பறக்கும் படை பறிமுதல் செய்த பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?

மக்களவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணமோ பரிசுப் பொருளோ கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய சோதனையின் போது சாதாரண மக்களின் பணமும் பறிமுதல் செய்யப்படுகிறது. 

சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஊட்டிக்குச் சுற்றுலா வந்தபோது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி பணம் இருந்ததாகக் கூறி அதிகாரிகளால் அப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.69,400-ஐ அவர்கள் திரும்பப் பெற்றனர். இவ்வாறு பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது?

தேர்தல் நடத்தை விதி : 

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளதாகக் கடந்த 16ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இவ்விதிகள் தேர்தல் முடிவு வெளியாகும் நாள்வரை பின்பற்றப்பட வேண்டும். அந்த நீண்ட விதிமுறையில் பணப் பட்டுவாடாவைத் தடுக்க அமைக்கப்படும் பறக்கும் படையும் ஒன்று. 

அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படை (Flying Squad Teams), நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் 702 தேர்தல் பறக்கும் படை குழுக்கள் மற்றும் 702 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  இக்குழுக்கள் எட்டு மணி நேரம் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளும். 

பணம் பறிமுதல் : 

ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-த்தை விட அதிகமான பணமோ நகையோ வைத்திருந்தால் அது தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், ரூ.10,000-க்கு அதிகமான பரிசுப் பொருட்கள் வைத்திருந்தாலும் பறிமுதல் செய்யப்படும். அப்படி பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்குச் சம்மந்தப்பட்டவரிடம் உரிய ரசீது வழங்கப்பட்டு, அப்பணம் அரசுக் கருவூலத்தில் வைக்கப்படும். 

பத்து லட்சத்திற்கு மேல் பணமோ அல்லது பொருளோ பிடிபட்டால் இது குறித்து தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் தெரிவிப்பர். இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளும் போது பெண் ஒருவரின் பையினை சோதிக்க நேரிட்டால், பெண் அதிகாரிதான் சோதனை செய்ய வேண்டும். பெண் அதிகாரி இல்லையெனில் அவரது பையைச் சோதனை செய்யக் கூடாது. 

பணம் பிடிக்கப்படும் வாகனத்தில் கட்சிக் கொடி, சுவரொட்டி, மது, ஆயுதம், பரிசுப் பொருட்கள் இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கூடுதல் அறிவுறுத்தலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் உள்ளது. ஆனால், ஆணையத்தால் வரையறுக்கப்பட்டதை விட அதிகப் பணம் கொண்டு செல்லும் அனைவரிடம் இருந்தும் பணத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் சோதனை அதிகாரிகளுக்கு உள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் குறித்து சந்தேகம் இருப்பின் வழக்கும் பதிவு செய்யப்படும்.

ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஒரு லட்ச ரூபாய் வரை கொண்டு செல்லலாம். அப்படிக் கொண்டு செல்லும் பணம் இந்த தொகுதிக்கு இந்த செலவிற்கானது என அக்கட்சியின் பொருளாளரிடம் கடிதம் பெற்றிருக்க வேண்டும். இப்படி முறையாகக் கடிதம் பெற்ற பணம் பறிமுதல் செய்யப்படாது.

பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி : 

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உரிய ஆவணங்கள் சமர்ப்பித்துத் திரும்பப் பெற ஏதுவாக (i) CEO, Zila Parishad/CDO/PD, DRDA (ii) Nodal Officer of Expenditure Monitoring in the District Election Office (Convenor) மற்றும் (iii) District Treasury Officer ஆகியோர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கும். 

கைப்பற்றப்பட்ட பணம் அல்லது பொருள் தொடர்பாக இக்குழு தானாக முன்வந்து விசாரித்தோ அல்லது தகுந்த ஆவணங்களைச் சமர்ப்பிப்பவரிடமோ ஒப்படைக்கும். 

பணத்தை வங்கியிலிருந்து எடுத்திருந்தால் அதற்கான ரசீது, ஒருவரிடம் இருந்து பெற்றிருந்தால் அதற்கான ஆவணம், ATM-ல் இருந்து எடுத்திருந்தால் அதற்கான ரசீது எனப் பணம் பெற்றதுக்கான ஏதாவது ஒரு ஆவணத்தைக் காண்பிக்க வேண்டும். அதேபோல் அப்பணம் எந்த நோக்கத்திற்காகக் கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆவணமும் காண்பிக்க வேண்டும். இவை சரியாக இருக்கும் பட்சத்தில் பணம் உரியவரிடம் திருப்பி வழங்கப்படும். 

வழக்குப் பதிவு செய்யப்படாத பறிமுதல்கள் அதிகபட்சம் தேர்தல் முடிந்த 7 நாட்களில் திரும்ப பெறுவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.  வழக்குப் பதிவு செய்யப்பட்ட பறிமுதல்கள் முறையான விசாரணைக்குப் பிறகு, தேர்தல் விதிமுறையை மீறவில்லை எனத் தெரியவரும் பட்சத்தில் உரியவரிடம் திருப்பி செலுத்தப்படும்.

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader