மன்சூர் அலிகான் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு | நடந்தது என்ன ?

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு இருந்தாகவும், அதில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறை சென்றதாகவும் 2001-ம் ஆண்டில் வெளியான செய்தித்தாள் பதிப்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது..
தன்னிடம் உதவியாளராக சேர்ந்த சினேகா சர்மா என்ற 23 வயது பெண்ணை நடிகர் மைசூர் அலிகான் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட வழக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொடரப்பட்டது. 1996 நவம்பர் மாதம் மன்சூர் அலிகான் தன்னை விடுதிக்கு காரில் அழைத்து சென்று ஜூஸில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், 1998 மார்ச் மாதம் சினேகா சர்மா பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஒன்றரை ஆண்டுகளாக திருமணம் செய்துக் கொள்வதாக கூறி மன்சூர் அலிகான் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக சினேகா தெரிவித்து இருந்தார்.1998 டிசம்பர் 11-ம் தேதி சினேகா சர்மா அளித்த புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணைக்கு பிறகு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் 2001 மார்ச் மாதம் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. நீதிமன்ற வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்து அழைத்து செல்லும் புகைப்படமும், செய்தியுமே சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தனக்கு சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் அப்பீல் செய்திருந்தார். அங்கு, மன்சூர் அலிகானுக்கு அளிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ததோடு, இழப்பீடாக சினேகா சர்மாவிற்கு 3.5 லட்சம் மற்றும் பெண் குழந்தைக்கு 7 லட்சம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
எனினும், மன்சூர் அலிகான் உச்ச நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அங்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து அவரின் மேல்முறையீடை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் மன்சூர் அலிகான் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு குறித்தும், நீதிமன்ற தீர்ப்பும் 2012-ல் டிசம்பர் 11-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் தான், 1995-ல் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் சினேகா சர்மாவை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் எனக் கூறி அவரின் கணவர் சிவ்சுரேஷ் மிஸ்ரா என்பவர் வழக்கு தொடுத்ததும், அந்த வழக்கு நிலுவையில் இருந்ததும் தெரிய வந்தது. அதில், சிவ்சுரேஷ் மிஸ்ரா மற்றும் சினேகா சர்மாவுக்கு 24.8.1994-ல் திருமணம் நடந்து இருந்ததையும், இருவருக்கும் உறவு இருந்ததையும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் சினேகா சர்மா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதற்கு முன்பாக வேறு யாருடனும் உறவு கொள்ளவில்லை என்றும், நடிகர் மன்சூர் அலிகான் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாக தெரிவித்து இருந்தார்.
இதை அடிப்படையாக வைத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அதில், தன் பெயரை கெடுப்பதற்காக பொய்யான புகாரை அளித்து இருக்கிறார். தன்னுடைய திரைப்பட வாழ்க்கை மற்றும் நற்பெயரை இழக்கச் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு இழப்பீடாக சினேகா சர்மா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி டி.மதிவாணன் அளித்த தீர்ப்பில், நடிகர் மன்சூர் அலிகான் அளித்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய சினேகா சர்மாவிற்கு சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் நேரடிடையாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. மனுதாரரின் வாதம் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் மனுதாரர் தன் கோரிக்கையை நிரூபித்து உள்ளார். ஆகையால் அவர் கோரியபடி, நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.50 லட்சத்தை இழப்பீடாக வழங்க சினேகா சர்மாவுக்கு உத்தரவிடுவதாக தெரிவித்து இருந்தார்.
proof :
Woman to pay Rs 50 lakh for accusing actor of rape
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.