This article is from Jul 11, 2019

நான் விளையாடி இருந்தால் இந்தியா வென்று இருக்கும்-அமைச்சர் ஜெயக்குமார் !

2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும் என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 262-வது பிறந்தநாளன்று சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டு உள்ள அவரின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து தங்களின் மரியாதையை செலுத்தி விட்டு சென்றனர்.

அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , ” இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் ஆவார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது போன்று இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடி இருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும் ” என நகைச்சுவையாக கூறியுள்ளார்.

நான் விளையாடி இருந்தால் இந்திய அணி ஜெயித்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூற அமைச்சர் பாண்டியராஜன் உள்பட கூடி இருந்த அனைவரும் சிரிக்கத் துவங்கினர். அரசியலிலும் சரி , விளையாட்டிலும் சரி வெற்றி, தோல்வி நிலையானது அல்ல எனக் கூறினார்.

அமைச்சர் ஜெயக்குமார் இந்திய அணி பற்றி பேசியவை செய்தியாக வெளியாகியதால், அவை தற்பொழுது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Please complete the required fields.




Back to top button
loader