முஸ்லீம்களையும், கொரோனாவையும் தொடர்புப்படுத்திய போலிச் செய்திகளின் தொகுப்பு !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை விட மதம் சார்ந்த வதந்திச் செய்திகள் அதிகம் பரவி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்கள் கொரோனா வைரசை பரப்பும் முயற்சியில் இருப்பதாக பல்வேறு தவறான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டன. அப்படி வைரலான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் அமைந்த செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
செய்தி 1 :
முஸ்லீம்கள் மசூதிகளில் தட்டுகள், ஸ்பூன்கள் போன்றவை எச்சில் செய்து கொரோனா வைரசை பரப்புவதாக வீடியோ ஒன்று வைரலாகியது. ஆனால், அவ்வீடியோ 2018-ல் வெளியான போஹராஸ் சமுதாய மக்கள் ஒன்றாக உணவு உண்ணும் முறை என ஆதாரத்துடன் நிரூபித்து இருந்தோம். அதேபோல், பீகார் மாநிலத்தில் அயல்நாட்டில் இருந்து வந்த முஸ்லீம்கள் கொரோனா பாதிப்புடன் மசூதியில் தலைமறைவாகி இருந்ததாக வெளியான தகவல்களும் தவறானவை என விரிவாக வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : முஸ்லீம்கள் எச்சில் மூலம் கொரோனாவை பரப்புவதாக பரவும் தவறான வீடியோ!
செய்தி 2 :
உணவகத்தில் பார்சல் கட்டும் முஸ்லீம் ஊழியர் உணவு பாக்கெட்டில் வாய் வைத்து ஊதி கொரோனா வைரசை பரப்புவதாக ஓர் வீடியோ இந்திய அளவில் வைரலாகியது. ஆனால், அந்த வீடியோ 2019 மே மாதமே மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகள் வரை வைரலாகி இருந்தது என்பதே உண்மை.
விரிவாக படிக்க : உணவு பாக்கெட்டில் வைரசைப் பரப்புவதாக வைரலாகும் வீடியோ ?| உண்மை என்ன ?
செய்தி 3 :
முஸ்லீம்கள் கூட்டமாய் தும்மல் மூலம் கொரோனா வைரசை பரப்புவதற்கு பயிற்சி செய்வதாக ஓர் வீடியோ வைரலாகி முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு வித்திட்டது. ஆனால், அந்த வீடியோ இந்தியாவில் கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே வைரலான வீடியோ என்றும், அவர்கள் சூபிசம் வழிபாட்டு முறையை மேற்கொள்கிறார்கள் என்றும் விரிவாக வெளியிட்டு இருந்தோம்.
விரிவாக படிக்க : முஸ்லீம்கள் தும்மல் மூலம் கொரோனாவை பரப்புவதாக வதந்தி வீடியோ !
செய்தி 4 :
2020 ஏப்ரலில் முஸ்லீம் பழ வியாபாரி பழங்களை எச்சில் செய்து கொரோனா வைரசை பரப்புகிறார் என இந்திய அளவில் ஓர் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவின் தாக்கத்தால் வீடியோவில் இடம்பெற்ற பழ வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டது பிப்ரவரி 16-ம் தேதி என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரிவாக படிக்க : முஸ்லீம் வியாபாரி பழத்தை எச்சில் செய்வதாக வைரலாகும் வீடியோ| எங்கு நிகழ்ந்தது ?
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.