“100 நாள் வேலையால் ஆள் கிடைக்கல” : தென்காசி விவசாயி மனு.. தரவுகள் கூறுவதென்ன ?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்னும் 100 நாள் வேலைக்குக் கிராம மக்கள் அனைவரும் சென்று விடுவதால், விவசாயம் சார்ந்த வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை எனத் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மனு அளித்துள்ளார்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 100 நாட்களுக்கு வேலையை உறுதி செய்வதே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நோக்கம். இதனை 100 நாள் வேலைத் திட்டம் எனக் குறிப்பிடுவதும் உண்டு. இத்திட்டம் வந்த பிறகு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு ஆட்கள் வருவதில்லை என்ற வாதம் நீண்ட காலமாக முன்வைக்கப்படுகிறது.
தற்போது தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திலுள்ள பாறைப்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளித்துள்ளார். நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வரும் அவர் அளித்த மனுவில், ஒவ்வொரு வருடமும் பயிர் பராமரிப்பு நேரத்திலும் அறுவடை நேரத்திலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGS) எனும் 100 நாட்கள் வேலைக்குக் கிராம மக்கள் அனைவரும் சென்று விடுவதினால், விவசாயப் பணிக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.
எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில் உபரியாக உள்ள ஊழியர்களைத் தனது நிலத்தில் பணி செய்ய அனுப்பி வைத்து உதவக் கேட்டுக் கொண்டதுடன், அவர்களுக்கான கூலி பஞ்சப்படி, பயணப்படி, மதிய உணவு அனைத்தும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாறைப்பட்டி கிராமத்தில் எத்தனை பேர் 100 நாள் வேலைக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் எவ்வளவு பேர், எத்தனை நாட்கள் பணிக்குச் சென்றுள்ளனர். அவர்களின் சராசரி ஊதியம் எவ்வளவு என்பது போன்ற விவரங்களைத் தேடினோம்.
பாறைப்பட்டி கிராம 100 நாள் திட்ட பணியாளர் விவரம் :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2022-23 காலக்கட்டத்தில் பாறைப்பட்டி கிராமத்தில் 468 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 188 பேர் ஒரு நாள் கூட பணிக்குச் செல்லவில்லை.
அதே போல், ஒன்று முதல் 10 நாட்களுக்குள்ளாக 37 பேரும், 11 முதல் 30 நாட்களுக்குள்ளாக 155 பேரும், 31 முதல் 50 நாட்களுக்குள் 64 பேரும், 51 முதல் 90 நாட்கள் வரையில் 22 பேரும், 91 முதல் 100 நாட்களை வரையில் 2 பேர் மட்டுமே பணிக்குச் சென்றுள்ளனர்.
இப்படி நீண்ட பட்டியலில் ஒருவர் மட்டுமே அக்கிராமத்திலிருந்து 100 நாட்கள் முழுமையாக பணிக்குச் சென்றுள்ளார். 100 நாள் வேலையில் பதிவு செய்த மொத்த நபர்களைக் கொண்டு பார்க்கையில், ஒருவர் சராசரியாக 16 நாட்கள் பணிக்குச் சென்றிருப்பார் என்பதை அறிய முடிந்தது.
மேலும், குறைந்த பட்சம் ஒரு நாள் பணிக்குச் சென்ற 280 பேரைக் கொண்டு சராசரி கணக்கிடுகையில், 27 நாட்கள் ஒருவர் பணி வாய்ப்பினை பெற்றுள்ளார். ஒரு ஆண்டில் ஒரு நபர் 27 நாள் பணி செய்யும் பட்சத்தில், மீதமுள்ள 338 நாட்கள் வேலை இல்லாமல் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாகக் கூலி, 100 நாள் வேலைத் திட்டத்தில் ஒருவருக்கு ரூ.240 கூலியாக வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 240 ரூபாய் வீதம் பார்க்கையில் 27 நாட்களுக்கு ரூ.6480 கூலியாக அளிக்கப்படும். இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு ஒருவர் ஆண்டு முழுவதும் வேறு எந்த பணிக்கும் செல்லாமல் தங்களது பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது என்பது இயலாத காரியம். அத்தகைய சூழலில் நிச்சயமாக வேறு பணியினை நாடவேண்டி இருக்கும்.
விவசாய கழனிகளில் வேலை பார்க்க, 100 நாள் வேலையில் அரசு கொடுப்பதைக் காட்டிலும் அதிக கூலி கேட்டு நிலயுடைமையாளர்களை தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கிறார்களா என்ற சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள பாறைப்பட்டியை சேர்ந்த மகேஸ்வரனை தொடர்பு கொண்டு பேசினோம். தனது நிலத்தில் களையெடுக்க ஒரு பெண் தொழிலாளருக்கு ரூ.250 அளிப்பதாகக் கூறினார்.
அரசு கொடுப்பதற்கும், தனியார் நில உரிமையாளர்கள் கொடுப்பதற்கும் 10 ரூபாய் மட்டுமே வித்தியாசம். கூலியில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பின் விவசாயப் பணியினை தவிர்த்து 100 நாள் பணிக்குச் செல்கிறார்கள் எனக் கூறுவதிலோ அல்லது அதிக கூலி கேட்டு வேலைக்கு வர மறுக்கிறார்கள் என்பதிலோ நியாயம் உள்ளது. ஆனால், அப்படி எந்த நிர்ப்பந்தமும் இல்லை.
100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி குறைப்பு :
PRS என்னும் ஆய்வு நிறுவனம் ஊரக வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய மற்றும் செலவு செய்த தொகை பற்றிய விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
இத்திட்டத்திற்காக 2022-23ம் நிதியாண்டில் ரூ.89,400 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிதியாண்டான 2023-24ல் வெறும் 60,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையானது கடந்த ஆண்டை கட்டிலும் சுமார் 33 சதவீதம் குறைவாகும்.
வருடத்திற்கு 100 நாட்களாவது ஒரு குடும்பத்திற்கு வேலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கான நிதியினை ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் 100 நாள் வேலைத் திட்டத்தினால் விவசாய கூலிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என எவ்வித தரவுகளும் இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பது நிதி குறைப்பிற்கு வலுசேர்ப்பதாகவே அமையும்.
அதுமட்டுமின்றி அக்கிராமத்தில் 100 நாள் வேலைக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் 338 நாட்கள் வேலையின்றி இருப்பதுடன், அத்திட்டத்தின் மூலம் அவர்கள் பெறும் ஆண்டு ஊதியம் என்பதும் மிக மிகக் குறைவாகவே உள்ளது. உண்மை இப்படி இருக்கையில் தனி நபரின் விளம்பரத்திற்காக மனு அளிப்பதும், அதனைப் பெரிய விஷயமாகப் பேசுவதும் எந்த அடிப்படையுமற்ற குற்றச்சாட்டாகும்.
மேலும் படிக்க : நூறு நாள் வேலைத்திட்டம் மக்களை சோம்பேறி ஆக்குகிறதா?
இதற்கு முன்னதாக இத்திட்டம் குறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறான தகவல்களை பேசிய போது அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டுள்ளது.
Link :
The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act
Budget 2023 | MGNREGS fund cut by 33% to 60,000 crore