மாரிதாஸ் திமுக கட்சியை திட்டும் மீம்களுக்கு பணம் தருவதாக கூறினாரா ?

பரவிய செய்தி
விளக்கம்
தன்னுடைய வீடியோக்கள் மற்றும் பதிவுகளில் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தும், திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளை தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை வாடிக்கையாக வைத்திருக்கும் மாரிதாஸ் பற்றி பலரும் அறிந்து இருப்பீர்கள்.
இந்நிலையில், மாரிதாஸ்க்கும் , மற்றொரு நபருக்கும் இடையே நடந்த முகநூல் உரையாடலில் திமுக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளை கேவலமாய் சித்தரித்து மீம் போட வேண்டும், ஒவ்வொரு மீம் பதிவிற்கும் 500 ரூபாய் வரை கிடைக்கும் என அந்நபரிடம் கூறியதாக முகநூல் சாட்டிங்கின் ஸ்க்ரீன்ஷார்ட் பகிரப்பட்டு வருகிறது.
முகநூலில் மாரிதாஸ் தொடர்பான போஸ்ட்களில் அந்த முகநூல் உரையாடல் ஸ்க்ரீன்ஷார்ட் தொடர்ந்து பதிவிட்டு கேள்விகள் எழுந்து வருவதை காண நேரிட்டது. இது உண்மையா என தேடிய பொழுது, மாரிதாஸ் உடைய பிரத்யேக முகநூல் கணக்கு ” Maridhas M ” என்ற பெயரில் உள்ளது. அதற்கு மெஜேஜ் செய்தால் “Maridhas M ” என்ற சாட்டிங்கில் காண்பிக்கிறது.
மாரிதாஸ் உடைய முகநூல் கணக்கு, முகநூல் பக்கம் ஆகிய இரண்டிலும் ” Maridhas M ” என வைத்திருக்கிறார். ஆனால், பரவும் முகநூல் உரையாடல் ஸ்க்ரீன்ஷார்ட்டில் ” Maridhas ” எனக் காண்பிக்கிறது.
சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் முகநூலில் போலியான கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் தவறான தகவல்களை பரப்புவது பற்றி அனைவரும் அறிந்ததே. அதுபோன்றே, மாரிதாஸ் பெயரில் போலியான கணக்கில் வதந்தியை பரப்பி உள்ளனர் என்று நினைத்தோம்.
Update :
மாரிதாஸ் உடைய முகநூல் கணக்கான ” Maridhas M “க்கு மெசேஜ் அனுப்பி இருந்த பொழுது மாரிதாஸ் எம் என்று முழுமையான பெயர் தான் தெரிந்தது. அதை வைத்து போலியான கணக்கு என குறிப்பிட்டு இருந்தோம். ஆனால், தொடர்ச்சியாக சில மெசேஜ்களை அனுப்பினால் மேலே மாரிதாஸ் என பெயர் மட்டுமே காண்பிக்கிறது.
ஆகையால், இதை வைத்து பரவும் உரையாடல் போலி என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் இது உண்மையானது என்று உறுதிப்படுத்த முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபர் யூடர்னை தொடர்பு கொண்டு ஆதாரங்களை காண்பித்தால் நாம் அதன் உண்மைத்தன்மையை வெளியிட தயார். அதேநேரத்தில், அந்த நபரின் விவரங்களையும் பாதுகாக்க உறுதி அளிக்கிறோம்.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.