வாக்குறுதிகளையும், திட்டங்களையும் காப்பி அடிக்கிறார்களா அரசியல்வாதிகள்?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் திமுக நடத்திய மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தை கமல்ஹாசனை பார்த்து மு.க.ஸ்டாலின் காப்பி அடித்து விட்டதாக சர்ச்சையே எழுந்தது. கமல்ஹாசனும் தன்னை மு.க.ஸ்டாலின் காப்பி அடிப்பதாக நேரடியாகவே விமர்சித்து இருக்கிறார்.
கடந்த டிசம்பர் மாதம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ” இல்லத்தரசிகளின் உழைப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு உழைப்பிற்கு ஊதியம் வழங்கப்படும் ” என அறிவித்து இருந்தார். இதனை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூட ஆதரித்து இருந்தார்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் காப்பி அடித்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்து உள்ளதாக கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிகையாளர்களை சந்தித்த போது அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால், “ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,500 வழங்கப்படும். ” என்று அறிவிப்பை வெளியிட்டார். திமுகவின் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் காப்பி அடித்து விட்டதாக திமுக தரப்பில் பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் , “கமல்ஹாசன் சொன்னது இல்லத்தரசிகளுக்கான ஊதியம், ஆனால் திமுக கூறியிருப்பது வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைத்து மகளிருக்கும் பொருந்தும் ‘உரிமைத் தொகை’ இவ்விரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது” என திமுகவினர் கூறுகின்றனர்.
யாரிடம் இருந்து இந்த திட்டம் காப்பி அடிக்கப்பட்டது ?
“2012-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் கிருஷ்ணா தீரத், வீட்டு வேலைகளுக்கான சம்பளத்தை மனைவிகளுக்கு கணவர்களிடம் இருந்து கட்டாயப்படுத்தும் வகையில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிவித்தார். இருப்பினும், இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. 2014-ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு இந்த யோசனை நிறுத்தப்பட்டதாக ” இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.
2012ல் காங்கிரஸ் அறிவித்தது கணவனின் ஊதியத்தில் வீட்டில் வேலைகளை கவனித்து கொள்ளும் பெண்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டியது கட்டாயம் என்பதாகும். தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதாக கட்சிகள் அறிவித்து இருப்பது அரசு சார்பில் வழங்கப்படுவதே.
2012-ல் இருந்து பல கட்டத்தில் இந்த இல்லத்தரசிகளுக்கான ஊதியம் அல்லது ஊக்கத்தொகை பற்றி அனைவரும் பேசினாலும் யாரும் செயல் வடிவம் தரவில்லை. மக்கள் நீதி மய்யம் இந்த இல்லத்தரசிகளுக்கான ஊதியம் வழியாக தமிழகத்தின் GDP உயரும் என பொருளாதார ரீதியாகவும் சிந்தித்து இந்த திட்டத்தை வகுத்து வாக்குறுதியில் கூறியது. ஆனால், இதர கட்சிகள் இதை ஒரு வாக்கு வங்கியாக மாற்றுவதற்காகவே வாக்குறுதிகளை தருகின்றனர் என மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சர்வதேச அளவில் வழக்குகளும், நீண்டகால கோரிக்கைகளும் கூட முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1972ம் ஆண்டு செல்மா ஜேம்ஸ் என்பவரால் International Wages for Housework Campaign (IWFHC) உருவாகப்பட்டது. குறிப்பாக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்தும் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
1995-ல் பெய்ஜிங் நகரில் ஐக்கிய நாடுகள் அவை (United Nations) சார்பாக நடைபெற்ற நான்காவது உலக மகளிர் மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானத்திலும் இது குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் பெண்கள் வீடுகளில் ஆற்றும் பணிகளான குழந்தைகள் மற்றும் முதியோரை கவனித்து கொள்ளுதல், உணவு சமைத்தல், வீட்டைப் பராமரித்தல் போன்ற பணிகள் நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் பெரிதும் உதவினாலும், அவை பெண்கள் செய்யும் சேவைகளாக மட்டுமே பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவசாயம் சார்ந்த வேளைகளில் பெண்களின் பங்கு மதிப்பிடப்படுவதே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனும் இந்த பெய்ஜிங் தீர்மானம் பற்றி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்த திட்டத்திற்கான விதை 1972லேயே போடப்பட்டு 1995ல் செயல் வடிவமும் பெற்று உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பது நிரூபணமாகிறது. மேலும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை அளிக்கும் இந்த திட்டம் 1995 உலக மகளிர் மாநாட்டின் தீர்மானங்களில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. பாலியல் பாகுபாடுகளை களைய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் நன்கு பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
கமல் காப்பி அடித்தாரா ?
இதையடுத்து, கடந்த ஆண்டு கமல்ஹாசன் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் ஆக உயர்த்துவதே எங்கள் கனவு என கூறியது மற்றொருவரின் தொலைநோக்கு பார்வை என்றும், அதற்கு கிரேடிட் கொடுக்காமல் 1000ரூ திட்டத்திற்கு அழுவது ஏன் என்றும் தொழில் முனைவோர் சுரேஷ் சம்பந்தம் போன்றவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்த இதற்கு முன்னால் பல தொழில் முனைவோர்களும் பேசியுள்ளனர். SaaS எனப்படும் தொழில்நுட்பம் வழியாகவும், பல தொழில்முனைவோர்களை உருவாக்கி அதன் வழியாக தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்ற முடியும் என்று தொழில் முனைவோரான சுரேஷ் சம்பந்தம் பதிவு செய்து உள்ளார். இதுகுறித்து, சுரேஷ் சம்பந்தம் அவர்களை தொடர்பு கொண்டு பேசிய போது பதில் அளிக்கவில்லை. பதில் அளிக்கும்பட்சத்தில் அதையும் இணைக்கிறோம்
மேலும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்ற இந்திய அரசும் 2015ஆம் ஆண்டு McKinsey உடன் இனைந்து இந்திய அரசு வெளியிட்ட திட்டத்திலும், 2019ஆம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட திட்டத்திலும் காணலாம்.
கமல் தனது திட்டத்தில் இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றுவதன் மூலமும் மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலமும், அனைத்து வீட்டிற்குமான அதிவேக இணையதள சேவை என்ற 7 திட்டத்தின் வழியாக 5 லட்சம் தொழில்முனைவோர்களை உருவாக்குதலின் மூலம் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்றமுடியும் என கூறியுள்ளார்.
தமிழக பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் ஆக உயர்த்துவது தொடர்பான தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் பலரால் முன்னிலைப்படுத்தப்பட்டு வருவது உண்மை.
சட்டப்படி சரியா ?
தமிழகத்தில் பெரிதும் அறியப்படாத இல்லத்தரசிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அரசியல் கட்சிகள் பெண்களின் வாக்கு வங்கியை குறி வைத்து மாற்றி மாற்றி அறிவித்து வருகிறார்கள் என்பது தெளிவாய் புலப்படுகிறது. ஏற்கனவே, அதீத கடனில் இருக்கும் தமிழக அரசு இதை எப்படி சமாளிக்கும் எனத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தேர்தல் ஆணையம் தேர்தல் அறிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் “வழங்கப்படும் வாக்குறுதிகள் நியாயமானவையாக இருப்பதுடன், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் விரிவாக விளக்கப்பட்டு ஒளிவுமறைவற்ற தன்மை, நடுநிலைத் தன்மை மற்றும் வாக்குறுதிகள் நம்பகத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். நிறைவேற்றப்படக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வாக்காளர்களின் நம்பிக்கையைக் கோர வேண்டும்” கூறப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதி வெளியிடும் அனைத்து கட்சிகளும் இதை நினைவில் கொள்ள வேண்டும்
Links :
Kamal Haasan promises ‘payment’ to women for their work at home, unveils economic agenda for TN
A salary to women for domestic work institutionalises idea of men as ‘providers’
Homemakers to get salaries according to new govt proposal
https://site.ieee.org/indiacouncil/files/2019/07/p86-p89.pdf
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1565669
Beijing Declaration and Platform for Action*