முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்து அண்ணாமலை சொன்ன பொய்கள் !

முதுநிலை மருத்துவம் (PG) பயிலத் தகுதி எனக் கூறிக் கொள்ளும் நீட் தேர்வில் ‘ஜீரோ பெர்சண்டைல்’ பெற்றாலும் அவர் மருத்துவம் பயிலத் தகுதியானவர் என ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தினால் நெகட்டிவ் மதிப்பெண் எடுத்தவர்களும் முதுநிலை மருத்துவம் படிக்கத் தகுதியானவர் என்கிற நிலை உருவாகியுள்ளது. 

இந்த அறிவிப்பு தொடர்பாக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வியை முன்வைத்தார். இதனைத் தான் ஆதரிப்பதாகப் பேசத் தொடங்கிய அண்ணாமலை, சில வினாடிகளிலேயே ‘இது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ எனப் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இந்தியாவில் எத்தனை PG இடங்கள் உள்ளன. சென்ற ஆண்டு அவை எவ்வளவு நிரம்பியது என சில தரவுகளைக் கூறியுள்ளார். அவர் சொன்ன தகவல்கள் குறித்த உண்மைத் தன்மையை யூடர்ன் ஆராய முற்பட்டது.

செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசியது : 

முதுநிலை மருத்துவ படிப்பில் ஜீரோ பெர்சண்டைல் கொண்டு வரப்பட்டதற்கு உங்களது கருத்து என்ன எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கூறியது, “இதனை வரவேற்கிறேன். நான் திரும்ப ஒரு கேள்வி கேட்கிறேன். இதைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். போன வருடம் PG Neet-ல் எத்தனை சீட் காலியாக இருந்தது சொல்லுங்கள். மொத்தம் இந்தியாவில் எத்தனை PG சீட் வேகன்ட் இருக்கிறது சொல்லுங்கள். கேள்வி கேட்பதற்கு ரிசர்ச் செய்து விட்டு வர வேண்டும் அல்லவா. நான் பதில் சொல்கிறேன். ரிசர்ச் செய்துள்ளேன்” எனக் கூறிவிட்டு தரவுகளைச் சொல்லத் தொடங்குகிறார். 

“போன ஆண்டு நீட் PG-ல் 50 சதவீதம் என்பது கட்-ஆஃப் ஆக இருந்தது. சென்ற ஆண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட 1,80,000-ற்கும் மேல் PG சீட் இருக்கிறது. அதில் ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை. குறிப்பாக டீச்சிங் பாடங்களாக இருப்பதை நீட் மூலமாக PG-க்கு போகிறவர்கள் எடுக்கவில்லை. அவையெல்லாம் தொடர்ந்து காலியாக உள்ளது. இன்றைக்கு மத்திய அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்றால், PG-க்கு ஜீரோ பெர்சண்டைல். அப்படி என்றால், நீட் நீங்கள் எழுதி இருந்தால் போதும். ஏன் என்றால் அவர்கள் MBBS பாஸ் செய்து விட்டுத்தான் வருகிறார்கள்.

ஆனால், MBBS முடித்துவிட்டு PG படிக்கப் போகிறவர்களுக்கு MBBS-ல் கடைசியில் எழுதக் கூடிய பரீட்சையே ஒரு கட்-ஆஃப். அதையே தற்போது ஒரு கட்-ஆஃப் ஆக கருதுகிறார்கள். அதைத்தான் ஜீரோ பெர்சண்டைல் எனக் கூறுகிறார்கள். எதற்கு என்றால் இந்தியாவில் courses fill-ஆக வேண்டும். 1,80,000 சீட் நிரம்ப வேண்டும். குறிப்பாக டீச்சிங்  படிப்புகள் நிரப்ப வேண்டும்” எனப் பேசியுள்ளார். 

ஜீரோ பெர்சண்டைல் என்றால் என்ன ? 

‘ஜீரோ பெர்சண்டைல்’ என்பது ‘ஜீரோ மதிப்பெண்’ அல்ல. ஒரு தேர்வினை எழுதியவர்களில் கடைசி மதிப்பெண் எதுவோ அதுவே ஜீரோ பெர்சண்டைல் எனப்படும். முதுநிலை நீட் தேர்வினை பொறுத்த அளவில் ஒருவர் அனைத்து கேள்விகளுக்கும் தவறான பதில்கள் அளிக்கும் பட்சத்தில் அவர் பெறக்கூடிய மதிப்பெண் -40 (மைனஸ்). 

2023ம் ஆண்டு நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வில் 13 பேர் நெகட்டிவ் மதிப்பெண் பெற்றுள்ளனர். அந்த பதிமூன்று பேரில் ஒருவரது மதிப்பெண் -40 (மைனஸ் 40) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் ‘NEET PG Rank’ ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பின்படி -40 மதிப்பெண் பெற்ற அந்நபரும்  முதுநிலை மருத்துவம் படிக்கத் தகுதியானவராகக் கருதப்படுகிறார். அந்நபரிடம் பணம் இருக்கும் பட்சத்தில் பணத்தினை கட்டி முதுநிலை மருத்துவராகி விடுவார். இதில் நீட்டிற்கு காரணமாகச் சொல்லப்படும் தகுதி, திறமை என்பவை எங்கிருந்து வருகிறது.

நீட் என்பது தகுதியான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது என இத்தனை காலம் பேசியவர்கள் தற்போது, நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களை முதுநிலை மருத்துவம் படிக்க வைக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

இந்தியாவில் எத்தனை மருத்துவ இடங்கள் உள்ளன ? 

அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்தியாவில் 1,80,000 PG மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இது முற்றிலும் தவறான தகவல்.

இந்தியாவில் உள்ள மருத்துவ படிப்புக்கான இடங்கள் குறித்துத் தேடியதில், ஒன்றிய அரசின் இணையதளத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட்டிருந்த தரவுகள் கிடைக்கப் பெற்றது. 

அத்தரவின்படி, இந்தியாவில் 1,07,948 MBBS இடங்கள் மற்றும் 67,802 முதுநிலை இடங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக ஏகப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நிரப்பப்படவில்லை என அண்ணாமலை கூறியிருந்தார். அது குறித்துத் தேடியதில், நாடாளுமன்றத்தில் கோபால் சின்னையா ஷெட்டி என்பவர் மருத்துவ படிப்பில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் எத்தனை. அதனை நிரப்ப எந்த மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்குப் பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் 2022-23ம் ஆண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது எனக் கூறியுள்ளார். கடந்த கல்வி ஆண்டிலிருந்த மொத்த முதுநிலை மருத்துவ இடங்கள் 64,059. இதில் 4,400 என்பது 6.87 சதவீதம் மட்டுமே. ஒன்றிய அரசின் தரவுகளிலிருந்து அண்ணாமலை கூறியது தவறான புள்ளி விவரம் என்பதை அறிய முடிகிறது. 

அண்ணாமலை கூறுவது போல் டீச்சிங் தொடர்பான படிப்புகளில் மாணவர்கள் இணைவதற்கு ஆர்வம் காட்டவில்லை எனில் அதற்கான வேலை வாய்ப்புகள், சம்பளம் போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தி மாணவர்களை அதில் சேர்க்க ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களை முதுநிலை மருத்துவராக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 

நீட் தகுதியா? இல்லையா? 

12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் அதனை மாற்றி நீட் என்னும் நுழைவுத் தேர்வினை ஒன்றிய அரசு கொண்ட வந்தது. நீட் மூலம் தகுதியான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் காரணமும் கூறப்பட்டது. 

ஆனால், தற்போது அண்ணாமலை என்ன சொல்கிறார் எனில், ‘MBBS மதிப்பெண்ணே அவர்கள் PG படிப்பதற்கான தகுதியாக கருதப்படுகிறது. அதனால் தான் ஜீரோ பெர்சண்டைல் என்னும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது’ என்கிறார். 

மேலும் படிக்க : முத்துராமலிங்கத் தேவர் அண்ணாவை மன்னிப்பு கேட்க வைத்ததாக அண்ணாமலை பேசிய பொய் !

12ம் வகுப்பில் ஒருவர் எடுத்த மதிப்பெண்ணே MBBS சேருவதற்கு போதுமானது. இதனை ஏற்காமல் நீட் என்னும் பெயரில் மாணவர்களையும், பெற்றோர்களையும் சிரமத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கி, தனியார் கோச்சிங் நிலையங்களே கொழுக்க செய்கிறது. போதாததற்கு அண்ணாமலையும் ரிசர்ச் செய்ததாக கூறிக்கொண்டு பொய் பொய்யாக பேசிக்கொண்டு இருக்கிறார். 

ஆதாரங்கள் : 

NEET-PG 2023-NOTICE BOARD COPY

AU4040

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader