உ.பி மதுராவில் பசு, மாட்டிறைச்சி கடத்தல் வதந்தியால் முஸ்லீம் ஓட்டுநரை தாக்கிய கும்பல் !

உத்தரப்பிரதேசம் மதுராவில் முஸ்லீம் ஓட்டுநர் ஒருவர் ஓட்டிச் சென்ற வாகனத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்றதாக குற்றம்சாட்டி வலதுசாரி கும்பல் கொடூரமாக தாக்குவதாக இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
In India, as I have been saying, a cow’s life is more important than a Muslim’s life! In UP, a Muslim driver is brutally being beaten by Hindu right-wing mob over accusations of carrying beef in his vehicle! pic.twitter.com/X4ZM9w0CNJ
— Ashok Swain (@ashoswai) March 21, 2022
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் தாக்கப்படும் நபர் கெஞ்சுவதை காணலாம். ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் பெல்டால் தாக்குகிறார்கள். அதில் ஒரு நபர் தலையிட்டு தடுக்க முயற்சித்தாலும், அவரை ஒதுக்கிவிட்டு தாக்குகிறார்கள்.
எங்கு, என்ன நடந்தது ?
மார்ச் 20-ம் தேதி உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் உள்ள கிராமத்தில் இறந்த விலங்குகளின் சடலங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை நிறுத்திய கிராம மக்கள், வாகனத்தில் விலங்குகளின் எலும்புகள் மற்றும் சடலங்களைக் கண்டதால் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளை கடத்தியதாக சந்தேகத்தின் பெயரில் முஸ்லீம் ஓட்டுநரை சிறைப்பிடித்து தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து மதுரா காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், ” அந்த வாகனம் ஒரு கிராமத்தின் தூய்மை இயக்கத்தின் சார்பாக இறந்த விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
थाना जैत क्षेत्रान्तर्गत कस्बा राल में घटित घटना के सम्बन्ध में अपर पुलिस अधीक्षक नगर, मथुरा द्वारा दी गई बाइट। pic.twitter.com/IRz16HRFY9
— MATHURA POLICE (@mathurapolice) March 21, 2022
மதுராவில் உள்ள கோவர்தன் பகுதியைச் சேர்ந்த ராமேஷ்வர் வால்மீகி என்பவர், விலங்குகளின் சடலங்களை அப்புறப்படுத்த மாவட்ட பஞ்சாயத்தில் உரிமம் பெற்றுள்ளார். மதுராவில் இருந்து அருகில் உள்ள மாவட்டத்திற்கு வாகனத்தை அனுப்பி உள்ளார். எங்கள் முதற்கட்ட விசாரணையில் வாகனத்தில் மாடுகளோ, மாட்டிறைச்சியோ ஏதும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்டையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம் ” என மதுரை காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
பசு, மாட்டிறைச்சி கடத்தல் வதந்தியால் முஸ்லீம் ஓட்டுநரைத் தாக்கியதாக வலதுசாரி குழுக்களின் சில உறுப்பினர்கள் உள்பட 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.