ஒன்றிய அரசின் MSME பெயரில் மோசடி: கைதான முத்துராமனை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்.. விரிவான தகவல் !

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன ப்ரமோஷன் கவுன்சில் எனும் பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒன்றிய அரசின் இலச்சினை மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களைச் சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களின் மூலம் கடன் பெற்றுத் தருவதாகவும் அரசு அமைப்பில் பொறுப்புகள் வாங்கி  தருவதாகவும் கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவ்வமைப்பின் தேசிய தலைவர் முத்துராமன் மற்றும் செயலாளர் துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் தமிழ்நாடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

MSME என்றால் என்ன ? 

ஒரு தொழிலின் இயந்திர தளவாடங்களின் முதலீட்டுத் தொகையினை அடிப்படையாகக் கொண்டு சிறு (Micro) குறு (Small) மற்றும் நடுத்தர (Medium) தொழில் நிறுவனம் என வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவான முதலீடு கொண்ட நிறுவனத்தைச் சிறு நிறுவனம் என்றும், ரூ.10 கோடிக்கு மிகாமல் இருப்பின் குறு நிறுவனம் என்றும், ரூ.50 கோடிக்கு மிகாமல் இருப்பின் நடுத்தர நிறுவனம் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்நிறுவனங்களை நிர்வகிக்க, ஊக்குவிக்க, கடன் உதவி அளிக்கத் தனி அமைச்சரகமும் செயல்படுகிறது. தற்போது ஒன்றிய சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சராக நாராயண் டி.ரானே உள்ளார். 

MSME Promotion Council : 

இந்நிலையில் ‘MSME Promotion Council’ என்னும் அமைப்பு கடந்த செப்டம்பர் மாதம் சென்னையில் ‘எம்.எஸ்.எம்.இ. பிசினஸ் ஸ்கேல்-அப் உச்சி மாநாடு’ ஒன்றை நடத்தியதாக ‘இந்து தமிழ் திசையில்’ கடந்த செப்டம்பர் 11ம் தேதி செய்தி வெளியாகியுள்ளது.  அச்செய்தியில் ‘எம்எஸ்எம்இ மத்திய அமைச்சர் நாராயண் டி.ரானே உரையாற்றும்போது, எம்.எஸ்.எம்.இ. துறையை மேம்படுத்துவதற்கான கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டினார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அச்செய்தியில் உள்ள குழு புகைப்படத்தில் ஒன்றிய அமைச்சர் இல்லை. 

அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.முத்துராமன், செயலாளர் துஷ்யந்த் யாதவ் தமிழ்நாடு தலைவர் எம்.வி.சவுத்ரி முதலானோர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அதில் எடுக்கப்பட்ட வீடியோ அவர்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர் நாராயண் டி.ரானே மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்பட்ட பேனர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ஒன்றிய அமைச்சர் வருகை தந்ததற்கான எந்த பதிவுகளும் இல்லை.

இதேபோல் ‘Business Standard’ தளத்திலும் செப்டம்பர் 5ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடக்கத்திலேயே ‘Sponsored Content’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செய்தியின் கடைசியில் ‘மேலே உள்ள செய்தி NewsVoir வழங்கியது. அதன் உள்ளடக்கத்திற்கு ANI எந்த வகையிலும் பொறுப்பாகாது’ என்றுள்ளது. அதேபோல் ‘இந்த செய்தி உருவாக்குவதில் Business Standard பத்திரிகையாளர் ஈடுபடவில்லை’ என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ANI வெளியிட்ட செய்தியிலும் NewsVoir வழங்கிய செய்தி என்றுதான் கூறப்பட்டுள்ளது.

NewsVoir செய்தியில் ‘source’ என முத்துராமனின் MSME Promotion Council இணையதளத்தையேக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி செய்தியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்காமல் அடுத்தடுத்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

MSME Promotion Council-லின் டிவிட்டர் பக்கத்தில் மோடியும் முத்துராமனும் அமர்ந்திருப்பது போன்ற படம் பதிவிடப்பட்டுள்ளது. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. மேலும் MSME அமைச்சருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் முத்துராமன் பதிவிட்டுள்ளார். அப்படம் முத்துராமன் நடத்திய நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது அல்ல. அமைச்சர் வேறொரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவரை சந்தித்து முத்துராமன் எடுத்துக் கொண்டதாகும். 

ஆனால், 2022 செப்டம்பரில் முத்துராமன் ஒன்றிய அமைச்சர் நாராயண் டி.ரானே அவர்களை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அவரது இணையதளத்தில் கிடைத்தது. அதில், அவரது கையில் “Online MSME Awareness Campaign “ என்றும், அவரது புகைப்படம் மற்றும் MSMEPC  என இடம்பெற்ற பலகை இடம்பெற்றுள்ளது. 

மேலும் MSME Promotion Council-லின் இணைய தளத்திலும் பிரதமர், ஒன்றிய அமைச்சர், G20 இலச்சினை ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தளத்தினை பார்ப்பவர் அரசின் அதிகாரப்பூர்வ தளம் என நம்பும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தின் பெயரில், அரசு இணையதளம் போல் காண்பித்துக் கொள்வதும் சட்டத்திற்கு எதிரானதாகும். 

பாஜக வட்டாரத்தில் நடந்தது : 

முன்னதாக முத்துராமன் MSME Promotion Council என்கிற பெயரில் ஒன்றிய அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணத்தைப் வாங்கி ஏமாற்றுவதாக, தமிழ்நாடு பாஜக தொழில்பிரிவு தலைவர் கோவர்த்தனன் 2022, அக்டோபர் மாதம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் MSME Promotion Council பெயரில் ஒன்றிய அர‌சி‌ன் அங்கீகாரம் பெற்ற ஆணையம் இருப்பதாக தெரியவில்லை என சில மாதங்களுக்கு முன்னர் பாஜக பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் துரைப்பாண்டியன் கோபால் சாமியிடம் கூறியதாக டிவிட்டரில் தற்போது பதிவு செய்துள்ளார்.

ஆனால், அந்த புகாருக்கு பிறகும் பாஜகவில் உள்ள நமீதாவின் கணவர் சவுத்ரி முத்துராமனுடன் நெருக்கமாகவும் MSME Promotion Council-லில் மாநில அளவிலான பொறுப்பிலும் இருந்துள்ளார். பாஜக ஊடக பிரிவைச் சேர்ந்த மஞ்சுநாத் அவ்வமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 

Twitter link

அதுமட்டுமின்றி 2023, செப்டம்பர் மாதம் ஒன்றிய அரசு சார்பில் மதுரையில் நடைபெற்ற விஸ்வகர்மா தொடக்க விழாவிலும் முத்துராமன் கலந்து கொண்டுள்ளார். அதில் ஒன்றிய  இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேலும் கலந்து கொண்டு இருவரும் அருகருகே விழா மேடையில் அமர்ந்து உள்ளனர். அந்நிகழ்ச்சியில், பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி, பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

MSME Export Promotion Council : 

‘MSME Export Promotion Council’ என்னும் அமைப்பை MSME அமைச்சகம் 2018ம் ஆண்டு தொடங்கியது (MSME Promotion Council கிடையாது). ஆனால், இவ்வமைப்பு மக்களைத் தவறாக வழி நடத்தியது மற்றும் MSME பெயரைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக அதற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழைத் திரும்பப்பெறுவதாக அவ்வமைச்சகம் 2020ல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இப்படி தன்னிச்சையாக உருவாக்கிய ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, தன்னை அரசு அமைப்பின் பிரதிநிதியாக வெளியே காட்டிவந்த முத்துராமன் மீது சேலம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த கோபால்சாமி என்பவர் மோசடி புகார் அளித்தார். 

அதில், MSME அமைப்பில் தனக்குப் பொறுப்பு வழங்குவதாகக் கூறி ரூ.50 லட்சம் பெற்று தன்னை ஏமாற்றியதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அவ்வமைப்பின் தேசிய தலைவர் மற்றும் செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்து சூரமங்கலம் காவல் துறை கைது செய்துள்ளது. மேலும், அவ்வமைப்பின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்த நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் பாஜக-வின் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மஞ்சுநாத் ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதில், மஞ்சுநாத்தை நவம்பர் 8ம் தேதி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளனர். 

முத்துராமனின் ஜாமீனுக்கு பாஜக வழக்கறிஞர் ஆஜர் : 

இதற்கிடையில் முத்துராமனுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு ஜாமீனும் பெறப்பட்டிருக்கிறது. இதில் முத்துராமன் தரப்பில் பால் கனகராஜ் என்ற வழக்கறிஞர் ஆஜராகியுள்ளார். இவர் பாஜக மாநில துணை தலைவராக உள்ளார்.

மேலும் இவர் ஒன்றிய அரசின் சட்ட விவகாரங்கள் துறையின் Senior Panel Counsel-லில் உள்ளார். அதுமட்டுமின்றி ஒன்றிய அரசின் கீழ் இயங்கக்கூடிய ‘Container Corporation of India’-வின் Part-Time Non-Official (Independent) Director பொறுப்பிலும் உள்ளார்.

அரசின் திட்டத்தையும் பெயரையும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஒருவரை ஜாமீனில் எடுக்க அரசு சம்பளம் பெறும் ஒருவர் வழக்கறிஞராக ஆஜராகியது முற்றிலும் முரணாக உள்ளது.

இது குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில் MSME பெயரில் இன்னும் என்னென்ன மோசடிகள் நடைபெற்றுள்ளது, அதில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது இனிதான் தெரிய வரும். 

Links :

மத்திய அரசு நிறுவனம் பெயரில் மோசடி: நடிகை நமீதாவின் கணவர் உட்பட இருவருக்கு காவல்துறை சம்மன்

Court Order

OM-Registrar-of-Companies

R. C. Paul Kanagaraj – legal affiairs 

Board Of Directors – Container Corporation of India 

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader