This article is from May 09, 2021

மாஸ்க் ஆக்சிஜன் அளவை தடுக்குமா ?- ICMR Scientist நேர்காணல் !

ஆக்சிஜனுக்காகவும், மருந்திற்காகவும் மக்கள் மருத்துவமனை மருத்துவமனையாக அலைவதும், சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கேட்பதும், உதவி கரம் நீட்டுவதும் என இந்தியாவே கொரோனாவால் பதற்றமான சூழ்நிலையில் இருக்கையில், தடுப்பூசி மீதான பயத்தினாலோ, அறியாமையினாலோ, ஏன் மருத்துவ செலவு குறித்த அச்சத்தினாலோ சுய பாதுகாப்பு எனும் பேரில் பலரும் அறிவியலுக்கு புறம்பான செய்முறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு வாட்ஸ்அப் புரளிகளுக்கும், மக்களின் அனைத்து அடிப்படை கேள்விகளுக்கும், அச்சத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசெர்ச்சின் (ICMR) நோய்கள் பரவல் மற்றும் தடுப்பு (epidemiology) விஞ்ஞானி திரு. கணேஷ் குமாருடன் நடந்த நேர்காணல் பின்வருமாறு,

கே : யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது ?

ப : 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள், ஏற்கனவே பிற தடுப்பூசிகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள், அதுபோக சொரியாசிஸ், சில வகையான கேன்சர் உள்ளவர்கள் மற்றும் ரஹியூமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் வகையான நோய்களுக்கு immuno moderators போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு தற்போது தடுப்பூசி அறிவுறுத்தப்படவில்லை. மேலும் காய்ச்சல், தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற கோவிட் அறிகுறி உள்ளவர்கள் தடுப்பூசி போடக்கூடாது அவர்கள் முதலில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கே : அப்போ 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதா ?

ப : ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது அவர்களுக்கு அறிவுறுத்தப்படவில்லை. கண்டிப்பாக தடுப்பூசிகள் அவர்களுக்கும் வரும்.

கே : Covaxin or Covishield ? Covaxin தடுப்பூசிக்கு மூன்றாம் கட்ட பரிசோதனையே மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது அது சரிதானா? அதைப்பற்றி உங்கள் கருத்து 

ப : பொதுவாகவே ஒரு நோயைப்பற்றியும் , கிருமியைப்பற்றியும் ஆராய்ந்து தடுப்பூசி தயார் செய்து அதை நடைமுறைப்படுத்த பல ஆண்டுகள் ஆகும். ஆனால் கோவிட்டைப் பொருத்தவரை ஒரு உலகளாவிய கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே முழுமையாக ஆராய்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. Covaxin தடுப்பூசியைப் பொருத்தவரை மூன்றாம் கட்டப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது அறிவியல் பதிப்பகமாக வெளிவருவதற்கான கால தாமதம் ஏற்படுவதால் emergency அடிப்படையில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானது தான்.

கே : இந்தியாவில் இந்த இரண்டு தடுப்பூசிகளினால் ஏற்படும் பக்க விளைவுகள் ஏதாவது இருக்கிறதா? ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான தரவுகள் இருக்கிறதா?

ப : பக்கவிளைவுகள் இல்லாத ஒரு மருந்தோ அல்லது தடுப்பூசியோ இல்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டால் கிடைக்கும் நன்மையையும், போடாவிட்டால் ஏற்படும் தீங்குகளையுமே இங்கு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் தீங்கைப்பற்றி பேசும் அளவிற்கு நன்மைகள் பேசப்படுவதில்லை. தரவுகளின் அடிப்படையில் சுருக்கமாக கூற வேண்டுமென்றால், 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால் தடுப்பூசியினால் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கும் நபர்கள் வெறும் 40 நபர்கள் தான் (0.0004%). கைவலி, காய்ச்சல் போன்ற தற்காலிகமான பக்கவிளைவுகள் அனைவருக்கும் இருக்கும்.

ஆனால் கொரோனா பாதிப்பு 10 லட்சம் நபர்களுக்கு ஏற்பட்டால் அதில் கிட்டத்தட்ட 1.65 லட்சம் (16%) நபர்கள் இறக்கும் கட்டத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. தடுப்பூசி தீவிரமான கோவிட் தொற்றைத் தடுக்கும்.

தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கமாட்டார்கள் என்றில்லை, ஆனால் கொரோனா மூலமாக மரணம் ஏற்படுவதற்கான Risk factor-யை தடுப்பூசி குறைக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் இறப்பு ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த எந்த தரவுகளும் இல்லை என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆகவே மாரடைப்பு, இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் மரணங்களை கொரோனா தடுப்பூசியுடன் இணைக்கக்கூடாது.

கே : ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது ; மாஸ்க் போடுவதால் தான் பற்றாக்குறை ஏற்படுகிறது எனவே மாஸ்க் போட வேண்டாம், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் மூக்கின் பக்கத்தில் சிறிது நேரம் காற்றாடியை வைத்தாலே ஆக்சிஜன் கிடைத்துவிடும் என திடீரென்று ஒருவர் பேசுகிறார். உங்கள் கருத்து என்ன?

ப : மருத்துவமனைகளில் செவிலியர்களும், மருத்துவர்களும் தொடர்ந்து மாஸ்க் போட்டுக்கொண்டு அதற்குமேல் transparent shield போட்டுக்கொண்டுதான் தங்கள் பணியைச் செய்கிறார்கள். மாஸ்க் என்பது ஒரு சல்லடை அதில் ஆக்சிஜன் செய்வதற்கு போதுமான அளவில் துளைகள் இருக்கின்றன. கொரோனா aerosol droplets எனப்படும் அந்த நுண்துகள்களில் இருந்து தான் பரவுகிறது. மாஸ்க் அணிவது அந்த பரவலில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

நம் நுரையீரலுடைய முக்கிய பங்கே காற்றில் இருக்கும் ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து சுவாசித்தலுக்கு வழிவகுப்பது தான். அந்த வேலைக்கு தடை ஏற்படும் போதுதான் வென்டிலேட்டரின் தேவை ஏற்படுகிறது. ஆகவே இது போன்ற அறிவியலுக்கு புறம்பான செய்திகளை நம்ப வேண்டாம்.

கே : பக்க விளைவுகள் வந்தால் நாங்கள் பொறுப்பில்லை என அரசோ, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமோ அல்லது படிவங்களில் குறிப்பிட்டு அதற்கு கையெழுத்து வாங்குவது போன்ற நடைமுறைகள் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறதே ?

ப : ஒரு மருத்துவரின் முன்னிலையில் தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒருவேளை அல்ர்ஜி ஏற்பட்டாலும் உடனடியாக என்ன செய்யவேண்டும் என்பதற்கான பயிற்சியும் முகாமில் உள்ள அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவரோ, செவிலியரோ இல்லாத இடத்தில் தடுப்பூசி போடப்படுவதில்லை. நாங்கள் பொறுப்பெடுக்க மாட்டோம் என எந்த அரசும் கூறவில்லை. Covaxin தடுப்பூசி அவசரகால அடிப்படையில் நடைமுறைக்கு வந்தபொழுது அதில் சில ஆபத்திற்கான காரணிகள் உள்ளது, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அரசை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கு எல்லாம் ஒப்புக்கொண்டு தான் நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்தவே அந்த கையெழுத்து வாங்கப்பட்டது. படிவங்களில் கையெழுத்து வாங்குவது தற்போது நடைமுறையில் இல்லை. Covaxin தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானதே.

கே : ஏற்கனவே கொரோனா வந்தவர்களுக்கு உடம்பில் ஒரு எதிர்ப்பு சக்தி இருக்கும் எனவே கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி அவசியமா ?

ப : கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு சில மாதங்கள் மட்டுமே அதற்கான எதிர்ப்பு சக்தி இருக்கும். அதற்கான சதவீதமும் மிகக்குறைவே என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. தடுப்பூசியால் பெறப்படும் எதிர்ப்பு சக்தி 8 மாதங்கள் வரை நீடிக்கும். எத்தனை முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Covaxin & Covishieldன் செயல்பாட்டினை அறிய மற்றும் விரிவான நேர்க்காணலைப் பார்க்க :

Please complete the required fields.
Back to top button
loader