மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை.. ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட திட்டமா ?

சென்னை மெரினா கடல் அலையில் மாற்றுத்திறனாளிகள் இறங்கி மகிழ்வதற்கான  பிரத்யேக தற்காலிக பாதையை தமிழக அரசு திறந்து வைத்தது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக பாதை அமைத்ததாக தமிழக அரசை பாராட்டியும், அவர்கள் கடலில் இறங்கி விளையாடி மகிழும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Twitter link  

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ” எத்தனை முறை சென்றாலும் சலிக்காதது கடல் என்பார்கள். அந்தக் கடலலையில் ஒருமுறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வண்ணம் தற்காலிகப் பாதையினை ஏற்படுத்தியுள்ளோம்; விரைவில் நிரந்தரம் ஆக்குவோம். சிறிய பணிதான் இது; பெரிய மாற்றத்துக்குத் தொடக்கமும் கூட. ” எனப் பதிவிட்டு இருந்தார்.

Twitter link  

இதற்கிடையில், 2020 பிப்ரவரி மாதமே மெரினாவிற்கு மாற்றுத்திறனாளிகள் செல்ல பாதை அமைக்கப்பட்டதாகவும், அதன் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஓட்டுவதாக சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். தமிழக பாஜகவினர் இளைஞரணி தலைவர் வினோஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் 2020-ல் வெளியான செய்தியுடன் பதிவிட்டு இருக்கிறார்.

ஆனால், தற்போதைய திமுக அரசு மெரினா கடலில் மாற்றுத்திறனாளிகளை முதன் முதலில் அழைத்து சென்றதாக குறிப்பிடவில்லை. இதற்கு முன்பு மெரினா கடலுக்கு மாற்றுத்திறனாளிகள் அழைத்து செல்லப்பட்டார்களா என்றால், ஆம் சென்று இருக்கிறார்கள். 2016-ல் டிசம்பர் 3-ம் தேதி முதல்முறையாக சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள் மூலம் மெரினா கடலுக்கு அழைத்து செல்லப்பட்டனர் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளை மெரினா கடலுக்கு அழைத்து செல்லும் நடைமுறை மாற்றுத்திறனாளிகள் உரிமை குழுக்கள் சென்னை மாநகராட்சி உடன் இணைந்தே செயல்படுத்தப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் மெரினா செல்லும் பாதை சில நாட்களோ அல்லது வார அளவில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும்.

Twitter link  

நமது யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன், ” சில ஆண்டுகளுக்கு முன்பாக சஷாங்க் சாய் ஐபிஎஸ் மைலாப்பூர் அதிகாரியாக இருந்த போது மாற்றுத்திறனாளிகள் கடல் பார்க்க வேண்டும் எனக் கேட்டதற்கு இணங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அப்போது இருந்து நிரந்தரமான ஏற்பாடு நடக்க வேண்டும் என ஆங்காங்கே பேசி வந்தோம். இன்று சாத்தியமாகிறது. தமிழக அரசுக்கு நன்றி ” எனப் புகைப்படங்கள் உடன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

டிசம்பர் 3-ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் சார்பாக ஆண்டுதோறும் மெரினா கடலுக்கு மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்லும் நடைமுறை இருக்கிறது. 2019-ல் கடற்கரைகளில் தற்காலிக பாதை இல்லாமல் நிரந்தரமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதால் கடந்த ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் எழுந்தது.

2020 பிப்ரவரி 18-ம் தேதி ” Finally, Marina Beach to get disabled-friendly ” எனும் தலைப்பில் வெளியான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில், ” நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நடைபாதைகள் அமைப்பதற்கான கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின்(CRZ) அனுமதியை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளதால், மெரினா மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்ததாக மாற உள்ளது. உழைப்பாளர்கள் சிலை மற்றும் காந்தி சிலைக்கு பின்னால் என இரு இடங்களில் நடைபாதை அமைக்கப்படும் ” எனக் கோப்பு புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது. அந்த புகைப்படத்திலும் NTT Data தன்னார்வலர்கள் குழுவே இடம்பெற்றுள்ளனர்.

2020 பிப்ரவரியில் சென்னை மாநகராட்சி அனுமதி பெற்று இருந்தாலும் கூட தற்போதுவரை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தரமான நடைபாதைகள் அமைக்கப்படவில்லை.

இது நீண்ட காலமாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை. இதற்காக முன்பு தன்னார்வலர்களோடு இணைந்து அதிகாரிகளோ, சென்னை மாநகராட்சியோ எடுத்த முயற்சியின் காரணமாக மற்றும் தன்னார்வலர்களின் முயற்சிக்கு அனுமதி வழங்கியதின் வழியாக நடந்து வந்தது. ஆக, முழுமையாக இந்த திட்டத்தை நிரந்தரமாக அமைப்பது பற்றிய பேச்சுக்கள் இல்லாமலே இருந்தது.

அரசே இத்திட்டத்தை செய்து தற்காலிகமாக ஏற்படுத்தி, மேலும் தற்காலிகமானது மட்டும் அல்ல, நிரந்தரமாக இதை செய்வதற்கான வேலைகள் நடக்கிறது என்கிற செய்திதான் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை யார் முதலில் கொண்டு வந்தார்கள், யார் இரண்டாவது கொண்டு வந்தார்கள் என்கிற கேள்விக்கே இடமில்லை. இதை நிரந்தரமாக யார் செய்கிறார்கள் என்பது மட்டும் தான் கேள்வி. இதில் ஸ்டிக்கர் ஒட்டுவதாக சொல்வது அபத்ததிலும் அபத்தம்.

இதுவரை மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு செல்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. கடலில் கால் நனைக்க வேண்டும் என நினைக்கும் மாற்றுத்திறனாளிகள், கடற்கரையில் மணலைத் தாண்டி கடலுக்கு செல்வது, அவர்களாக தங்களது சக்கர நாற்காலியை நகர்த்தி செல்வது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருந்தது. பெரும்பாடுபட்டு தான் கடந்த காலங்களில் தற்காலிக ஏற்பாடுகள் வழியாக இது நடந்தது.

ஆக, அவர்களின் மிக முக்கியமான அடிப்படையான கோரிக்கை நிறைவேற இருக்கின்றது என்கிற போது அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதில் அரசியல் கலக்க வேண்டிய எந்த தேவையும் இருப்பதாக தெரியவில்லை.

links : 

Finally, Marina Beach to get disabled-friendly

Please complete the required fields.




Back to top button
loader