This article is from May 11, 2021

மோடியை புகழ்ந்த தி டெய்லி கார்டியன் தளம், பரப்பிய பாஜக தலைவர்கள்.. சர்வதேச செய்தி போன்ற சித்தரிப்பா ?

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பதற்றமான சூழ்நிலையில் இருக்கையில், ” பிரதமர் மோடி கடினமாக உழைக்கிறார், எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்காதீர்கள் ” எனும் தலைப்பில் தி டெய்லி கார்டியன் என்ற இணையதளத்தில் வெளியான செய்தியை மத்திய பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் என பலரும் சொல்லி வைத்தது போன்று பகிர்ந்து இருந்தனர்.

 

கொரோனா பாதிப்பு தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து செய்தி வெளியிட்டு இருந்தன. இந்நிலையில், தி டெய்லி கார்டியன் எனும் பெயரில் இருக்கும் இணையதளத்தின் செய்தியை பாஜக தலைவர்கள் பலரும் ஒருசேர பகிர்ந்து இருக்கிறார்கள்.

தி கார்டியன் என்பது பிரபல சர்வதேச செய்தி நிறுவனமாகும். அதன் பெயரில் தி டெய்லி கார்டியன் என இணையதளத்தின் பெயர் இருப்பது தி கார்டியனின் கிளை தளம் என பார்க்கும் பலரையும் எண்ணத் தோன்ற வைத்துள்ளது. அதே நேரத்தில், அது சர்ச்சையாகவும், இதுவும் ஒரு அரசியல் என கடும் விமர்சித்திற்குள்ளும் உள்ளாகி இருக்கிறது.

ஏன் இந்த சர்ச்சை ?

தி டெய்லி கார்டியன் என்ற இணையதளத்தில்,  “மோடி கடினமாக உழைக்கிறார்…” என்ற தலைப்பில் பதிவிட்டு இருந்த கட்டுரையை அமித் மால்வியா, அனுராக் தாகூர் போன்ற பல பாஜகவினர் ஒரே சமயத்தில் பகிர்ந்ததே அதற்கு காரணமாக கூட இருக்கலாம்.

G Kishan Reddy – https://archive.vn/Q5zr0 – 2.01 PM

Amit Malviya – https://archive.vn/7TANa – 1.56 PM

Gopal Krishnan Agarwal – https://archive.vn/xkUsH – 11.10 AM

Anurag Thakoor – https://archive.vn/M0A6c – 11.10 AM

Kiren Rajjju – https://archive.vn/pFD5C – 10.29 AM

இதனைத் தொடர்ந்து அந்த “தி டெய்லி கார்டியன்” பக்கத்தை பற்றிய மேலும் விவரத்தை எடுக்க தொடங்கினோம். தி டெய்லி கார்டியன் தளம் 17-04-2020 அன்று தொடங்கப்பட்டது. அதனை பதிப்பித்தவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ITV என்ற நிறுவனம். எனவே “தி டெய்லி கார்டியன்” இந்திய நாளிதழ் என்றும் “தி கார்டியன்”க்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரிய வருகிறது.

மேலும் “தி டெய்லி கார்டியன்” இணையதளம் தொடங்கிய அதே மாதம் தான் அதன் அவர்களின் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கம் தொடங்கி உள்ளனர்.

எனினும், ITV நிறுவனம் தன்னுடைய தளத்தில் தான் இந்த தி டெய்லி கார்டியன் தளத்தை பராமரிப்பது குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை. அவர்கள் சண்டேகார்டியன்லைவ் தளம் பற்றி மட்டுமே குறிப்பிட்டு உள்ளனர். மேலும் இந்த தி டெய்லி கார்டியன் பத்திரிகையானது எந்த விளம்பரமும் இல்லாமல், சந்தா கட்டணமும் இல்லாமல், ஒரு தெளிவான தளத்தின் தகவல் பக்கமும் இல்லாமல் இயங்கி வருகிறது.

இவர்கள் “தி கார்டியன்” என்ற செய்தி நிறுவனத்தை போலவே அவர்களின் இணைப்பெயரை கொண்டு இயங்குவதாலும் பாஜக பிரமுகர்கள் பலரும் இதைத் தொடர்ந்து நம்பகத்தன்மை வாய்ந்த பத்திரிக்கை போல பரப்புவதாலும் சாமானிய மக்கள் இந்த “தி டெய்லி கார்டியன்”யை “தி கார்டியன்” என நம்புவதற்கான வாய்ப்பும் சாத்தியக்கூறும் அதிகமாக தெரிகிறது.

அடுத்ததாக, இக்கட்டுரையை ” Opinion ” என மேற்கொள்காட்டி உள்ளனர். இதை எழுதியது சுதீஷ் வர்மா எனும் பாஜகவைச் சேர்ந்தவரே. கட்டுரையில் இறுதியில், ” பாஜகவின் ஊடக தொடர்பாளர் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் கட்சியின் செய்தித் தொடர்பாளராக கலந்து கொள்கிறார். ” நரேந்திர மோடி : தி கேம் சேஞ்சர் ” எனும் புத்தகத்தை எழுதி உள்ளார். வெளிப்படுத்திய கருத்துக்கள் தனிப்பட்டவை ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கிடையில், தி டெய்லி கார்டியன் செய்தியை பரப்புவது தொடர்பாக தி கார்டியன் தளம் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டது போல சமூக வலைத்தளங்களில் பதிவொன்று பரவி வருகிறது.

அந்த பதிவில், ” தி டெய்லி கார்டியன் தளம் தி கார்டியன் தளத்தை சார்ந்தது அல்ல, எங்கள் பெயரில் மற்றொரு பகடி தளம் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை” என்று குறிப்பிட்டு உள்ளது.

ஆனால், தி கார்டியன் உடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு பதிவு இல்லை, குறுகிய நேரத்தில் பதிவு இருந்ததால் கூகிள் கேட்ச்’யிலும் இல்லாத காரணத்தால் அவர்கள் அதை பதிவு செய்துவிட்டு அழித்து விட்டார்களா என்றும் உறுதியாக அறிய முடியவில்லை.

சர்வதேச செய்தி நிறுவனமான தி கார்டியன் உடைய கிளை நிறுவனம் போன்ற பெயரைக்கொண்ட தி டெய்லி கார்டியன் எனும் இணையதளத்தில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பாஜகவைச் சேர்ந்தவர் எழுதிய கட்டுரையை பாஜகவின் தேசிய தலைவர்கள் பலரும் பகிர்ந்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து இருக்கிறர்கள். இது இக்கட்டான சூழ்நிலையில் அரசின் மீதான விமர்சனத்தை தடுக்க செய்யப்பட்ட அரசியல் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Please complete the required fields.




Back to top button
loader