மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மீது குண்டர் சட்டம் – அதிகாரப் போக்கின் உச்சம் !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி விரிவுபடுத்த இருந்த சிப்காட் திட்டத்தை எதிர்த்துப் போராடி வந்தவர்களில் 7 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதுக்கு எதிராக எதிர்க் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைமையில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டார். அதில், தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களான திருவண்ணாமலை, தர்மபுரி, நெல்லை, விருதுநகர், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், தேனி மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் புதிய சிப்காட் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் அமைந்துள்ள சிப்காட் பகுதியை விரிவாக்கம் அலகு-3 திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் வடஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3174 ஏக்கரில் நிலங்கள் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. இதில் பெரும்பாலான நிலம் விவசாயம் நிலம் என்பதால் அவற்றைக் கையகப்படுத்தக் கூடாது என்று அக்கிராம விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
விவசாய நிலங்களை அழித்து அவ்விடத்தில் தொழிற்சாலை கட்டும் திட்டத்தை கைவிடக் கோரி கடந்த ஜூலை மாதம் தொடக்கத்தில் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் மேல்மா கூட்டுச்சாலையில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டம் சுமார் 120 நாட்கள் கடந்த நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 2ம் தேதி தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, நியாய விலை கடை அட்டை ஆகியவற்றைச் செய்யாறு சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக ஊர்வலமாகச் செல்ல விவசாயிகள் முயன்றபோது அதற்கு அனுமதி இல்லை எனக் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தனர். இதன் பிறகு நவம்பர் 4ம் தேதி அதிகாலை சுமார் 20 பேரைச் செய்யாறு காவல்துறை கைது செய்தது.
செய்யாறு தாலுகாவில் அமையவுள்ள Melma Sipcot திட்டத்திற்கு விவசாய நிலங்களை தர மறுத்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 20 பேர் நவம்பர் 4 ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் ..
அவர்களில்,
திருமால்,அருள்,பச்சையப்பன்,தேவன்,
மாசிலாமணி,சோழன்,மற்றும் பாக்கியராஜ்… pic.twitter.com/OUZt9PiYlq— Aravindakshan B R (@RealAravind36) November 16, 2023
அவர்களில் அருள், பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரை ஆட்சியரின் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் (நவ.15) கைது செய்து, 7 பேரும் தமிழ்நாட்டில் உள்ள 7 வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குண்டர் தடுப்பு சட்டம் (குண்டாஸ்) என்றால் என்ன ?
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சட்ட விரோதமாக மது தயாரிப்பது மற்றும் விற்பது, கடத்தல் காரியங்களில் ஈடுபடுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது முதலான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கடுமையான சட்டம் தேவையென ‘வன்முறையாளர் தடுப்புச் சட்டம்’ 1982ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
மேற்கண்ட செயல்களைச் செய்பவர்களை ‘குண்டர்’ எனக் கருதி, அவர்களைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டம் ‘குண்டாஸ்’ அல்லது ‘குண்டர் தடுப்பு சட்டம்’ என இச்சட்டத்தை அழைக்கின்றனர். இச்சட்டப்படி நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
குண்டாஸ் சட்டப்படி கைது செய்யப்படுபவரிடம் விசாரணை மேற்கொள்ளாமல் 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம். அவருக்குப் பிணையும் வழங்கப்படாது. மாநில அரசு முடிவு செய்தால் அந்நபரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம். இச்சட்டத்தின் கீழ்தான் மேல்மா சிப்காட் விவசாயிகள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறை விளக்கம் :
ஏழு பேரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ‘அவர்கள் இதற்கு முன்னர் எட்டு வழிச் சாலை போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள். அரசு கொண்டுவரும் திட்டத்திற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டுத் தொடர் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்துள்ளனர்’ எனக் காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேல்மா சிப்காட் விவசாய நிலத்தில் அமையக்கூடாது எனப் போராடியவர்கள் இதற்கு முன்னர் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடினார்கள். அதனால் அவர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறுவது எந்த வகையில் சரியாக இருக்கும்.
சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டத்தைச் செயல்படுத்தலாமென 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது என அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவரது பதிவில், “விவசாயிகளின் வாழ்வாதாரம் நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு முன்வைக்கவில்லை” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
சேலம் 8 வழிச்சாலையைத் தொடரலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது.
நீதிமன்றத்தில் அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஆதரவான கருத்துகளை முன்வைக்கவில்லை- பாஜக அரசு நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது!
திட்டத்தைக் கைவிடுவதாக @CMOTamilNadu வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்! pic.twitter.com/ivZOIGJjux
— M.K.Stalin (@mkstalin) December 8, 2020
இப்பதிவை வைத்துப் பார்க்கையில் ஸ்டாலின் சேலம் 8 வழிச் சாலைக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்பதை உறுதிப்பட அறிய முடிகிறது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் (வரிசை எண்.31) வேளாண் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், தற்போது தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனப் போராடும் விவசாயிகளை “நிலம் இல்லாதவர் கூட பச்சை துண்டைப் போட்டுக்கொண்டு நிலத்தை எடுக்காதே என்கின்றான்” எனப் பேசுவதும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. ஜனநாயக முறைப்படி அமைதியான வழியில் போராடுவது என்பது அவர்களின் உரிமை.
ஒரு அரசு நாட்டின் தொழில் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அதற்கான தொலைநோக்கு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பது ஏற்க தக்கதே. அத்தகைய முயற்சிகள் மேற்கொள்கையில் நில உரிமையாளர்களிடம் சுமுகமாகப் பேசி, அவர்களுக்கு மாற்று இடம் தருவது, தக்க இழப்பீடு அளிப்பது, அங்கு அமைய இருக்கும் தொழிற்சாலையில் நிலம் அளிப்பவரின் குடும்பத்தில் இருந்து ஒருவருக்கு வேலை வழங்குவது என அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு தரப்பில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மாறாகப் போராடுபவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்வதென்பது அதிகாரப் போக்கின் உச்சம்.
கூடுதல் தகவல் :
செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவிட்டுள்ளார். pic.twitter.com/4IUzIAM0nv
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 17, 2023
செய்யார் சிப்காட் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், அருள் என்பவர் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் நீக்கப்படவில்லை.