ஏசி அறையில் குப்பைகளா ?| வைரலாக்கப்படும் பிரதமர் மோடியின் வீடியோ !

” உலகத்திலேயே வெளியே இருந்த குப்பையை கொண்டு வந்து ஏசி ஆடிட்டோரியம் உள்ளே கொண்டு வந்து குப்பை அள்ளுவது போன்று விளம்பரம் தேடுற ஒரே கோஷ்டி இவங்க தான். அதுவும் சிகப்பு கம்பளம் விரித்து குப்பை கொட்டி இருக்காங்க ” என்ற வாக்கியத்துடன் பிரதமர் மோடி குப்பைகளை அகற்றும் வேலையாட்கள் உடன் அமர்ந்து இருக்கும் வீடியோ முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விளம்பரம் தேடுவதற்காக பிரதமர் மோடி இவ்வாறு செய்து இருப்பதாக பல பதிவுகளில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. வைரலாகும் வீடியோ எங்கு, எதற்காக நிகழ்ந்தது என்பது குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.
செப்டம்பர் 11-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா எனும் பகுதியில் ” Swachhta hi sewa 2019 “ எனும் பிரச்சாரத்தை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை தொடர்பான பிரச்சாரமே Swachhta hi sewa.
இந்நிகழ்ச்சியின் போது குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக்கை பிரித்து எடுக்கும் பெண்களுக்கு மத்தியில் பிரதமர் பேசும் பொழுது, ” அக்டோபர் 2, 2019-க்குள் நமது வீடுகள், அலுவலங்களில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கின் பயன்பாடுகளை அகற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய பணியில் இணைய சுய உதவிக்குழுக்கள், சிவில் சமூகம், தனி நபர்கள் என அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அரசு அலுவலங்களில் இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தக்கூடாது. உலோகம், மண்பாண்டங்களால் செய்யப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் ” எனக் கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் மூலம் தேசிய அளவில் பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும். மேலும், செப்டம்பர் 11-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மற்றும் அவற்றை பிரித்ததோடு வருகிற தீபாவளிக்கு முன்பாக மறுசுழற்சி செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர்.
Swachhta hi sewa பிரச்சாரத்தை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றும் தொழிலாளர்கள் உடன் அமர்ந்து பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த கேள்விகளை கேட்டுள்ளார். பிரதமர் அருகில் கைகளில் உறைகள் மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்து இருக்கும் பெண் தொழிலாளர்கள் உடன் பேசும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று இருக்கிறது. மேலும், குப்பைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் சென்று இயந்திரத்தில் கொட்டிய காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
As we begin ‘Swachhata Hi Seva’ and pledge to reduce single use plastic, I sat down with those who segregate plastic waste.
I salute them for their hardwork and contribution towards fulfilling Bapu’s dream. pic.twitter.com/3ARJ2CenZH
— Narendra Modi (@narendramodi) September 11, 2019
இது குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் ” Swachhta hi sewa “-வை தொடங்கினோம் மற்றும் ஒன்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை குறைக்க உறுதிமொழி ஏற்றோம். நான் பிளாஸ்டிக் குப்பைகளை பிரித்து எடுக்கபவர்களுடன் அமர்ந்து இருக்கிறேன். அவர்களின் கடுமையான உழைப்பிற்கு வணங்குகிறேன் ” எனப் பதிவிடப்பட்டு உள்ளது.
Swachhta hi sewa பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்ச்சியின் பொழுது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டி அதில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து அதனை இயந்திரத்தில் சேகரிக்கும் பணி செய்து காண்பிக்கப்பட்டுள்ளது.
Swachhta hi sewa 2019 நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து எடுக்கும் பெண்களுடன் அமர்ந்து பேசும் வீடியோ காட்சிகளே சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Proof :
Swacchta hi Seva 2019: Explained