புல்வாமா நினைவு நாள்: 2019-ல் பரவிய வதந்திகளின் தொகுப்பு !

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎஃப் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து 2 வருடங்கள் ஆகிய நிலையில், நினைவு நாளான இன்று உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் #PulwamaAttack எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
எனினும், வாட்ஸ்அப் உள்ளிட்டவையின் பதிவுகளில், 2019 தாக்குதலின் போது பரப்பப்பட்ட தவறான வீடியோவையும் இணைத்து பகிர்ந்து வருகிறார்கள். ஆகையால், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் தொடர்பாக பரவிய தவறான வீடியோக்கள், புகைப்படங்கள், வதந்திகளை ஓர் தொகுப்பாக இதை எழுதி இருக்கிறோம்.
விரிவாக படிக்க : புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிட வீடியோக்கள் உண்மையா ?
புல்வாமா தாக்குதலின் கடைசி நிமிடங்கள் என இவ்விரு வீடியோக்களும் இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டன. ஆனால், முதல் வீடியோ எகிப்து நாட்டிலும், இரண்டாம் வீடியோ ஈராக் நாட்டிலும் எடுக்கப்பட்டது.
விரிவாக படிக்க : இறந்த வீரர்களின் சவப்பெட்டிகள் என பரவும் படங்கள் உண்மையா?
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டிகள், அதைப் பார்த்து கண்ணீர் சிந்திய வீரர்கள் என இவ்விரு புகைப்படம் வைரல் செய்யப்பட்டன. ஆனால், முதல் புகைப்படம் 2017-ம் ஆண்டிலும், இரண்டாம் புகைப்படம் 2011-ம் ஆண்டிலும் எடுக்கப்பட்டது. அதேபோல், உயிரிழந்த வீரர்களின் சவப் பெட்டிகள் முன்பாக பிரதமர் மோடி கேமராவை பார்த்து வணங்கியதாக வதந்தியைப் பரப்பினர்.
விரிவாக படிக்க : புல்வாமா தாக்குதலுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீரர்கள் புகைப்படமா ?
புல்வாமா தாக்குதலுக்கு 9 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட வீரர்களின் புகைப்படம் என இப்புகைப்படம் இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், இப்புகைப்படம் தாக்குதலுக்கு முந்தைய மாதத்திலேயே சமூக வலைதளங்களில் பதிவாகிய வேறொரு புகைப்படம்.
விரிவாக படிக்க : இந்திய வீரர்கள் மரணத்திலும் அரசியல் லாபத்திற்காக வதந்திகள் !
இவை மட்டுமின்றி, புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் சார்ந்தும் மு.க.ஸ்டாலின், ஸ்மிருதி இரானி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை வைத்து போலியான நியூஸ் கார்டு செய்திகள் மற்றும் இறந்த வீரர்கள் என தவறான புகைப்படங்கள் வைரல் செய்யப்பட்டன.