ரயிலில் குழந்தையுடன் தரையில் அமர்ந்து இருக்கும் தாயின் வைரல் புகைப்படம்.. எங்கு நிகழ்ந்தது ?

செல்போன் பயன்படுத்தியவாறு இளம்பெண்கள் பலர் இருக்கையில் அமர்ந்திருக்க கைக்குழந்தை உடன் தாய் ஒருவர் அமர்வதற்கு இருக்கை இல்லாமல் தரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.
” சீட்டில் இருப்பது ஆணாக இருந்திருந்தால் நீ தரையில் அமர்ந்திருக்க முடியாது ” என அந்த தாயின் அருகில் ஆண் ஒருவர் அமர்ந்து இருந்தால் இருக்கையை அளித்து இருப்பார் என்கிற அர்த்தத்தில் தமிழ் சமூக வலைதள பக்கங்களில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாசகர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
எங்கு நிகழ்ந்தது ?
2021 அக்டோபர் 24-ம் தேதி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மெட்ரோ ரயில் பயணத்தின் போது கைக்குழந்தையுடன் ஏறிய தாய் இருக்கைகள் நிரம்பி இருந்ததால், குழந்தையுடன் நின்று கொண்டு பயணிக்க முடியாது என்ற காரணத்தினால் கீழே அமர்ந்து இருக்கிறார். ஆனால், கையில் செல்போன் உடன் இருக்கையில் அமர்ந்து இருந்த யாரும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதமே ஹைதராபாத் மெட்ரோ ரயிலில் குழந்தை உடன் அமர்ந்து இருக்கும் தாயின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளம் மற்றும் தெலுங்கு செய்திகளில் வெளியாகி இருக்கிறது.
This is the reality of humanity#Hyderabad #HyderabadMetro pic.twitter.com/DCrELfIyio
— Ch.M.NAIDU (@chmnaidu) October 25, 2021
வீடியோவில், குழந்தை உடன் அமர்ந்து இருக்கும் தாயின் அருகே மட்டுமின்றி எதிரே உள்ள இருக்கையிலும் பெண்கள் அமர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் கதவிற்கு அருகே உள்ள இருக்கையில் ஆண்களும் கூட வரிசையாக அமர்ந்து இருப்பதை காண முடிகிறது. இப்படி இருக்கையில் அமர்ந்து இருந்த யாருமே குழந்தை உடன் ஒரு தாய் கீழே அமர்ந்து இருப்பதை பார்த்து இடமளிக்க முன்வரவில்லை என்பதால் அதை ஒருவர் வீடியோ எடுக்க சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.