காலி ஆம்புலன்ஸை அனுப்பி கூட்டத்தை கலைக்க பார்க்கிறார்கள்| கமல் குற்றச்சாட்டு சரியா ?

தமிழக தேர்தல் பிரச்சாரங்கள் அனல் பறக்க நடந்துக் கொண்டிருக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தங்கள் தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது பரப்புரையை இடை நிறுத்துவதற்காகவே அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு ஒன்றைத் தெரிவித்து இருக்கிறார்.
சாலையோரம் அமைக்கப்பட்ட மநீம பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை முழுவதும் நிரம்பி இருக்கையில், அந்த வழியாக வரும் ஆம்புலன்ஸ் ஹாரன் உடன் கடந்து செல்வதை பார்க்க முடிந்தது. ஆம்புலன்ஸ் சென்ற உடன் பேசிய கமல்ஹாசன், ” வழக்கமாக கூட்டம் அதிகமானால் ஆம்புலன்ஸ் வரும். உள்ளே ஆள் இருந்தாலும் அனுப்பிடுங்க, இல்லாமல் போனாலும் வேகமாக அனுப்பிடுங்க. என்னைப் பேசக்கூடாது என அதிக சத்தத்துடன் வருகிறது. நன்றாக கூட்டம் கூடினால் காலி ஆம்புலன்ஸ் கத்திக் கொண்டே போகும். பல ஊர்களில் ஆம்புலன்ஸ் வருகைக்காக வழி விட கூட்டமே களைந்து விடுகிறது ” என பேசி இருப்பார்.
மற்றொரு பரப்புரை கூட்டத்தில்(15வது நிமிடத்தில்), ” வழி இல்லாத ரோட்டில் ஆம்புலன்ஸ் கத்துகிறது. மக்கள் நீதி மய்யம் கூட்டம்னா அனுப்பி விடு ஆம்புலன்சை. அவர்கள் ஆம்புலன்ஸ் அனுப்ப அனுப்ப எங்களின் ஆரோக்கியம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே உண்மை ” என பேசும் போது கூட்டத்தின் பின்னே ஒரு 108 ஆம்புலன்ஸ் சென்றுக் கொண்டு இருக்கிறது.
கமல்ஹாசன் தங்களின் அனைத்து சாலையோர கூட்டங்களின் போதும் ஆம்புலன்ஸை அனுப்பி விடுவதாக ஆளும் தரப்பு மீது குற்றச்சாட்டி வருகிறார். அவர் கூறுவது போன்று, சமீபத்தில் நடைபெற்ற இரு கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வீடியோவை பார்க்க முடிந்தது.
அதே நேரத்தில், கமல்ஹாசனின் இக்குற்றச்சாட்டை சிலர் கண்டித்தும், நாகரீகமில்லை எனக் கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.
லட்சக்கணக்கானக்கில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரண்டிருந்த சமயத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதை தொல்லையாக பார்க்கவில்லை. CAA போராட்டங்களின் போதும் இசுலாமியர்கள் ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் பேசுவதை நிறுத்தி வழிவிடச் சொல்லி அறிவிப்பு செய்வார்கள். மனிதநேயமில்லா அரசியல் ஆபத்தானது. pic.twitter.com/aOE6z9MtMI
— Thirumurugan Gandhi திருமுருகன் காந்தி (@thiruja) March 8, 2021
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ” லட்சக்கணக்கில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திரண்டிருந்த சமயத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதை தொல்லையாக பார்க்கவில்லை. CAA போராட்டங்களின் போதும் இசுலாமியர்கள் ஆம்புலன்ஸ் வரும்போதெல்லாம் பேசுவதை நிறுத்தி வழிவிடச் சொல்லி அறிவிப்பு செய்வார்கள். மனிதநேயமில்லா அரசியல் ஆபத்தானது ” என கமல்ஹாசன் குற்றச்சாட்டை ட்விட்டரில் விமர்சித்து இருந்தார்.
#கமல்ஹாசன் பரப்புரைக்கு செல்லும் இடம் எல்லாம் எப்படி சரியாக ஆம்புலன்ஸ் வருகிறது? #கொளத்தூர் – 2, அம்பத்தூர் – 4, தங்கசாலை – 2 முறை. அதுவும் அவர் மேடைக்கு வந்த பிறகு தான். #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் தனது சொந்த செலவில் மக்களுக்காக ஆம்புலன்ஸ்கொடுத்தவர்கள். மனிதநேயம்அதிகம் எங்களுக்கு. pic.twitter.com/Faj17Nz3Xv
— Balamurugan (@ibalamurugan72) March 8, 2021
அதற்கு கமல் ஆதரவாளர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் பலமுறை ஆம்புலன்ஸ் வருவதாகக் குறிப்பிட்டு வருகிறார்கள். சிலர் ஆம்புலன்ஸ் செல்வதை அரசியல்படுத்தி பேசுவது சரியில்லை எனக் கருத்து தெரிவிக்கின்றனர். காலி ஆம்புலன்சாக இருந்தால் நோயாளிகள், பாதிக்கப்பட்டவரை அழைத்து செல்வதற்காக கூட இருக்கலாம் என்கிற கேள்வியும் எழுகிறது.
Links :
மாஸ் காட்டிய கமலின் தேர்தல் பிரச்சாரம்
Kamal Haasan election campaign