This article is from May 11, 2021

பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் ஏமாற்றா ? மாரிதாஸ் மறைத்த உண்மை!

பெண்கள் மற்றும் திருநங்கையர்களுக்கு அனைத்து சாதாரண கட்டணப்  பேருந்துகளிலும் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மே 7 ஆம் தேதி அறிவித்தது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை  பணிப்புரியும் ஆண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனை தொடர்ந்து பெண்களுக்கும் ஒரு பொருளாதார சுதந்திரத்தை அடைய வேண்டும் எனும் நோக்கோடு கொண்டு வரப்பட்ட இத்திட்டமானது ஏற்கனவே வேலைக்கு சென்று குடும்ப செலவை பார்த்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் வரவேற்கத்தக்க திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு வந்த உடன், “ அதற்கான பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது, இது மக்களை ஏமாற்றும் வேலை, பயன்தரக்கூடிய திட்டம் இல்லை” என்னும் சொல்லாடல்களை முன்னிறுத்தி மாரிதாஸ் உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களிலும் , காணொளிகளிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் பேசுவது பரவலாக காணப்படுகிறது. இக்கருத்துகளை தெளிவுப்படுத்தும் பொருட்டு யூடர்ன்  ஒரு காணொளியையும் பதிவு செய்திருக்கிறது.

இத்திட்டம் குறித்தான சந்தேகங்களை கலைக்கும் பொருட்டும், அரசின் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட நம் காணொளியின் ஆதாரத் தொகுப்பை காண்போம்.

மாரிதாஸ் தகவல் 1 :  மாநகரத்துக்குள் இயங்க கூடிய சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் பயணிக்க இலவசம்.

உண்மை/விளக்கம் : தமிழகத்தில் செயல்படும் அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் இயங்கும் சாதாரண கட்டண பேருந்துகளிலும் கட்டணமின்றி பெண்கள் பயணிக்கலாம். இது சென்னை மாதிரியான மாநகரங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து நகர மற்றும் கிராம பேருந்துகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் இத்திட்டம் பற்றிய அறிவிப்பு வந்த உடன் புதுக்கோட்டையில் இருந்து கீரனூர் செல்லும் பேருந்து ஒன்றிற்கு “மகளிர் பயண செய்ய  கட்டணம் இல்லை” எனும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும் புகைப்படம் வலைத்தளங்களில் பரவலாகக் காணப்பட்டதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  

மாரிதாஸ் தகவல் 2 : 100 பேருந்துகளில் 5 பேருந்துகள் கூட சாதாரண கட்டண பேருந்துகளாக இருக்காது. கட்டணமில்லா பேருந்தில் பயணிக்க மக்கள் 4 முதல் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

உண்மை/விளக்கம் : அரசின் தரவுகளின் படி அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் சாதாரண கட்டண பேருந்துகளே பெரும்பான்மையாக இயங்குகின்றன. 2018-2019 ஆண்டின் அரசின் அறிக்கையின்படி 21,744 பேருந்துகள் இயங்குகின்றன. இதில் 6,339 சாதாரண கட்டண பேருந்துகள் (25% க்கும் மேல்). சென்னை, மதுரை தவிர்த்து தமிழ்நாட்டில் இயக்கப்படும் மொத்த டவுன் பேருந்துகளில் கிட்டத்தட்ட 70% பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

போக்குவரத்து கழகம்  கட்டணமில்லா பேருந்துகள் / மொத்த டவுன் பேருந்துகள் 
கும்பகோணம்  1118 / 1257
கோவை 1068 / 1261
மதுரை 532 / 1285
சேலம் 813 / 837
திருநெல்வேலி  720 / 772
சென்னை 1362 / 3233
விழுப்புரம் 726 / 1084
[ குறிப்பு : காணொளியில், சென்னையில் 950 சாதாரண கட்டண பேருந்துகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்து இருந்தோம். ஆனால், சென்னை எம்டிசி இணையதளத்தில் 1362 பேருந்துகள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நாம் கூறியதை விட அதிகமாகவே இருக்கிறது ]

மாரிதாஸ் தகவல் 3 : சாதாரண கட்டண பேருந்தின் எண்ணிகையை அரசு குறைக்கும்

உண்மை/விளக்கம் : மதுரையை தவிர்த்து பார்த்தால் அனைத்து அரசு கழகங்களிலும் சாதாரணக் கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. மதுரையில் உள்ள கிட்டத்தட்ட 54% மாநகர மற்றும் நகர பேருந்துகளை சாதாரணக் கட்டண பேருந்துகளாக மாற்றும் பணி நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக TNSTC அதிகாரி ஒருவர் தி ஹிந்துவிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும் முக்கியமான பகுதிகளிலும், கிராமங்களிலும் குறைந்தபட்சம் ஒரு சாதாரண கட்டண பேருந்து இயக்குவதற்கான ஏற்பாடுகளும்  செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாரிதாஸ் தகவல் 4 : எதிர்காலத்தில் பேருந்து கட்டணம் கண்டிப்பாக உயரும்.

உண்மை/விளக்கம் : கடந்த ஆட்சி காலங்களிலும் ஒரு அரசு பதவிக்கு வந்தவுடன் பேருந்து பயணக்கட்டணங்கள் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.  2011 ஆம் ஆண்டிற்கு பிறகு  கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து அதிமுக அரசால் சென்னையில் இயங்கும் MTC பேருந்துகளுக்கும் , இதர இடங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் பேருந்துகளுக்கும் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது விலை ஏற்றம் குறித்து எந்த செய்தியும் வரவில்லை.

மாரிதாஸ் தகவல் 5 : போக்குவரத்து துறை சுமார் 1200 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குகிறது. ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இத்திட்டத்தினால் நட்டமே ஏற்படும். 

உண்மை/விளக்கம் : 100 பேருந்துகளில் 5 பேருந்து கூட கட்டணமில்லா பேருந்துகள் இருக்காது என கூறிய மாரிதாஸ் 5 பேருந்துகளுக்கு கூட பயன்பெறாத இத்திட்டத்திற்கு தற்போது நட்டம் ஏற்படும் என கூறி தன் கருத்தையே முரண்படுகிறார். இத்திட்டத்தினால் அரசுக்கு நட்டம் ஏற்படுவது உண்மையே. இருப்பினும் இதற்கு முன்பு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுகட்டும் பொருட்டு சுமார் 1200 கோடி ரூபாயை போக்குவரத்து கழகத்திற்கு மானியமாக வழங்க திமுக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் “ஒரு  நாளைக்கு போக்குவரத்து துறையில் 12 கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறது, ஆனால் அதனை ஈடுகட்ட அதிமுக அரசு எந்த தொகையும் ஒதுக்கீடு செய்யவில்லை”, என CITU தமிழக அரசின் மீது 2020 ஆம் ஆண்டு குற்றம் சாட்டியது. ஆனால் அப்போது மாரிதாஸ் கேள்வி கேட்கவில்லை.

அதிமுக அரசு கிட்டத்தட்ட  85,000  அரசு ஊழியர்களுக்கு  ஓய்வூதியமும் , நிலுவைத்தொகையும் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கவில்லை என்றும் குடும்ப நலன் நிதியான ரூ.50,000, பணியில் இருக்கும் போது ஊழியர் உயிர் இழந்தால் 3 லட்சம் ரூபாய்  இழப்பீடு வழங்கக்கோரியும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு  திட்டத்தை செயல்படுத்தக்கோரியும்  ஓய்வுபெற்ற TNSTC ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், ஓய்வு ஊதிய சலுகை வழங்காதது 2013 முதலே போக்குவரத்து துறையில் உள்ள பிரச்சனையாகவும் இதற்கு காரணம் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப் தொகை மாநில வர்த்தக சங்கத்திடம் (STU) அதிமுக அரசு முறையாக வரவு வைக்கப்படவில்லை, அந்த தொகையை செலுத்தவே இல்லை என்று CITU குற்றம் சாட்டியது. 

2018 ஆம் ஆண்டு அரசு பயணக்கட்டணங்களை  ஏற்றிக்கொண்டு ஊழியர்களுக்கு தரப்படும் ஓய்வு  ஊதியத்தை முறையாக வழங்காமல் இருந்த அந்த காலத்தில் தான் மாரிதாஸ் அதிமுக அரசை விமர்சிக்காமல், வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களை நாட்டின் சாபம் என சாடிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Links:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/free-bus-service-rolled-out/article34517605.ece

கட்டமில்லா பேருந்து பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை

https://cms.tn.gov.in/sites/default/files/go/swnmp_t_19.pdf

தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசு கழக பேருந்துகளின் எண்ணிக்கை விவரங்கள்.

https://www.tnstc.in/innerHtmls/aboutus.html

Please complete the required fields.




Back to top button
loader