இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என்றாரா சீமான் ?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்போடு ஒற்றுமைப்படுத்தி பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசியல் களத்திலும், சமூக வலைதளங்களிலும் எழுப்பப்படுவதுண்டு. அதை சீமானும் மறுத்து பதிலடி கொடுப்பதை பார்த்திருக்கலாம்.
இந்நிலையில், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் என சீமான் பேசியதாக ஏபிபி நாடு சேனல் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி அர்ஜுன் சம்பத் முன்பு கூறியது போல் சீமான் அவர்கள் பக்கம் செல்வதாக சமூக வலைதளங்களில் கமெண்ட்கள் பல குவிந்து வருகிறது.
அக்டோபர் 16-ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் பனைச்சந்தைத் திருவிழாவின் செய்தியாளர் சந்திப்பின் போது(23.22 நிமிடம்) பேசிய சீமான், ” நாங்கள் தமிழர்கள் எங்கள் சமயம் வேறு, வழிபாட்டு முறை வேறு, எங்கள் தெய்வங்கள் வேறு, எங்கள் சமயமே வேறு. அதில் உறுதியாக இருக்கிறோம். நான் தோற்கிறேன், ஜெய்கிறேன் பிரச்சனை இல்லை, மீட்டெடுக்கிறது வந்தால் எனது சமயம், எனது மெய்யியல் கோட்பாடு என எல்லாத்தையும் சேர்த்து தான் மீட்டெடுக்கனும். அதில், நாங்கள் சைவர்கள்.
என் மகனை வடபழனி முருகன் கோவிலுக்கு கூட்டிட்டு போன போது, என்ன கோத்திரம் எனக் கேட்டார் குருமார். நான் சிவ கோத்திரம் எனச் சொன்னோம். ஏனா, நாங்கள் சிவசமயம். எங்க அப்பா உடைய சொத்து பத்திரம் இருக்கு, நீங்கள் வாங்க வீட்டில் காட்டுறேன். அதில் சிவ கோத்திரம் என எழுதி இருக்கு. இன்னைக்கு as per hindu law- னு எழுதுறீங்க. அன்னைக்கு எங்க சிவசமயம் என்று தான் எழுதி இருக்கு. எங்கள் சமயம் சிவனை வழிபடுகின்ற சிவ சமயம், முருகனை வழிபடுகின்ற சைவம், மாயோனை வழிபடுகின்ற வைணவம். வைணவம் என்பதை நாங்கள் மாலியம் என தூய தமிழில் சொல்கிறோம். இப்படி சமயங்கள் இருந்து இருக்கிறது.
வெள்ளைக்காரன் வில்லியம் ஜோன்ஸ் போட்ட கையெழுத்தில் பெளத்தன், சீக்கியன், சைவம், பார்சி என நாங்கள் இந்துவாக கருதப்படுகிறோம். சரித்திரப்படி நாங்கள் இந்து இல்லை. வெள்ளைக்காரன் போட்ட சட்டப்படி இந்து. அதை நான் ஏற்கவில்லை எதிர்க்கிறேன் என்கிறேன்.
தமிழன் இந்துவே இல்லையே. கிறிஸ்தவமும், இஸ்லாமும் தமிழன் சமயமே இல்லையே. ஒன்று ஐரோப்பிய மதம், இன்னொன்று அரேபிய மதம். என்னுடைய சமயம் சைவம், மாலியம், சிவசமயம். அதைத் தெரியாமல் நீங்கள் வந்து மீளுவோம் என்றால், மரச்செக்கிற்கு வருவது போன்று திருப்பி வா. சீனியை விட்டுட்டு கருப்பட்டிக்கு வருவது போன்று வந்திரு. அதுக்கு தான் கூப்பிடுகிறேன் ” எனப் பேசி இருக்கிறார்.