singh-event-venue
https://indianexpress.com/article/political-pulse/northeast-meitei-st-demand-manipur-hc-8581664/