This article is from Jun 09, 2019

கோவிலில் சிலைகளிடம் அத்துமீறிய இளைஞர் முஜிபுர் ரகுமான் கைது !

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருக்கும் பெண் சிற்பங்களை முத்தமிட்டு சல்லாபம் செய்வது போன்று புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் முஜி ரகுமான் என்ற இளைஞன் பதிவிட்டு இருந்தார். கோவிலில் இருக்கும் பெண் சிலைகளிடம் சல்லாபம் செய்வது போன்ற புகைப்படங்கள் உடன் சில வாசகங்களையும் எழுதி இருந்தது மக்களை வெறுப்படையச் செய்தது.

முஜி ரகுமானின் செயலுக்கு அனைத்து தரப்பு மக்களும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மக்கள் நேரடியாக முஜி ரகுமான் ஃபேஸ்புக் கணக்கில் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால், தன் முகநூலில் இருந்து சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கி இருந்தார்.

முஜி ரகுமான் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அவரை திருச்சி காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் சிலைகளுடன் சல்லாபம் செய்யும் படங்கள் வைரல் ஆகி கண்டனங்களை பெற்றதால், திருச்சி மாநகர ஆணையர் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில், இத்தகைய செயலைச் செய்தது மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் என தெரியவந்தது. முஜிபுர் ரகுமான் திருச்சி கல்லுக்குழியில் உள்ள தன் சகோதரி வீட்டில் வசித்து வருகிறார் என்பதை அறிந்த காவல்துறையினர் அவரின் மீது வழக்குப் பதிவு செய்த உடன் கைது செய்து மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

update :

முஜிபுர் ரகுமான் ஜூன் 7-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில், முகநூலில் பதிவிட்ட புகைப்படங்கள் தஞ்சைப் பெரிய கோவிலில் எடுத்ததாக வைரல் ஆகியதாகவும், ஆனால், அந்த சிலைகள் தஞ்சை ராஜா சரபோஜி அரண்மனையில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் எனவும் குறிப்பிட்டு உள்ளார். மேலும், பிரச்சனை ஆகக் கூடாது என தனது போஸ்களை நீக்கியதாக குறிப்பிட்டு உள்ளார். இந்து மக்களின் மனம் புண்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

அவர் கூறியது போன்று, முஜிபுர் ரகுமான் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சிலைகள் ராஜா சரபோஜி அரண்மையில் இருப்பதை உறுதி செய்ய முடிந்துள்ளது. தனது செயலால் மற்றவர்கள் மனம் புண்பட்டதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார் முஜிபுர் ரகுமான்.

http://thanjavur.info/royal-palace-museum-thanjavur/

Please complete the required fields.




Back to top button
loader