This article is from Oct 22, 2021

புலம்பெயரும் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு.. அதிகம் வெளியேறும் மாநிலம் உ.பி, பீகார் !

இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பின்மை காரணமாக பிழைப்பிற்காக தங்கள் சொந்த மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் புலம்பெயர்பவர்களின் பிரதான மாநிலமாக தமிழ்நாடு மாறி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு வேலைக்காக வந்துக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது தமிழ்நாடு முழுவதிலுமே பரவலாக தென்படுகின்றனர்.

2017-18 பட்ஜெட்டில் காண்பிக்கப்பட்டுள்ள 2016-17ம் ஆண்டு எடுக்கப்பட்ட எகனாமிக் சர்வே படி, புலம்பெயர்பவர்கள் அதிகம் செல்லும் மாநிலம் தமிழ்நாடு. 2001-2011 காலக்கட்டத்தில் சுமார் 10,13,000 பேர் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அடுத்தப்படியாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், 1991-2001 காலக்கட்டத்தில் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை 26,000 ஆகவே இருந்தது. அப்போது மகாராஷ்டிரா மாநிலம் புலம்பெயர்பவர்கள் அதிகம் செல்லும் மாநிலமாக விளங்கியது. ஆனால், 2001-2011 காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.

அடுத்ததாக, புலம்பெயரும் மக்கள் அதிகம் வெளியேறும் மாநிலமாக முதலிடத்தில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலம் இருந்து வருகிறது. 1991-2001 காலக்கட்டத்தில் பிழைப்பிற்காக உத்தரப் பிரதேசத்தில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 29.5 லட்சமாக இருந்தது, அது 2001-2011-ல் 58 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக, பீகாரில் இருந்து 26 லட்சம், ராஜஸ்தான் 7.9 லட்சம், மத்தியப் பிரதேசம் 7.6 லட்சம் பேர் புலம்பெயர வெளியேறுகிறார்கள். பிழைப்பிற்காக புலம்பெயரும் மக்கள் அதிகம் வெளியேறும் முதன்மையான மாநிலங்கள் இந்தி பேசும் மாநிலங்களாக உள்ளன.

தற்போது புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார்கள் என்கிற தரவுகள் ஒன்றிய அரசாங்கத்திடம் இல்லை. தோராயமாக, 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவே குறிப்பிடப்பட்டு வருகிறது. 2011-2021 காலக்கட்டத்தில் எத்தனை லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர் என்கிற தரவுகள் வெளியாகும் போது இந்த எண்ணிக்கை உயரவே செய்யும்.

சொந்த மாநிலங்களில் வெளியேறும் புலம்பெயரும் மக்களுக்கு முதன்மை காரணமாக இருப்பது வேலைவாய்ப்பின்மை. அதேபோல், குறைந்த ஊதியம், அதிக நேரம் வேலை உள்ளிட்டவை வெளிமாநில தொழிலாளர்களை இங்கு பணியில் அமர்த்த காரணமாக அமைகிறது. இப்படி புலம்பெயரும் தொழிலாளர்கள் செல்லும் மாநிலங்களில் மொழிப் பிரச்சனையையும் சந்திக்கின்றனர். பெரும்பாலானோர் தாங்கள் செல்லும் மாநிலங்களில் உள்ள மொழியை தேவைக்கு ஏற்ப கற்றுக் கொள்ளவும் செய்கின்றனர்.

ஆனால், உயர்ரக உணவகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தமிழ் தெரியாத தொழிலாளர்களால், இங்குள்ள மக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து டெல்லி, மும்பை என செல்லும் தமிழர்கள் இந்தி உள்ளிட்ட மொழிகளை பேசக் கற்றுக்கொண்டு வாழ்கின்றனர். இது இயல்பானது. ஆனால், அதிக அளவில் இந்தி மொழி பேசும் தொழிலாளர்கள் இருப்பதால் இங்குள்ளவர் இந்தி கற்றுக் கொண்டு அவர்களுடன் உரையாட வேண்டும் என்பது முரணான ஒன்று.

Link :

budget2017-2018/es2016-17/echap12

Please complete the required fields.




Back to top button
loader