மதுரை காமராஜர் பல்கலை. தேடல் குழுவில் பாலகுருசாமியை நியமித்தது தமிழ்நாடு அரசா ? ஆளுநரா ?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தரை நியமனம் செய்வதற்காக தேடல் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேடல் குழுவில் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோர் உறுப்பினர்களாக தமிழ்நாடு அரசு தரப்பில் நியமனம் செய்துள்ளது. அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நியமிக்கப்பட்டு உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை மற்றும் நவோதய பள்ளிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர். இதற்கு எதிர்க்கட்சியாக இருந்த போது எதிர்ப்பு தெரிவித்த திமுகவின் தற்போதைய ஆட்சியில் அவர் தேடல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையாகி வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு. ஆனால், அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக பாலகுருசாமி ஆளுநர் ஆர்.என்.ரவி பரிந்துரையின்படியே நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பரிந்துரைபடி அல்ல.
சிண்டிகேட் பிரதிநிதியாக டாக்டர் எம்.ராஜேந்திரன் தமிழ்நாடு அரசு பரிந்துரைபடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பரிந்துரைபடி, செனட் பிரதிநிதியாக டாக்டர் பி.மருதமுத்து நியமிக்கப்பட்டு உள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆளுநர் என்பதால் அவரின் பரிந்துரையின்படியே முன்னாள் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பாலகுருசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலகுருசாமி தலைமையில் உள்ள குழு தகுதியான பேராசிரியர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவர்களில் மூன்று பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைக்கும். அண்ணா பல்கலைக்கழகம் உள்பட மாநில ஆளுநர் வேந்தராக பதவி வகிக்கும் பல்கலைக்கழகங்களில் தேடல் குழு ஒருங்கிணைப்பாளரை மாநில ஆளுநரே பரிந்துரை செய்வார். அவரின் பரிந்துரைபடியே பாலகுருசாமி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.