பிரதமர் நரேந்திர மோடி “படிக்காத மேதை”.. படித்தாரா, இல்லையா ?!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உரையில், பிரதமர் மோடியை படிக்காத மேதை எனக் கூறிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஜூன் 26-ம் தேதி அன்று சென்னையில் பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனை குறித்து  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர்கள் என பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Facebook link | Archive link  

பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை (10 வது நிமிடத்தில்) பேசுகையில், ” டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை கொண்டு வந்த போது ப.சிதம்பரம் அவர்கள் நாடாளுமன்றத்தில் சொன்னார், ஐயோ.. படிக்காதவங்க தான் இந்தியாவில் அதிகமாக இருக்காங்க. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கொண்டு வந்து அவர்களுக்கு எல்லாம் தெரியாதுங்க, படிக்காதவாங்க எனக் கூறினார்.

இங்கு கர்மவீரர் காமராஜர் படிக்காதவர் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான். ஆனால் இன்று அந்த படிக்காத மேதை நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் இருந்து செய்து இருக்கக்கூடிய சாதனையை பாருங்கள். போன மே மாதத்தில் மட்டும், இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலமாக 612 கோடி பரிமாற்றங்கள் நடந்து உள்ளன. மக்கள் தொகை 135 கோடி, ஒரே மாதத்தில் 612 கோடி பணப் பரிவர்த்தனை பண்ணி இருக்கோம். நாம் பரிவர்த்தனை செய்த பணம்  10,41,521 கோடி ” எனப் பேசி இருக்கிறார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுவில் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் வரை பெற்று உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடி வாங்கியதாக கூறப்படும் பட்டம் போலியானது எனக் குற்றச்சாட்டுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி படிக்காத மேதை என அண்ணாமலை பேசியது சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Please complete the required fields.
Back to top button
loader