4000 நெகடிவ்-ஐ பாசிடிவ் எனவும், பிற மாநில மாதிரிகளை தமிழ்நாடு கணக்கில் சேர்த்த Medall ஆய்வகத்திற்கு அனுமதி ரத்து !

தமிழகத்துக்கு வெளியே பரிசோதிக்கப்பட்ட கோவிட்-19 பாசிடிவ் மாதிரிகளை தமிழ்நாடு மாநில கணக்கில் மெடால் தனியார் ஆய்வகம் சேர்திருப்பதை கண்டறிந்த பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் (டி.பி.எச் & பி.எம்) ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்வதற்கான ஆய்வகத்தின் அனுமதியை நேற்று ரத்து செய்தது.

Advertisement

கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்ட பதிவுகள் தொடர்பாக ICMR இணையதளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ” கொல்கத்தா நகரத்திலிருந்து பெறப்பட்ட கோவிட்-19 க்கான RT PCR மாதிரிகளின் முடிவுகள் கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட மாதிரியாக பதிவேற்றப்பட்டன. மே 19 மற்றும் 20-ம் தேதிகளில், பரிசோதனையில் கொரோனா தொற்று ‘இல்லை’ எனக் கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 4000 மாதிரிகளை தொற்று உள்ளதாக ICMR இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தினசரி பதிவு செய்யப்படும் தொற்று உடையவர்களின் விவரங்கள் முழுமையற்றதாக உள்ளன ” என பொது சுகாதாரத்துறை நிர்வாகம் தன் செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

தமிழகத்திற்கு வெளியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் நேர்மறையான முடிவுகளை தமிழக கணக்கில் பதிவேற்றியது தமிழகத்தின் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காட்டப்பட்டதற்கு காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தவறான இந்த தரவு அறிக்கை , இந்திய அரசாங்கம் தமிழகத்துக்கு வழங்கிய தடுப்பூசிகள் உட்பட்ட வளங்களின் ஒதுக்கீட்டை தவறாகக் கணக்கிட வழிவகுக்கும். எனவே, கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும்.

மெடால் ஆய்வகம் கொடுத்த தவறான பரிசோதனை முடிவுகள், அதிகப்படியான நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு செல்ல நிர்பந்திக்கும், இது மருத்துவ பில்கள் மூலம் மருத்துவமனைகள் அதிகம் சம்பாதிக்க வழிவகுக்கும். எனவே ஆய்வகத்திற்கும் , தனியார் மருத்துவமனைகளுக்கும் இடையே பரஸ்பர புரிதல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. எதிர்மறையான முடிவுகளை நேர்மறையாக பதிவேற்றுவது பொது மக்களிடையே தேவையற்ற குழப்பம், பீதி, பதட்டம் மற்றும் மன அழுத்ததை உண்டாக்கும். தவறான முடிவுகளை பெற்ற மக்களுக்கு இது பெருந் தொல்லையை உருவாக்கும்.

கொரோனா பாசிடிவ் வந்த நோயாளிகள் தொடர்பான முழு விவரங்களையும் அளிக்காத காரணத்தினால் அந்த நோயாளிகளை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது என பொது சுகாதாரத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதன் அடிப்படையில் மெடால் ஆய்வகத்திற்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செய்வதற்கான அடுத்த ஆணை வரும் வரை உடனடியாக அனுமதி ரத்து செய்யப்படுகிறது. மேலும், மெடால் ஆய்வகத்தின் நிர்வாக இயக்குநர் இது குறித்து 3 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்கும் படியும் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர், டி.எஸ்.செல்வவிநாயகம் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Advertisement

மேலும், அறிக்கையில் மெடால் ஆய்வகம் அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளது என்பதோடு தன் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப அலட்சியமாக செயல்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள மெடால் ஆய்வகம், அதன் ஆர்டி-பி.சி.ஆர் சோதனை செயல்முறை துல்லியமானது என்றும், பரிசோதனை செயல்முறையிலோ, அதன் தரம் அல்லது துல்லியத்திலோ எந்த சிக்கலும் இல்லை. எனவே சிக்கல் ஐசிஎம்ஆர் சேவையகத்தில் தரவைப் பதிவேற்றும்போது ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப சிக்கலே ஆகும். இந்த பிழைக்காக நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப குறியாக்க பிழை தீர்க்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரால் அனுப்பப்பட்ட குழுவிற்கு எங்கள் ஒத்துழைப்பை தருகிறோம் என அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பொது முடக்கம் நீடிக்கப்படுமா என்கிற சூழ்நிலையில் இருக்கையில் பிற மாநில கொரோனா பாசிடிவ் முடிவுகளை தமிழக கணக்கில் சேர்த்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Links :

tn-bars-medall-laboratory-from-processing-rt-pcr-samples

TN govt cancels permission to private lab for testing RT-PCR samples

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button