ம.பியில் போலிச் செய்தியால் முஸ்லீம் குடும்பத்தின் மீது கொடூர தாக்குதல் !

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராமநவமியை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது கார்கோன் பகுதியில் வன்முறை வெடித்து வீடுகள் சூறையாடப்பட்டன. சில கும்பல்கள் வன்முறையில் ஈடுபட்ட வீடியோக்கள் ஊடகங்களில் வெளியாகியது.
இந்நிலையில், ஏப்ரல் 11-ம் தேதி இரவு முன்னணி நாளிதழ் ஒன்று அதன் சமூக ஊடக பக்கத்தில், கலகக்காரர்கள் கார்கோனின் புறநகரில் தஞ்சம் புகுந்ததாக ஓர் செய்தியை வெளியிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ஒன்று கார்கோனில் இருந்து 8 கி.மீ தொலைவில் இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய குக்டல் கிராமத்தில் வசித்து வந்த அப்துல் ஹமீது கண்பார்வையற்ற முஸ்லீம் நபரின் குடும்பத்தை தாக்கியுள்ளனர்.
.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் குக்டல் கிராமத்தில் 4 முஸ்லீம் குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். அப்துல் ஹமீது தனது மனைவி 2 மகன்கள் மற்றும் மகளுடன் அங்கு வசித்து வருகிறார்.
.
” கலகக்காரர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எங்கள் வீட்டிற்குள் கிராம மக்கள் திடீரென புகுந்து சூறையாடியுள்ளனர். கற்களை வீசி தாக்கியுள்ளனர். வீட்டில் யாரும் இல்லை எனக் கூறுவதை கேட்க மறுத்தும் வீட்டை சூறையாடியதாக ” அப்துல் ஹமீது தெரிவித்து இருக்கிறார்.
.
இந்த தாக்குதலால் அப்துல் ஹமீது, அவரது மகன் மற்றும் மருமகன் படுகாயமடைந்து உள்ளனர். இதையடுத்து, போலீசார் வந்த பிறகே அப்துல் ஹமீது குடும்பம் காப்பாற்றப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட 15 பேரில் 6 பேரை போலீசார் கைது உள்ளனர்.
.
இதை விசாரிக்க களத்திற்கு சென்ற இந்தியா டுடேவினரிடம், ” முஸ்லீம் நபரின் வீட்டில் கலகக்காரர்கள் தஞ்சம் புகுந்து இருப்பதாக எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆனால், யார் பேசியது என எங்களுக்கு தெரியாது” என்று பல்ராம் ராஜ்புத் என்பவர் தெரிவித்து இருக்கிறார். இவரது பெயரும் புகாரில் முதன்மையாக உள்ளது. இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அவரின் அருகே இருந்த நபர், ” நாங்கள் அங்கு யாரையும் பார்க்கவில்லை. ஒருவேளை அங்கிருந்து அவர்கள் தப்பித்து இருக்கக்கூடும் ” எனக் கூறி இருக்கிறார்.
.
ராமநவமியை முன்னிட்டு பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலத்தின் போது வன்முறை சம்பவங்கள், கலவரங்கள் நிகழ்ந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில், ஒரு போலியான செய்தியால் கண்பார்வையற்ற முஸ்லீம் ஒருவரின் குடும்பம் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டு உள்ளது.