இப்போ முரசொலி வாங்குங்க, முன்பு நமது அம்மாவிற்கு விளம்பரம்! காட்சிகள் மாறுமா ?

தமிழகத்தின் ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள பொது நூலகங்களில் முரசொலி மற்றும் தினகரன் நாளிதழ் வாங்குவது கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு ஒன்று எழுந்து உள்ளது.

Advertisement

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலிக்கு ஒரு வருட சந்தாவாக ரூ.1880 உடனே காசோலை வழியாக செலுத்தி நாளிதழ்களை வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்தும் சிவகங்கை உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) அனுப்பிய கடிதமும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நூலகங்களில் தினகரன் நாளிதழையும் குறிப்பிட்ட கடிதமும் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

2021 மே 27-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அவர்களின் காணொளிக்காட்சியில் நூலகங்களில் தினசரி 3 நாளிதழ்கள் வாங்க வேண்டும் என தெரிவித்த அறிவுரையின்படி, சிவகங்கை உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சண்முகம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தரப்பில் விசாரிக்கையில், கடிதம் உண்மை என்ற தகவலும், வட்டார வளர்ச்சி அலுவலர் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதமும் நமக்கு கிடைத்தது.

Advertisement

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் அவர்களின் காணொளிக்காட்சியில், அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள நூலகங்களில் 01.6.2021 முதல் தினசரி 3 நாளிதழ்கள் தவறாமல் வாங்கி பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கட்சி சார்ந்த ஒரு நாளிதழுக்கு ஆண்டு சந்தா கட்டும்படியும், மீதமுள்ள 2 நாளிதழ்களை உள்ளூர் முகவரிடம் பெற்று பயன்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. இந்த 3 நாளிதழ்களில் முரசொலி, தினகரன் போன்ற திமுக கட்சியின் நாளிதழ் மற்றும் அக்கட்சியினரால் நடத்தப்படும் நாளிதழ்களை வாங்க உதவி இயக்குநர்கள் தெரிவித்து இருப்பது ஏற்புடையது அல்ல.

அதிமுக ஆட்சியில், ” மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு விழாவிற்கு 19.07.2018 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி.K.பழனிசாமி அவர்களையும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களையும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக வரவேற்றமைக்கு காலைக்கதிர் மற்றும் நமது அம்மா நாளிதழில் வெளியிட்டமைக்கு விளம்பர கட்டணம் ரூ.25,200/ மற்றும் நமது அம்மா நாளிதழுக்கு ரூ.15,750/ வழங்க மன்றத்தின் அனுமதி வேண்டப்படுகிறது ” என மேட்டூர் நகராட்சி மன்ற தீர்மானத்திற்கு அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்தது.

” நான் எழுதிய புத்தகங்களை எந்த அழுத்தம் வந்தாலும் அரசு சார்பில் வாங்கக் கூடாது ” என தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு செய்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். அது மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.

கட்சி சார்ந்த நாளிதழை வாங்க அரசாணைகள் ஏதும் வழங்கப்படவில்லை. எனினும், ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சார்ந்த நாளிதழ்களை வாங்கவும், விளம்பரம் கொடுக்கவும் அரசு அதிகாரிகளின் உத்தரவுகள் இருக்கவே செய்கின்றன. இந்த நடைமுறையில் சார்பு நிலை இல்லாமல் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button