முஸ்லீம் மாணவிகள் மீது தண்ணீரை ஊற்றுவதாக பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பர்தா அணிந்து செல்லும் முஸ்லீம் மாணவிகள் மீது தண்ணீரை ஊற்றி துரத்துவதாகவும், அப்படி செய்யும் மாணவர்கள் தமிழில் பேசுவதாகவும் ஓர் வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
2019-ல் முஸ்லீம் மாணவிகள் மீது ஆர்எஸ்எஸ் ஆதரவு மாணவர்கள் சேற்றை அள்ளி வீசுவதாக இதே வீடியோ இந்திய அளவில் வைரல் செய்யப்பட்டது. அப்போதே இவ்வீடியோ குறித்த உண்மையை விரிவான கட்டுரையாக வெளியிட்டு இருந்தோம்.
மேலும் படிக்க : முஸ்லீம் மாணவிகள் மீது ஹிந்துக்கள் சேற்றை அள்ளி வீசியதாக வதந்தி.
2019-ல் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் சீனியர் மாணவர்கள் முஸ்லீம் மாணவிகளுக்கு முன்பு பிற மாணவிகள் மற்றும் மாணவர்கள் மீதும் சேற்று நீரை அள்ளி வீசும் காட்சிகள் பதிவிடப்பட்டுள்ளன. அங்கு ஜூனியர் மாணவர்கள், மாணவிகள் என அனைவரின் மீதும் ராக்கிங் கொடூரமாக நடைபெற்றது செய்திகளிலும் வெளியாகியது.
3 ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை கல்லூரி ஒன்றில் ஜூனியர் மாணவர்கள், மாணவிகள் மீது சீனியர் சேற்றை அள்ளி வீசி ராக்கிங் செய்த அதிர்ச்சி வீடியோ தற்போது மீண்டும் இங்கு தவறாக வைரலாகி வருகிறது.