சட்டவிரோதமாக கட்சிக் கொடிகளை வைத்த மதிமுக தொண்டர்கள்.. அதிகாரியை தாக்கிய சம்பவம் !

தமிழகத்தில் கட்சிக் கூட்டங்கள் என்றாலே பேனர்கள், கட்அவுட்கள், அலங்கார வளைவுகள், கொடி கம்பங்கள் என மக்கள் செல்லும் பாதையில் வைத்து அனைவருக்கும் இடையூறுகளையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்ட அதிமுக பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்த தருணத்தில் கட்சிகள், நடிகர்கள் என அனைவரும் தங்களின் பங்கிற்கு பேனர்கள், கட்அவுட்களை வைக்க வேண்டாம் என கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால், நடைமுறையில் அப்படி உள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
சென்னை நந்தன் ஒய்.எம்.சி.ஏ திடலில் மதிமுக கட்சியின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்காக வழியெங்கிலும் மதிமுக கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு தெரிவிக்கபட்டது. இதையடுத்து, பொறியாளர் கே.வரதராஜன் சம்பவ இடத்திற்கு நேரில் பணியாட்களுடன் சென்று அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட போஸ்டர்கள், கட்சி கொடிகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.
அப்பொழுது அங்கு வந்த மதிமுக தொண்டர்கள் வரதராஜன் மற்றும் அவரின் ஓட்டுனரை தாக்கியுள்ளனர். இதையடுத்து, பொறியாளர் வரதராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சென்னை மாநகராட்சி பொறியாளரை மதிமுக தொண்டர்கள் தாக்கியதாக முதன்மை செய்தி ஊடங்களில் செப்டம்பர் 17-ம் தேதி செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இந்த சம்பவத்திற்கு மாநகராட்சி தரப்பில் புகார் அளிக்கபட்டது. அதையடுத்து, சைதாபேட்டை போலீசார் தென் சென்னை மேற்கு மதிமுக மாவட்டச் செயலாளரான சுப்பிரமணியம் மீது பிரிவு 294(பி), பிரிவு 323, பிரிவு 353 மற்றும் 307 (கொலை முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா மதிமுக கட்சியின் துனைச் செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசிய பொழுது, அதிகாரிகள் சரியான முறையில் அறிவுறுத்தி இருந்தால் நாங்களே அவற்றை நீக்கி இருந்து இருப்போம். ஆனால், அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர். அது எங்களின் உணர்வை காயப்படுத்தியது ” எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டு உள்ளனர்.
அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், கட்சி கொடிகளை வைப்பதே தவறு. இதில், கேள்வி கேட்கச் சென்ற அரசு அதிகாரியை தாக்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.
இதற்கு முன்பாக திமுக சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்ற கட்சி விழாவிற்கு பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகியது. கேள்விகள் எழுந்த பிறகு அதனை நீக்கி இருந்தனர்.
மேலும் படிக்க : கேள்வி கேட்ட அறப்போர்.. பேனர்களை அகற்றிய திமுக !
மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகளை வைப்பதில் ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பாகுபாடு இல்லை. கட்சியினர் அனைவரும் ஒரே விதமாக இருக்கின்றனர்.
Links :
Chennai: MDMK workers thrash engineer who told them to remove illegal banners
Chennai: Days after techie’s death, MDMK cadres attack engineer for removing illegal hoardings
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.