இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகளின் தொகுப்பு !

“தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் அனைத்திற்கும் உரிமை கோருகிறது. கோவில்களின் சொத்துகள் அரசு மூலம் மோசடி செய்யப்படுகின்றன” எனப் பிரதமர் மோடி பேசியது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்து சமய அறநிலையத்துறை குறித்த நீண்ட வரலாற்றினை நமது யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. 

இதே போல் இந்து சமய அறநிலையத்துறை குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் குறித்த உண்மைகளை இத்தொகுப்பில் காண்போம். 

செப்டம்பர் 2023

விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தத் தடை : 

வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாக நியூஸ் கார்டு ஒன்றினை பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் முதற்கொண்டு பலரும் பரப்பினர்.

Archive Link:

இதே போல் ‘பொது இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதி இல்லை’ என முதலமைச்சர் அறிவித்ததாகவும் ஒரு செய்தியை 2023, செப்டம்பர் மாதம் பரப்பப்பட்டது.

இத்தகைய அறிவிப்புகள் 2021, செப்டம்பர் மாதம் வெளியாகியது. அப்போது கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைக்க, ஊர்வலம் செல்ல அனுமதியில்லை என்றும், தனிநபராகச் சிலைகளைக் கொண்டு செல்லலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. இதனை தற்போது அறிவிக்கப்பட்டது போல் தவறாகப் பரப்பினர். 

மேலும் படிக்க : வீட்டிலிருந்தே விநாயகரை வழிபடுமாறு அமைச்சர் சேகர்பாபு கூறியதாகப் பாஜகவினர் பரப்பும் பழைய செய்தி !

மேலும் படிக்க : தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை எனப் பரவும் பழைய செய்தி !

ஜூன் 2023 

இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் பவுத்த இலச்சினை : 

இந்து மத சின்னம் மட்டுமே இதுவரை இருந்து வந்த தமிழ்நாடு அரசாணையில் தற்போது (திமுக ஆட்சிக்கு வந்த பிறகு) பௌத்தமத சின்னம் இடம்பெற்றுள்ளது. இது வெறும் ஒத்திகைதான். இதற்கு எதிர்ப்பு இல்லை என்றால், அடுத்து சிலுவையும் பிறையும் இடம்பெறும் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் வெளியான அறிவிப்பு ஒன்றினை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். 

Twitter Link | Archive Link

1958ம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வெளியிடப்படும் ‘திருக்கோயில்’ என்னும் மாத இதழில் (2017, நவம்பர் வெளியீடு) இதே இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 2020 ஜனவரி மாதம் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் பின்னால் உள்ள பேனரிலும் அதே இலைச்சினை இடம்பெற்றுள்ளது. 

நீண்ட காலமாக இந்து சமய அறநிலைத்துறையைக்கு பயன்படுத்தப்படும் இலச்சினையை, திமுக ஆட்சிக்கு வந்ததும் பவுத்த சின்னத்தைப் பயன்படுத்துவதாகப் பொய்யான தகவலை பரப்பினர்.

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையில் பௌத்த மதச்சின்னம் கொண்டு வந்ததாகப் பரப்பப்படும் பொய் !

ஏப்ரல் 2023 

தீர்த்தவாரி நிகழ்வில் இளைஞர்கள் இறக்க HRCE காரணம் : 

சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்த துயர சம்பவத்திற்கு, அத்திருவிழா முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் இந்து சமய அறநிலையத் துறை நடத்தாததே காரணமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கொண்டு பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்யவில்லை. தனியார் தான் நிர்வகிக்கின்றனர். அந்த நிர்வாக குழுவின் இணை அமைப்பாளர் ஸ்ரீதரனை தொடர்பு கொண்டு பேசுகையில், கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் கூறினார். 

மேலும் இது குறித்து அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் பேசுகையில், “விபத்து நடந்த குளம் கோயில் குளம் அல்ல. சர்வ மங்கல சேவா என்ற அறக்கட்டளை, 5 பேர் நிர்வாகிகளைக் கொண்டு அக்கோயிலை நிர்வகித்து வருகிறது. இக்கோயிலை HRCE எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  டிரஸ்டினர் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் கூறினார். 

மேலும் படிக்க : இந்து சமய அறநிலையத்துறையின் கவனக் குறைவால் 5 இளைஞர்கள் இறந்தார்களா ?

ஜூன் 2022

கோயில் மண்டபத்தின் மீது செல்போன் டவர் : 

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் மண்டபத்தின் மேல் செல்போன் டவர் வைக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்து வாடகை வசூலிப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. 

அந்த டவர் 2014ம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும். திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் 3.99 லட்சம் செலவிலும், அதன் உபகோவிலான நரசிங்கப்பெருமாள் திருக்கோவிலில் 2.46 லட்சம் செலவிலும் இடிதாங்கி அமைக்க ஒப்பந்தப்புள்ளி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. இடிதாங்கியை செல்போன் டவர் எனத் தவறாக பரப்பியுள்ளனர்.

மேலும் படிக்க : திருமோகூர் கோவிலில் செல்போன் டவர் மூலம் அறநிலையத்துறை சம்பாதிப்பதாக பரவும் இடிதாங்கியின் படம் !

ஆகஸ்ட் 2021 

அர்ச்சகர் பயிற்சி நிலையத்தின் நிலை : 

மதுரையில் உள்ள அர்ச்சகர் பயிற்சி நிலைய கட்டிடத்தின் நிலை மோசமாக இருப்பதாகப் புகைப்படம் ஒன்றினை காயத்ரி ரகுராம், கல்யாண ராமன் எனப் பலரும் பரப்பினர்.

Twitter link | Archive link 

அப்புகைப்படம் 2013ன் போது எடுக்கப்பட்டுள்ளது. 2007 ஆகஸ்ட் மாதம் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. முதல் பேட்ஜில் 207 பேர் பயிற்சி பெற்று இருந்த நிலையில், மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரிகள் சங்கத்தினர் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து பணி நியமனத்திற்குத் தடை வாங்கினர். 

அதனைத் தொடர்ந்து 2015ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தீர்ப்பிற்கு பிறகும் பணி நியமனம் மற்றும் பயிற்சியில் அப்போதைய அதிமுக அரசு கவனம் செலுத்தவில்லை. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட பயிற்சி மைய படத்தினை  தவறாகப் பரப்பியுள்ளனர்.

மேலும் படிக்க : ஆகமத்தை, இறைவனை மதிக்கவில்லை! பழைய புகைப்படத்தை பகிர்ந்து பொங்கும் காயத்ரி ரகுராம்

பழைய அர்ச்சகர்களை வீட்டுக்கு அனுப்பிய HRCE : 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகப் பணி நியமனம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திருச்சி மலைக்கோட்டை கோயில், சமயபுரம் அம்மன் கோவில்களுக்கு காவல்துறையுடன் வந்த JCO-க்கள் பிராமண குருக்கள்களை அனுப்பிவிட்டு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அர்ச்சகர்களாகச் செயல்பட வைத்தனர். நீக்கப்பட்ட குருக்கள்கள் கண்ணீரும் கதறலுமாக விடை பெற்றனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது.

Facebook link 

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலின் இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையரைத் தொடர்பு கொண்டு பேசுகையில், “மலைக்கோட்டை பகுதியில் அப்படி எந்த சம்பவமும் நிகழவில்லை. காலியாக இருந்த பணியிடங்களிலேயே அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். போலீஸ் உதவியுடன் அர்ச்சகர்களை வெளியேற்றியதாகக் கூறும் தகவல் தவறானது ” என விளக்கம் அளித்தார். 

மேலும் படிக்க : பழைய அர்ச்சகர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி புதிய அர்ச்சகர்களை நியமித்ததாக வதந்தி !

ஜூன் 2021

கோயில் நிலத்தை மீட்பது போல செட்டப் : 

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது ஒரு செட்டப். காலி இடத்தில் வாகனம் நிறுத்தியவர்களை வாடகை தரவில்லை என்று அறநிலையத்துறையினரால் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

இந்த நிலம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டண வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டுப் பல லட்சங்கள் சம்பாதிக்கப்பட்டு வந்துள்ளது. 2021ல் ஆட்சி மாறியதும் காவல்துறை, அறநிலையத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைத்து இந்த நிலத்தை மீட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு குறித்தும் மீட்பு குறித்தும் அமைச்சர் அளித்த செய்தியாளர் சந்திப்பும், அப்பகுதி மக்கள் ஊடகத்தில் பேசிய வீடியோக்களும் உள்ளன. 

மேலும் படிக்க : வடபழனி கோவிலின் நிலத்தை மீட்ட நடவடிக்கை செட்டப்பா ? ஆக்கிரமிப்பே இல்லையா ?

நவம்பர் 2020

அர்ச்சகருக்குச் சம்பளம் வழங்கவில்லை : 

சிவலிங்கத்திற்குப் பூஜை  செய்து விட்டு வரும் வயதான அர்ச்சகரின் புகைப்படத்தைப் பதிவிட்டு அவருக்கு இந்து சமய அறநிலையத் துறை சம்பளம் வழங்கவில்லை என பரப்பப்பட்டது. 

அப்படம் குறித்துத் தேடியதில், அது கர்நாடகாவின் ஹம்பி பகுதியில் உள்ள 9 அடி படாவி லிங்கத்தைத் தினமும் சுத்தப்படுத்தி பூஜை செய்யும் கே.என்.கிருஷ்ணா பாட் என்பவரது புகைப்படம் என அறிய முடிந்தது. அம்முதியவர் குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்ல்’ செய்தியும் வெளியாகியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்தவரைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு, இந்து சமய அறநிலையத்துறை சம்பளம் கொடுக்கவில்லை எனத் தவறாகப் பரப்பியுள்ளனர்.

மேலும் படிக்க : ஆண்டவனும், அறநிலையத்துறையும் கண்டுகொள்ளாத அர்ச்சகரா ?| யார் இவர் ?

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader