This article is from Jan 29, 2022

திருக்காட்டுப்பள்ளியை மைக்கேல்பட்டி என மதம் மாற்றியதாக வதந்தியை பதிவிட்டு நீக்கிய பாஜக வானதி !

தஞ்சை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை பாஜக மற்றும் இந்து அமைப்பினர் மதமாற்ற விவகாரமாக கையில் எடுத்தது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மாணவி படித்த பள்ளி அமைந்துள்ள மைக்கேல்பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்து, மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து இருந்தனர். மேலும், கிராமத்தில் மதமாற்றம் இதுவரை நடைபெறவில்லை, கிராமத்தில் மறைமுகமாக சிலர் வந்து பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், தமிழக பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசன் தன் ட்விட்டர் பக்கத்தில், ” மதமாற்ற புகார் இல்லை என்கிறது திமுக அரசு. ஆனால், திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரின் பெயரையே மைக்கேல்பட்டி என்று மதம் மாற்றி விட்டார்கள் ” என ஜனவரி 28-ம் தேதி பதிவிட்டு இருந்தார். பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் பலரும் இதே கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Twitter link | Archive link 

வானதி சீனிவாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டது குறித்து செய்தித்தளங்களிலும் வெளியாகியது. ஆனால், தான் பதிவிட்டது தவறான தகவல் என அறியவே வானதி சீனிவாசன் அதை நீக்கி இருக்கிறார்.

கூகுள் மேப் மூலம் பார்க்கையில், திருக்காட்டுப்பள்ளி எனும் பஞ்சாயத்து டவுனில் இருந்து மைக்கேல்பட்டி எனும் கிராமம் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஒரு தேவாலயத்தை சுற்றி மைக்கேல்பட்டி கிராமம் அமைந்து இருப்பதை பார்க்க முடிந்தது.

Catholic Directory of india, Burma and Ceylon 1930 ” எனும் புத்தகத்தில் மைக்கேல்பட்டி, திருக்காட்டுப்பள்ளி (போஸ்ட்) என இடம்பெற்று உள்ளதை பார்க்கலாம்.

திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரை மைக்கேல்பட்டி என மதமாற்றியதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. திருக்காட்டுப்பள்ளி டவுன் பஞ்சாயத்து அருகே அமைந்துள்ள மைக்கேல்பட்டி கிராமத்தை மதம்மாற்றியதாக பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
Please complete the required fields.




Back to top button
loader