Articlesஇந்தியாதமிழ்நாடு

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளிகளுக்கு ஆபத்து என பீகாரில் பொய் பிரச்சாரம் செய்யும் பாஜக, இந்தி ஊடகங்கள்

மிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது; இதனால் இங்குள்ள தமிழ் மக்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுகிறது; எனவே வெளிமாநிலத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என சில அரசியல் கட்சித் தலைவர்கள் பேசுவது, வட மாநிலத்தவர்களை ‘வடக்கன்ஸ்’ எனக் கேலி செய்வது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. 

Advertisement

இது ஒருபுறம் இருக்க, தற்போது பீகார் மாநிலத்தில் தமிழ்நாடு குறித்து வேறுவிதமாகப் பொய் செய்திகள் பரப்பப்பட்டு, தமிழ்நாட்டைப்பற்றி தவறான பிம்பத்தைக் கட்டமைத்து வருகின்றனர். 

பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்குச் செல்லும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, அவர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள் எனப் போலிச் செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. இதே செய்தியை ஊடகங்களும், அம்மாநில எதிர்க்கட்சியாகவுள்ள பாஜக-வும் உண்மைபோல பிரச்சாரம் செய்து வருகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் : 

புலம்பெயர்தல் என்பது ஒரு நகரத்தின் தொழில்துறை வளர்ச்சியின் மூலமாகக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்பு, நிலையான வருமானம் போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்து நிகழக்கூடியதாகும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பல்வேறு காரணிகளினால் வெளிநாடு செல்ல முற்படுவது வழக்கம். அதேபோல், வடமாநிலத்தில் இருப்பவர்கள் தென்னிந்தியாவில் வளர்ச்சியினால் இங்கு இடம்பெயர்ந்து வருவதும் வழக்கமாக உள்ளது.

இத்தகைய புலம்பெயர்வுகள் நிகழும்போது, ஆரம்பக் காலத்தில் அப்பகுதியிலிருந்தவர்கள் தங்களது உரிமைகள் பறிபோவதாகவும், நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெடுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைப் புலம்பெயர் மக்கள் மீது சுமத்துவது வழக்கமாகவே உள்ளது.

உதாரணமாக அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்குமான எல்லைப் பகுதியில் சுவர் கட்டப்படும் என அமெரிக்கத் தேர்தல் சமயத்தில் டானல்ட் டிரம்ப் பேசியது முக்கிய வாக்குறுதியாகப் பார்க்கப்பட்டது. மெக்சிகோ மக்கள் அதிக அளவில் அமெரிக்காவிற்குப் புலம்பெயர்கிறார்கள். இதனைத் தடுக்கவே எல்லையில் சுவர் கட்டும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது டிரம்பின் வாதமாகவுள்ளது.

தமிழ்நாடு VS வட மாநிலம் : 

மேலே குறிப்பிட்ட அமெரிக்கா மெக்சிகோ புலம்பெயர்வு என்பது இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்டது. ஆனால், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதென்பது ஒரே நாட்டின் எல்லைக்குள் நடக்கும் நிகழ்வாகும். இந்தியா ஒரே நாடாக இருப்பினும், அது பல மாநிலங்களைக்  கொண்ட ஒன்றியமாகவே உள்ளது. 

ஒன்றிய அரசின் வேலைகளான அஞ்சல், இரயில்வே போன்ற துறைகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்றும், அவர்களுக்குச் சாதகமான முறையிலேயே தேர்வுகள் நடத்தப்படுகிறது என்றும் நீண்ட காலமாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு தொடங்கிய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் ஆதிக்கத்தையும் சேர்த்தே எதிர்த்து வந்துள்ளனர். ஆனால், அது வடமாநில பெருமுதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகவே இருந்துள்ளது. 

சமீப காலத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இடம்பெயருகிறார்கள் என அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக இந்த விஷயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதைக் கவனிக்க வேண்டியுள்ளது. தான் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள வடமாநிலத்தவர் மீது கஞ்சா, பாலியல் வழக்குகளைப் பதிவு செய்து 1000 பேரைச் சிறையில் அடைத்து உணவு கொடுக்காமல் இருப்பேன் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களாகவே அவர்களது ஊருக்குச் சென்றுவிடுவார்கள் எனச் சீமான் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லையா ? 

பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்குச் செல்லும் தொழிலாளர்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள் எனப் பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக உள்ள பாஜக போராட்டத்தை முன்னெடுக்கிறது. ‘நம் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள். ஆனால், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்கிறார்’ என்ற குற்றச்சாட்டினை வைத்தனர். 

தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் சம்பவங்கள்  வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்தவை.. முன்னரே, அந்த வீடியோக்களின் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் இந்தி பேசுபவர்களை தாக்கி கொல்வதாக வடநாட்டில் பரப்பப்படும் வதந்தி !

முதலில் உள்ள வீடியோ, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த ஜனவரி 22ம் தேதி நிகழ்ந்தது. இது தொடர்பாக ‘தி சவுத் பஸ்ட்’ என்ற இணையதளத்தில் செய்தியும் வெளியாகியுள்ளது. கொலை செய்த நபர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இரண்டாவதாக இருப்பது, கர்நாடக மாநிலம், சாவனுர் (Savanur) என்னும் பகுதியில் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த கொலை சம்பவம். அன்வர் ஷேக் எனும் ரவுடியை சிலர் கொலை செய்துள்ளனர். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இணையதளத்தில் இது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

மூன்றாவதாக இருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்தது. இது குறித்துக் கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஏஎன்ஐ இந்தி செய்தி டிவிட்டர் பக்கத்தில் சிசிடிவி காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளது.

கடைசியாக உள்ள வீடியோ மட்டும்தான் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சம்பவமாகும். கடந்த பிப்ரவரி 13ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொலை வழக்கில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த கோகுல் என்பவரைக் கொலை செய்துள்ளனர். இறந்தவர் வடமாநில தொழிலாளி கிடையாது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளைத் தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ளது. 

இதே கோவை கொலை சம்பவ வீடியோவை, திருப்பூரில் நடந்ததாகவும், 12 பீகார் தொழிலாளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் வேறு விதமாகப் பொய் செய்திகளையும் பரப்பி வருகின்றனர்.

இந்த போலி செய்திகளை வைத்துக் கொண்டுதான் பாஜக-வினர் பீகாரில் பெரும் விவாதத்தைத் தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பைத் தமிழ்நாட்டில் உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் டிவீட் செய்திருந்தார்.  

அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை என விளக்கம் அளித்து டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டார். பொய் செய்திப் பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறியிருந்தார்.

உறுதி செய்யப்படாத நிகழ்வுகளை பாஜக பேசி வருவதாகப் பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டுள்ளார். தேஜஸ்வி யாதவ் கூறியதிலிருந்து, தமிழ்நாட்டைப் பகடைக்காயாக பயன்படுத்தி பீகாரில் அரசியலாக்க பாஜக திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

பீகார் தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு இருப்பதாக ஒரு போலி பிரச்சாரத்தினை பீகார் பாஜக முன்னெடுத்துள்ள இந்த நிலையில், “அப்படி எந்த சம்பவமும் எங்கள் மாநிலத்தில் நடைபெறவில்லை. எங்கள் மாநிலத்தைப் பற்றி வீண் வதந்திகளைப் பரப்பாதீர்கள்” எனத் தமிழ்நாடு பாஜக தரப்பிலிருந்தோ, அண்ணாமலை தரப்பிலிருந்தோ எந்த ஒரு விளக்கமும் தற்போதுவரை அளிக்கப்படவில்லை”.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button