This article is from Aug 16, 2020

விநாயகர் சிலையை உடைத்த முஸ்லீம் பெண்| நடவடிக்கை எடுத்த பக்ரைன் போலீஸ்.

ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதூர்த்தி வரவுள்ள நிலையில் கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை புர்கா அணிந்த முஸ்லீம் பெண் உடைத்து நாசம் செய்யும் வீடியோ காட்சி வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டது.

வீடியோவில், சிலைகளை உடைக்கும் பெண் பேசுவதை வைத்து பார்க்கையில் சம்பவம் நிகழ்ந்தது இந்தியா இல்லை என புரிந்து கொள்ள முடிந்தது. இது குறித்து தேடுகையில், இச்சம்பவம் நிகழ்ந்தது பக்ரைன் நாட்டில் என தெரிந்து கொள்ள முடிந்தது.

Twitter link | archive link

” சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோ தொடர்பாக, 54 வயதான பெண் ஒருவர் வேண்டுமென்றே ஜூஃபேரில் உள்ள ஒரு கடையை சேதப்படுத்தியதாகவும், மத சிலைகளை உடைத்ததற்காகவும் அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு கொண்டு செல்ல சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன ” என policemc.gov இணையத்தில் வெளியாகி உள்ளது.

பக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில், ஜுஃபேரில் உள்ள கடையில் சேதம் செய்த 54 வயது பெண் மீது போலீசால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archive link 

இந்த சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த பக்ரைன் போலீசிற்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றன. அதேநேரத்தில், இந்த சம்பவம் எங்கு நிகழ்ந்தது எனத் தெரியாமல், சில பதிவுகளில் இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பப்பட்டு வருகிறது. பிற மதங்களை அவமதிக்கும் செயல்களை செய்தது யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Please complete the required fields.




Back to top button
loader